‘காரி ‘விமர்சனம்

கிராமராஜாவாக வலம் வரும் சசிகுமார் பிரதான வேடமிட்டு நடித்துள்ள படம் ‘காரி’.

‘காரி’ என்பது கருமை நிறம் கொண்ட காளையைக் குறிக்கிறது.

சசிகுமார் உடன் பார்வதி அருண் ,ஜேடி சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் ,அம்மு அபிராமி, நாகி நீடு,கிங்ஸ்லி , போன்றோர் நடித்துள்ளார்கள். ஹேமந்த் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லட்சுமணன் குமார் தயாரித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ளது இந்தப் படம்.

நம்பிக்கை, ஆலயம், ஆன்மீகம் எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை. நம்பிக்கையில் இருந்து தான் வாழும் முறைகள் உருவாகின்றன என்று இப்படத்தில் சொல்ல முயன்று இருக்கிறார்கள் .

ஒரு அந்த ஊரின் கோவில் நிர்வாகம் யாருக்குச் சொந்தம் என்பதில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் கோவில் திருவிழா தடைப்பட்டதால்தான் அந்த ஊர் வறண்டு போனதாக மக்கள் நம்புகிறார்கள். அது மட்டுமல்லாமல் வறண்டு போன ஊரைக் குப்பைக்கிடங்காக மாற்ற அரசு நினைக்கிறது. அதைத் தடுப்பது எப்படி என்று ஊர்க்காரர்கள் யோசிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்தி ஜெயிப்பவர்க்கு கோயில் நிர்வாகம் சொந்தம் என்று முடிவாகிறது.

அந்தப் போட்டி நடந்ததா? யார் ஜெயித்தார்கள்? என்பது தான் காரியின் கதை.

நாட்டில் நடக்கும் எதார்த்தம் என்னவென்றால் கசாப்புக் கடைக்காரன் ஜீவ காருண்யம் பேசுவதும் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்பவர்கள் மாடு துன்புறுத்தப்படுவதாக வேஷம் போடுவதும் நடக்கிறது . ஜல்லிக்கட்டு என்பதை ஏறுதழுவுதல் என்கிற பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்காமல் மாடு துன்புறுத்தப்படுகிறது என்று அதை சிக்கலாக்கி விளம்பரம் தேடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது தான் இந்தப் படம்.

ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை கேட்பவர்கள் மத்தியில்,ஜல்லிக்கட்டின் பின்னணியில் உள்ள பாரம்பரிய நன்மைகள் என்ன ஏறு தழுவுதலால் காளைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம், வாழ்வியல் பயன்களும் என்ன என்று இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அங்கீகாரமும் அதன் மேல் மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தையும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டி ஜல்லிக்கட்டு இயக்கத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கிராமத்து நாயகனான சசிகுமார், இப்படத்தில் சேது என்ற பாத்திரத்தில் வருகிறார். முதல் பாதியில் சென்னைக்காரராகத் தோன்றும் இவர் ,படத்தின் இரண்டாம் பாதியில் கிராமத்தின் இளைஞராக மாறி தன் ஊர், மக்கள் என்று பாடுபடுகிறார்.
தன் தந்தை மரணத்தின் தருவாயில் சொன்ன பிறருக்கு உதவ வேண்டும் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற சொற்கள் மகன் மனதில் பதிந்து அதைப் பின்பற்றும்போது பாத்திரத்திற்கு வலிமை சேர்கிறது.

பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ஒரு கிராமத்துப் பெண்ணாக அவரது நடிப்பு நிறைவு .தான் ஆசையாக வளர்த்த காளை மாட்டை தன் தந்தை பாலாஜி சக்திவேல் விற்றுவிட்டு வரும்போது அடம் பிடித்து அழுது புரண்டு போராட்டம் செய்யும் காட்சிகள் எதார்த்தம் அழகு.

ஸ்டைலான வில்லனாக வரும் ஜேடி சக்கரவர்த்தி நடிப்பில் அசத்துகிறார்.

சசிகுமாரின் அப்பா ஆடுகளம் நரேன், கதாநாயகியின் அப்பா இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சம்யுக்தா போன்றவர்கள் சிறிது நேரம் வந்தாலும் அழுத்தமாகப் பதிகிறார்கள்.

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா.வெளிப்புற காட்சிகளிலும் பாத்திரங்களின் முகபாவனைகளை அழகாகப் பதிவு செய்து இருப்பதிலும் மிளிர்கிறார்.
அடிமாடுகள் வெட்டப்படும் கொலைக்களத்தை அதிர வைக்கும்படி காட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை மக்கள் ஏறுதழுவுதல் என்று தான் பார்க்கிறார்களே தவிர அதில் எந்த துன்புறுத்தல்களும் இல்லை என்று கூறி, இதை எதிர்ப்பவர்கள் செய்யும் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுகிறார் இயக்குநர் ஹேமந்த்.

ஜல்லிக்கட்டு விஷயத்தை நிலவும் மேட்டிமைத்தனத்தையும் அவர் சாடுகிறார்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்கிற செய்தியையும் படத்தில் சொல்லி இருக்கிறார்.
படத்தைப் பிரச்சார பாணியில் சொல்லாமல் தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளார்.

ஒரு கிராமம் சார்ந்த கதையை நவீனத் தன்மையோடு உருவாக்கி இருக்கிறார் ஹேமந்த் .

மொத்தத்தில் இந்தக்காரி அனைவரையும் கவரும் ஜல்லிக்கட்டு காளை.