‘காதலும் கடந்து போகும் ‘விமர்சனம்

kadhalum-kadanthu-pogumஅந்தஸ்தில் பெரிய ஆளா இருக்கும்  ஒருத்தருக்கு  கை காட்டுகிற வேலைகளை  முடிக்கிற தளபதி வேலை   விஜய் சேதுபதிக்கு. சிறிய வயதிலிருந்தே சென்னை சென்று வேலை செய்ய வேண்டுமென்று ஆசையோடும் ,கனவோடும் இருக்கிறார் ஐ -டி படிப்பாளியான   மடோனா. ஆனால் பெண்ணை தனியாக மெட்ராஸ்க்கு அனுப்ப முடியாது அதெல்லாம் டேஞ்சர் என்று பெற்றோர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதனால் நூதனமான முறையில் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகிறார் மடோனா.
கதைப்படி  எதிரெதிர் வீட்டில் ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இருக்கிறார்கள் நாயகனும் நாயகியும் ! ( அப்ப ரைட்டு  தான்..)  நிரந்தர வேலைகள் இல்லாத விஜய் சேதுபதி நடு நடுவே  வலுவான  ரவுடியிசமும் பண்ணிவருகிறார். கதைப்படி செய்யாத கொலைக்காக 5 வருஷம் ஜெயிலுக்கும் போகிறார். ஒரு  கட்டத்தில் தவிர்க்க முடியாமல்  கொலை செய்யப்போகும் இடத்தில் சாகிற ரேஞ்சுக்கு சமுத்திர கனியிடம்  குத்துப் பட்டுத் திரும்புகிறார் , பிறகு பிழைத்துக் கொள்கிறார்.  ஆனால்  சமுத்திரகனிக்கு இந்த படத்தில் பெரிய வேலை இல்லைன்னாலும் கருத்து சொல்லாம அடக்கி வாசிச்ச  முதல் படம்னு வரலாற்றில்  இத  சேத்துக்கலாம்.
 படத்தின் க்ளைமேக்ஸ்ல மட்டும்  சார் தெளிவா பயன்பட்டிருக்கிறார்.
காதலா , நட்பா என விளங்காத விஜய் சேதுபதி  – மடோனா நட்பில்  இடைவெளி  விழுந்து சந்திக்காமலே  போய் விடுகிறார்கள்; இவர்கள் சந்தித்தார்களா? காதலை தெரிவிக்க முடிந்ததா?  சந்திக்க இயலாமலே போய் விட்டதா? என்ற  “சின்ன நாட் “எடுத்து கையாண்டிருக்கிறார் சூது கவ்வும்  நலன் குமாரசாமி. ஹீரோவின் டிரைவரா வரும்  மணி கண்டன்  “டச்சிங்”கான  பாத்திரத்தில்  வருகிறார். கார்த்திக்கின் பொன்னான நிமிடங்கள் என்ற குறும்படத்தால் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் இவர்.  சந்தோஷ் நாராயணன்தான்  இசை. ஓரளவு பரவாயில்லை ரகம் , இன்னும் ஸ்கோரிங் அவசியமே!

எஸ்கிமோ மனிதர்கள் நாயை கட்டிப் பிடித்து தூங்கும்” குளிருக்கு இதமான”  விஷயங்கள் இங்கும் இருக்கிறதா? என்ற நெளிவு  தருகிற சமாச்சாரம் சுடுகிற  எதார்த்தம்  ?! துவைச்ச துணிய இஸ்திரி  போட்ட கணக்கா  பழைய நாயகிகளை நெறைய  கலர் பென்சில்ல வரைஞ்சி  கொண்டாந்து “கைப்புள்ள பாத்துக்கோடா ஹீரோயின் ” என உசுப்பேத்தாமல்    ” லவ் அட் பர்ஸ்ட் சைட்  ” கணக்கா இப்போ பூத்த ரோஜாவா  இருக்கும்  மடோனாவிடம் கொள்ளை அழகு, மிகையில்லாத மீட்டர் நடிப்பு. பிரேமம் என்ற மலையாள படத்தில் செலின் கதாபாத்திரத்தில் இளசுகள் இதயத்தில் ஏற்கனவே சம்மணமிட்டு அமர்ந்தவர் தான் இந்த மடோனா .

அழுக்கு பையன லவ் பண்ணுமா? பண்ணாதா?-ன்னு ஒரு எதிபார்ப்பை ஏத்தி விட்டு கடைசில  காதலரையும், ரசிகர்களையும்  அம்போன்னு விட்டிருக்கார் நலன்குமார சாமி  நானும்  ரெளடி  தான் ,  சேதுபதி போன்ற  அதிரடி வெற்றிகள்  நாயகனுக்கு இருப்பதால் காதலும் கடந்து போகும் ” சுமார் என்றாலும்   ஹாட்ரிக்  என மவுத் டாக்  கிளம்பியுள்ளதால்  படம் ஜஸ்ட் எஸ்கேப்.
ட்ரெண்டை பிடித்து கதை சொன்ன விதம் சிக்ஸர் கேட்ச் மாதிரி  இருப்பதால் சிறப்பான பொழுது போக்கு தரும் ஆடியன்ஸ் படமிது! நம்ம கிட்ட பெரிசா  எதிர் பாக்கறாங்களோ ?என்ற வடிவேல் காமெடி அப்பப்போ  இயக்குநருக்கு வந்து போகும். இந்த  காதலும் கடந்து போகும்  இறுதியில் மிதமான அளவிலாவது வெற்றியோடு நம்மை  கடந்து போகும்.