‘குஷி’ விமர்சனம்

எப்போதும் இரு துருவ மனங்களின் அசைவுகளும் முரண்பாடுகளும் சுவாரஸ்யம் தருபவை.விஜய் ,ஜோதிகா நடிப்பில் 2000-த்தில் வெளிவந்த ’குஷி’ திரைப்படம் காதலர்கள் இடையே நிலவிய ஆணவச் சிக்கலைப் பற்றிப் பேசியது.  இந்த 2023 இல் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் வந்துள்ள ‘குஷி’ திரைப்படம் எதைப் பற்றிப் பேசுகிறது? பார்ப்போம்.

படத்தின் கதை என்ன? விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் காதலர்கள்.கருத்தொருமித்த காதலர்கள் தான்.திருமணத்திற்குப் பெற்றோரும் ஒப்புக் கொள்கிறார்கள் .ஆனால் ஒரு விஷயத்தில் முரண்பட்டு நிற்கிறார்கள். சமந்தாவின் தந்தை ஒரு பிராமணர் மட்டுமல்ல ஜோதிட விற்பன்னரும் கூட.அவர் காதலர் இருவருக்கும் ஜாதகப்படி தோஷம் இருக்கிறது என்றும் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.ஆனால் விஜய் தேவரகொண்டாவின் தந்தையோ பழுத்த நாத்திகவாதி. அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.அப்படிப் பரிகாரம் சடங்குகள் என்றால் திருமணமே வேண்டாம் என்கிறார்.ஆனால் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் பதிவு மணம் முடிக்கிறார்கள்.

ஆனால் திருமணத்திற்குப்பின்  தம்பதிகளிடம் குழந்தை சம்பந்தமாக பிரச்சினை வெடிக்கிறது.இதற்குத் தனது தந்தை சொன்ன ஜாதகத்திலுள்ள குறைபாடு தான் காரணம் என்று சமந்தா நினைக்கிறார். இருவருக்குள்ளும் சிறு இழையாகக் தோன்றிய இந்த வேறுபாடு பெரும் விரிசலாக விரிகிறது .எனவே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்,பிரிந்து விடுகிறார்கள்.இப்படி ஒரு நட்சத்திரக் தம்பதிகளாக இணைந்தவர்கள் மீண்டும் பிரிந்தால் நம்மால் ஒப்புக் கொள்ள முடியுமா? சேர்ந்தார்களா ?இல்லையா? என்பதுதான் படத்தின் பெரிய கேள்வி .அதை நோக்கிச் செல்வதே மீதிக் கதை.

ஒரு படத்தின் நடிகர்கள் பொருத்தமாக அமைந்து விட்டால் படத்திலு தோன்றும்  பல குறைபாடுகள் கண்ணுக்குத் தெரியாது அதுவும் காதலர்களாக நடிக்கும் அந்த இணை பார்ப்பவர் மனதில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டால் அவர்களே போதும் வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலைக்குப் பார்வையாளர்கள் வந்து விடுவார்கள். அப்படித்தான் இருக்கிறார்கள் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் .அப்படி ஒரு பாத்திரப் பொருத்தம் ,அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் அவர்களுக்கு.

உருகி உருகி தழையத் தழைய அவர்கள் காதலிப்பது பார்ப்பவர்களை ஈர்த்து ரசிக்கச் செய்து விடுகிறது. குறிப்பாக இந்தக் காதல் புறாக்கள் காஷ்மீர் பனிப் பாறைகளிலும் குளிர்ப் பிரதேசங்களிலும் சிறகடித்து பறப்பது பார்வையாளர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி.அதே பறவைகள் கருத்து வேறுபாட்டால் பிரியும்போது பார்ப்பவர்கள் மனமும் மடிந்து விடுகிறது.
விஜய் தேவரகொண்டா தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் நம் மனதிற்கு அருகில் வந்து அமர்ந்து கொள்கிறார். காதலிக்கும் போது உருக்கமும் நெருக்கமும் காட்டுகிற போதும் மனைவியானவுடன் மனைவியின் செயலை வெறுக்கும் போதும், அதே மனைவி பிரிந்த போது அவரை நினைத்து தவிப்பதும்,அவரது இன்மையை நினைத்துப் போராடுவதும் என அத்தனை உணர்ச்சிக் தருணங்களையும் நடிப்பில் காட்டியிருக்கிறார்.

அன்றலர்ந்த மலர் போல் தோற்றத்தில் பனிமலராகக் காட்சி தரும் சமந்தாவின் பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமே என்று ரசிகர்களை நினைக்க வைக்கிறார்.விஜய் தேவரகொண்டா தன்னை விடாமல் துரத்தி விரட்டிக் காதலிக்கும் போது காதல் உணர்வு பொங்க காதலிக்கும் சமந்தா, தன் காதலனை நோக்கும் விதமும் காதலை வெளிப்படுத்தும் இடமும் ரசிக்க வைக்கும் காட்சிகள். இயல்பான நடிப்பால் இதமாகக் கவர்கிறார் சமந்தா.

காதலர்களின் பெற்றோராக வரும் முரளி சர்மா,சச்சின் கேடகெர்,சரண்யா பொன்வண்ணன் ,லட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் வேடத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் முரளியின் கேமரா நம்மைக் காஷ்மீருக்கு அழைத்துச் சென்று கண்களைக் குளுமையாக்குகிறது.காதலர்களான விஜய் தேவரகொண்டா- சமந்தாவைக் காட்டியுள்ள அழகுத் தோற்றங்கள் ரசிகனின் கண்களை மரியாதை செய்பவை.

இசை அமைப்பாளர் ஹேஷம் அப்துல் வகாப் தனது பாடல்கள் மூலம் படத்திற்கு இனிமையோடு இளமை சேர்த்துள்ளார்.பின்னணி இசையில் இழையும் வாத்தியங்களின் ரீங்காரம் இனிய ஒலிச்சித்திரங்கள்.   

எத்தனையோ காதல் கதைகள் படமாக எடுக்கப்பட்டு உள்ளன. இதுவும் ஒரு காதல் கதை தான் என்றாலும் அதைக் கூறி உள்ள விதத்தில் காட்சிப்படுத்தியுள்ள பாணியில் ரசிகர்களுக்கு நிறைவு தருவது போல் இயக்குநர் சிவ நிர்வானா கொடுத்து இருக்கிறார்.அந்த வகையில் ஒரு வணிக ரீதியான காதல் கதையாக இப்படம் ரசிகர்களைக் குஷிப் படுத்தும் எனலாம்.