காப்பி அடிக்காதீர்கள்: ‘பரிதாபங்கள்’ குழுவுக்கு பாக்யராஜ் அறிவுரை!

யூ டியூப் சேனலில் ‘பரிதாபங்கள்’ என்கிற சேனல் மிகவும் புகழ் பெற்றது. பலதரப்பட்ட பிரமுகர்களைக் கிண்டல் செய்தும் அவர்கள் மேனரிசங்களை கேலி செய்தும் நாட்டின் நடப்பு நிகழ்ச்சிகளை கேலி செய்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்படி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வாசகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்ற சேனல் அது. அந்த ’பரிதாபங்கள்’ டீமில் , திரையில் தோன்றும் கோபி,சுதாகர் இருவரும் பிரதானமானவர்கள்.

பரிதாபங்கள் குழு திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் தொடக்க விழா நேற்று இரவு க்ரௌன்பிளாஸா ஹோட்டலில் நடந்தது. ஆசியாவில் அதிக பங்குதாரர்களைக் கொண்ட ஒரு தயாரிப்பு நிறுவனமாக பரிதாபங்கள் நிறுவனம் விளங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்து இதுவரை ஆறு கோடி ரூபாய் வசூல் செய்து தயாரிப்பில் காலடி எடுத்து வைக்கிறது. வடிவேல் பேசி புகழ்பெற்ற வசனமான ’பணம் இன்று வரும் நாளை போகும் ’என்கிற அர்த்தத்தில் பேசும் ஹே ’மணி கம் டுடே,கோ டுமாரோ’ என்பதை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகிறது

இதற்கான தொடக்க விழாவில் நடிகர் ராதாரவி ,இயக்குநர் பாக்யராஜ் போன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

ராதாரவி பேசும்போது “யூட்யூபில் இந்த பசங்க எல்லாரையும் சிரிக்க வைத்தார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள். சினிமாவிலும் வந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் “என்றவர், ”அந்த ஆறரை கோடி ரூபாய் வசூலானது பெரிய விஷயம். என்னால் அந்த ஆச்சரியத்தை தாங்க முடியவில்லை. அந்த ஆச்சரியத்தில் இன்று இரவு எனக்கு தூக்கம் வராது .” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது “புதிதாக வருபவர்கள் பழைய சட்டையை ஆல்டர் செய்து புதிது போலக்காட்டிவிடுகிறார்கள். ஆனால் புதிய சட்டை தைப்பதில்லை ஆல்டர் செய்தால் அளவு சரியாக இருக்கும் .ஆனால் சட்டை புதிதாக இருக்காது.

அதற்கு மிகவும் உழைக்க வேண்டும் சிந்திக்க வேண்டும் “என்று சூசகமாக காப்பி அடிக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார்.