‘காமி’ விமர்சனம்

விஷ்வக்சென் ,சாந்தினி சவுத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா நடித்துள்ளனர்.வித்யாதர் காகிடா எழுதி இயக்கியுள்ளார். விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் ஸ்வீக்கர் அகஸ்தி . பின்னணி இசை நரேஷ் குமரன். படத்தொகுப்பு ராகவேந்திரா திருன்.
தயாரிப்பாளர் கார்த்திக் சபரீஷ்.

இது ஒரு தெலுங்குப் படம். பொதுவாக வணிக நோக்கிலான தெலுங்குப் படங்களில் மிகை உணர்ச்சி காட்டும் கதாநாயகர்கள், கண்களை உறுத்தும் வண்ண உடைகள், அணியும் கதாபாத்திரங்கள், மீட்டர் தாண்டி ஆவேசமான சண்டைக் காட்சிகள் என்று இருக்கும்.

இவற்றிற்கு இடையே பாகுபலி போல பிரமாண்டப் படங்கள் அவ்வப்போது வந்தாலும் கலாபூர்வமான படங்கள் சில எப்போதாவதுதான் வருவதுண்டு.

தொன்மமும் நவீனமும் நடப்புக் காலமும் கலந்த மாதிரியான ஒரு படைப்பாக வந்துள்ளது தான் காமி திரைப்படம்.உணர்ச்சிபூர்வமான கதையாக இருந்தாலும் இயற்கை சூழ்ந்த காட்சிப் பிரமாண்டமும் இந்தப் படத்தில் இடம்பெற்று நம்மை கவர்கின்றன. வெவ்வேறு விதமான பாத்திரங்களின் கதைகள் நம்மைத் தொட்டுத் தொட்டு தாவித் தாவித் செல்கின்றன. அவற்றை இணைத்து ஒரு கதையோட்டத்தை அமைத்து நம்மை உட்கார வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர்.

நாயகன் சங்கர் ஓர் அகோரியாக இருக்கிறார். அவருக்கு  மனிதத் தொடுகை ஒவ்வாமையாக உள்ளது. இதனால் அவர் அகோரிகள் குழுவில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அவரை ஒரு சபிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். வெளியே சென்று பிராயசித்தம் தேடிக் கொள்ளுமாறு அவர் வெளியேற்றப்படுகிறார். இதற்காக அவர் கேதர் பாபா என்பவரை தேடிச் சென்றால் அவர் இறந்திருக்கிறார்.அங்கே ஒருவர் கொடுத்த குறிப்பால் தான் பயணத்தைத் தொடர்கிறார்.36 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அபூர்வமான மூலிகைக் காளானைக் தேடிச் செல்கிறார்.அவருடன் டாக்டர் ஜான்வி இணைந்து கொள்கிறார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நேர நெருக்கடி அவரைத் துரத்துகிறது. இந்நிலையில் மூலிகையைக் கண்டுபிடித்தாரா? தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் அவர் வெற்றி  பெற்றாரா? படத்தில் இணைக் கதைகளாக விரியும் பாத்திரங்களுக்கும் செயல்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ?போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான்’ காமி ‘படத்தின் கதை.

சங்கர், ஜான்வி இருவரும் தனியே பனி மலைகளில் தேடும்போது ஆபத்தான சூழல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்தக் காளான் மூலிகையைத் தேடித் திரிகிற காட்சிகள் ,நம்மைக் காட்சிப் பிரம்மாண்டத்தில் ஆழ்த்துகின்றன.படிப்பாறைகளில் மேலேறுவது சரிவது விழுவது அடியாழம் செல்வது என காட்சிகள் சிலிர்ப்பூட்டுகின்றன. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கைதிகள் இருவர் வெளியே தப்பிப்பதற்கான போராட்டம் ஒரு இருண்ட உலகத்தைக் காட்டுகிறது. ஆந்திராவில் ஒரு கிராமப் பகுதியில் தாயைப் போல மகளையும் தேவதாசி ஆக்கிட முயலும் காமுகர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு ஒரு தாயும் மகளும் போராடுவது இன்னொரு பக்கம் உணர்ச்சிக் களமாகத் தகிக்கிறது. பால் மாற்று சிகிச்சை முயற்சி செய்யும் மருத்துவ அறிவியல் உலகம் எப்படி மனிதனை ஒரு சோதனைப் பிராணியாக மாற்றுகிறது என்று இன்னொரு பக்கம் காட்சிகள் வருகின்றன.இப்படி அனைத்தையும் இணைத்து இந்தக் கதையை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.யாருக்கு எந்தக் கதையுடன் தொடர்பு என்று சிலவற்றைச் சொல்லியும் சிலவற்றைச் சொல்லாமலும் ஒரு கவிதை போல படம் பார்ப்பவர்களை யூகிக்க வைக்கிறார் இயக்குநர்.

நாயகன் விஸ்வக் கென் , நாயக் சாந்தினி சவுத்ரி இருவரில் நாயகன் பேசாமல் மௌனமாக இருந்து உணர்வுகளைக் கடத்தினால் சாந்தினி நிறைய பேசி உணர்வுகளைக் கடத்துகிறார். அடுத்து துர்காவாக வரும் அபிநயா,துர்காவின் மகள் உமாவாக வரும் ஹரிகா இருவரும் குறைவில்லாத நடிப்பை வழங்கி உள்ளனர்.படம் ஒரு புது வகைமையில் உருவாகி இருப்பதால் அதற்கு ஏற்ற ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார் விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா.ஹரித்துவார்,பனிப்பிரதேசம், அகோரிகள் உலகம்,ஆபத்தான மருத்துவ ஆராய்ச்சிகள் எனதிரையில் விரியும் காட்சிகளுக்காக விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா கேமரா சுழன்று வழக்கம் அல்லாத காட்சிகளைக் கண் முன் நிறுத்துகின்றன.
அதேபோல் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் நரேஷ் குமரன்.

காமி என்பது பயணம் என்கிற பொருள்பட கதை நகருகிறது.படத்தின் பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றும் விடுதலையை, சமாதானத்தை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைத் தேடுகின்றன.

படத்தில் நீளமான வசனங்கள் இல்லை.நறுக்குத்தரித்தாற்போல வசனங்கள் வருகின்றன. படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு வசனம் ஒன்று, சந்தர்ப்பங்கள் எப்படி வரும் என்பதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வருகிற சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வது என்பதை மனிதன் கட்டுப்படுத்த முடியும்.இது ஒரு சாம்பிள்.
படத்தின் திரைக்கதையை இன்னும் வேகப்படுத்தி இருந்தால்,படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்றாலும்,
நிச்சயமாக இந்தப் படம் மொழி தாண்டி ரசிகர்களை உள்ளிழுக்கும் ஒரு புதுமையான படைப்பு எனலாம்.