‘பட்டத்து அரசன்’ விமர்சனம்

லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா , ராஜ்கிரண், ராதிகா, ஆஷிக் ரங்கநாத், துரை சுதாகர், சிங்கம்புலி, ரவி காலே, சத்துரு, ராஜ் ஐயப்பன் ஆகியோர் நடித்துள்ள படம்.
இசை ஜிப்ரான்.

காளையார் கோவிலில் வசிக்கும் ராஜ்கிரண் பெரிய கபடி வீரராகத் திகழ்கிறார். 40 ஆண்டு காலமாக அந்த விளையாட்டில் ராஜாவாக வலம் வருகிறார். அவர் ஊரில் அவருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் .அந்த அளவிற்குப் புகழ் பெற்றவர். அவர் தனது மகன்கள், மருமகள்கள்,மகள், பேரன், பேத்தி என்று கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்.
அவரது
அவரது இரண்டாவது மனைவியின் பேரனான அதர்வாவும் அவரது அம்மா ராதிகாவும் தனியே வசிக்கிறார்கள்.

அந்தக் குடும்பத்தை முதல் மனைவியின் குடும்பம் ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் அதர்வாவோ தாத்தா குடும்பத்துடன் பாசமாக இருக்கிறார் .எப்படியாவது சேர வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கபடிப் போட்டிகளால் ஒரு பழி ராஜ்கிரண் குடும்பத்தின் மீது விழுகிறது .அவர் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப பழியைத் துடைக்க அதர்வா வீராவேசமாகப் புறப்படுகிறார் .சவாலுக்கு சவால் விடுகிறார்.கடைசிக் கட்டத்தில் அந்த குடும்பம் ஒரு பக்கம் அந்த ஊரே ஒரு பக்கமாக நின்று கபடி விளையாடுகிறார்கள். அதர்வா முன் நின்று களமாடியபடி, பழியில் இருந்து குடும்பத்தை மீட்டு அனைவரையும் ஒன்று சேர்க்கிறார் என்பது தான் கதை.

கபடி விளையாட்டு, குடும்பம் பாச உணர்ச்சிகள் ,வீரம் என்று கலந்து கட்டியகதை.

கபடி வீரராக நடித்துள்ள அதர்வா தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் பேச்சிலும் பொருத்தமாக இருக்கிறார்.
அவர் கபடி விளையாட்டில் புகுந்து விளையாடுவதே நம்பும்படியாக இருக்கிறது.காதல் காட்சிகளில் அடக்கித்தான் வாசித்திருக்கிறார். பாச உணர்ச்சிகளைக் காட்டுவதிலும் சபாஷ்.
குறையில்லை நாயகனுக்கு.

தாத்தாவாக வரும் ராஜ்கிரன் பொத்தாரிஎன்ற பாத்திரத்தில் வருகிறார். மூன்று விதமான தோற்றத்தில் வந்து முத்திரை பதிக்கிறார்.

அவர் 70 வயதில் கபடி விளையாடி, பாராட்டை அள்ளுகிறார்.

நாயகி ஆஷிக்கா ரங்கநாத் குடும்பத்து முகம். கபடி வீராங்கனை ஆக வந்து காதல் காட்சிகளிலும் சடுகுடு விளையாடுகிறார்.

ராஜ்கிரணின் மூத்த மகன் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ் அனுபவப்பட்ட நடிகர். அதை நிரூபித்துள்ளார். இளைய மகன் துரை சுதாகர்.அனுபவம் இல்லாத நடிகராக இருந்தாலும் பல படங்களில் நடித்தவரைப் போல் இயல்பாக நடித்து மனதில் பதிக்கிறார்.
சிங்கம் புலி காமெடி செய்தாலும் சில இடங்களில் நெகிழ்வூட்டுகிறார்.

ராஜ்கிரணின் இன்னொரு பேரனாக வரும் ராஜ் ஐயப்பன் பாராட்டும்படி நடித்துள்ளார்.

ராதிகா, சத்துரு, ரவி காலே, பால சரவணன், ஆர் கே சுரேஷ் என, ஏகப்பட்ட பேர் வந்தாலும் அனைவர் முகமும் மனதில் பதிகின்றன.

லோகநாதன் சீனிவாசன் ஒளிப்பதிவில் நிலக்காட்சிகள் கதை மாந்தர்கள் என அனைத்திலும் அதன் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
தஞ்சை மண்ணில் நம்மை உலவ விடும்படியான காட்சிகள் உள்ளன.
கபடிப் போட்டிகளில் உயிரோட்டமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்

ஜிப்ரானின் பாடல்களும் பின்னணி இசையும் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவளிக்கின்றன

கபடி விளையாட்டை வைத்து வெறும் விளையாட்டுப் படமாக இல்லாமல் குடும்ப செண்டிமெண்ட் இணைத்து ஒரு குடும்பப் படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர். சற்குணம் இவ்வளவு நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு ஆணைகட்டி தீனி போடுவது போல் அனைவருக்கும் நடிப்பு வாய்ப்புகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் .

சின்ன சின்ன சறுக்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தோடு இந்தப் படத்தை பார்க்கலாம்.
பட்டத்து அரசன் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையின் தரிசனம்.