‘காந்தாரா’ விமர்சனம்

அடிதடி வெட்டு குத்து வில்லன்கள் பழிவாங்கல் குடும்ப நாடகங்கள் போன்றவற்றைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு முற்றிலும்புதிய அனுபவமாக வந்துள்ள படம் தான் ‘காந்தாரா’.

எளிய மக்களுக்கும் அதிகார சக்திக்கும் உள்ள போராட்டம் தான் கதை.வனப்பகுதி மக்களுக்கு மன்னரால் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அவரது வாரிசுகள் கைப்பற்ற முயல்கிறார்கள். வனப்பகுதி ஆதி குடிகளுக்கும் அவர்களை ஏமாற்றும் ராஜ குடும்ப வாரிசுகளுக்கும் இடையில் நடக்கும் போர் தான் கதை. இதில் மன்னர் வழிவந்தவர்கள் ஜெயிக்கிறார்களா?மண்ணின் மைந்தர்கள் ஜெயிக்கிறார்களா என்பது தான் படம். ஆனால் அதற்குள் காவல் தெய்வ வழிபாடு, வனப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகள் ,நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள், அதிகார வரம்புக்குள் வனம் வந்த பிறகு நடக்கும் கட்டுப்பாடுகள், அதனால் நிகழும் போராட்டங்கள், உரிமைக்கான கேள்விகள், இயற்கைக்கு மனிதனுக்குமான தொடர்பு என அனைத்தையும் இயல்பாகக் கலந்து காட்டியுள்ளது படம். சிறு காவல் தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றி இயல்பாக அழகாக கலந்து கதை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கொஞ்சம் கூட போரடிக்காமல் பிரச்சார தொனி இல்லாமல் கதையையும் சொல்லி காட்சிகளைக் காட்டி நகர்த்துவது இயக்குநரின் திறமை.சமூக அக்கறையோடு திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அதை கமர்ஷியலான ஒரு படமாகவும் மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

இந்த இரண்டரை மணி நேர திரைப்படத்தில் கம்பளா எருமைப்போட்டி,வனப்பகுதி மக்களின் வழிபாடு ,காவல் தெய்வம் ஆவேசங்கள், என அந்த காலத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது படம்.

கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கிற ரிஷப்ஷெட்டி படத்தின் மொத்த எடையைத் தூக்கிச் சுமந்திருக்கிறார். அப்பாவித்தனம், காதல், ஏக்கம், எதிரிகளை துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் என நடிப்பில் பலவண்ண மதிப்பெண் பெறுகிறார். அருள் வந்து ஆடும் அந்தக் கடைசி 10 நிமிடங்கள் நடிப்பின் உச்சம்.

கதாநாயகி சப்தமி கவுடா,வனத்துறை அதிகாரி கிஷோர்,அரச பரம்பரை அச்யுத்குமார் என அனைவரும் தேர்ந்த நடிப்பைத்தான் வழங்கி உள்ளார்கள்.

அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு, அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசை, கே. எஃம் பிரகாஷ் பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு போன்றவை படத்திற்குப் பெரும்பலம்.

கன்னடத்தில் இருந்து மொழிமாற்றுப் படமாக வந்திருந்தாலும் அந்த உணர்வு தெரியாமல் இயல்பாக மொழி மாற்றி இருக்கிறார்கள். வசனம் எழுதியவருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

பாரம்பரியம் தொன்மத்தின் நிறத்தைப் படத்தில் காண முடிகிறது. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தான்.