‘ ரங்கோலி’ விமர்சனம்

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கியுள்ள படம்.ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், , சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் நடித்துள்ளனர்.

சமகாலத்தில் கதை நிகழ்வதாக இருந்தாலும் நமது பள்ளி வயது பால்ய காலத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் படம் ரங்கோலி.

ஆடுகளம் முருகதாஸ் சலவைத் தொழிலாளி. எவ்வளவு உழைத்தாலும் குடும்பத்தின் வறுமையின் அழுக்கை வெளுக்க முடியவில்லை, தரித்திர சுருக்கத்தை மட்டும் அவரால் நிமிர்த்திச் சமன் செய்ய முடியவில்லை. அவரது மகன் ஹமரேஷ். அரசு பள்ளி மாணவன். ஆனால் தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் படிப்பில் தரம் கூடும் என்று முருகதாஸின் மனைவி சாய் ஸ்ரீ நினைக்கிறார். மனைவியின் விருப்பத்தின்படி தனது பொருளாதாரத் தகுதி மீறி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார் .ஆனால் அங்கே இவர் புறக்கணிக்கப்படுகிறார். சக மாணவர்கள் சீண்டுகிறார்கள் ஹமரேசுக்குப் பிடித்த பெண் பிரார்த்தனா இருப்பதால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு படிக்கிறார்.தனியார் பள்ளியில் சேர்த்த பிறகு இவரை அடங்காத ரவுடி போல சித்தரிக்கிறார்கள்பல்வேறு பழிகளைப் போட்டு நெருக்கடி தருகிறார்கள். தனக்குப் பிரியமான மாணவி மூலமும் கெட்ட பெயர் வருகிறது.முடி வு என்ன என்பதுதான் கதை.

இப்படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ததில் மட்டுமல்ல காட்சிகள் நிகழ்விடங்களைத் தேர்வு செய்ததிலும் இயக்குநர் சரியாகச் செய்து வெற்றி பெற்றுள்ளார்.அந்த அளவுக்குப் பின்புலங்கள் பாத்திரங்கள் போல் பேசுகின்றன. பின்புலத்தில் ஒலிக்கும் ஓசைகள் கூட பேசுகின்றன.அந்த வகையில் இயக்குநர் வாலி மோகன்தாஸ் செய் நேர்த்தி காட்டியிருக்கிறார் .பிள்ளைக்கு சூடு போடுவது, டிசி கொடுப்பதாக மிரட்டுவது போன்ற காட்சிகள் திரைக்கதையில் வருவதாக அமைத்து இருக்கும் விதம் அருமை.
படத்தில் வரும் தமிழாசிரியர் ராவணன் கவனிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மருதநாயகம் வெளிப்புறங்களில் , சாலைகளில், ஓடும் வாகனங்களில் எனப் படப்பிடிப்பில் உழைப்பைக் காட்டிக் கவனிக்க வைக்கிறார்.ஆனந்த் மணியின் கலை இயக்கமும், சுந்தர மூர்த்தியின் இசையும் இணைந்து இயக்குநரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளன.

பள்ளி மாணவர்களை மையப்படுத்திய கதை என்றால் என்னவெல்லாம் இருக்குமோ அவை அனைத்தும் இந்த படத்திலும்  உள்ளன. அதே வேளை, கல்வி அரசியல் பற்றியும்  பேசியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில்  நல்ல கல்வியைக் கொடுப்பது எது? என்ற விவாதத்தையும் நடத்தியிருக்கிறார்.

குடும்பத்திற்காக பாடுபடுவது ஒரு சுகமான சுமை என்று பாசமுள்ள அப்பாவாக குடும்பத் தலைவராக மனம் கவர்கிறார் ஆடுகளம் முருகதாஸ் .
அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ நடிப்பு , உடல் மொழி, குரல் எனக் கவனம் பெறுகிறார்.கதை நாயகன் ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளார் . உணர்வுகளைப் புரிந்து முக பாவனைகள் கட்டியுள்ளார். நல் வரவு. பதினொன்றாம் வகுப்பு மாணவியாக வந்து வயதுக்கு மீறிய நடிப்பால் கவர்கிறார் பிரார்த்தனா. மகளாக வரும் அக்ஷயா இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார் .இவர்கள் மட்டுமல்ல அரசுப் பள்ளியில் நண்பன், தனியார் பள்ளியில் சீண்டும் மாணவர்கள், நேசக்கரம் நீட்டும் நண்பன்,நாயகியின் தோழி, அரசு, தனியார் பள்ளிகளின் பிரின்சிபால் என்று அனைவரும் நல்ல நடிப்பால் மனதில் பதிகிறார்கள். ஒரு காட்சியில் தோன்றும் முகங்களுக்கு கூட உரிய குணச்சித்திரம் காட்டி தனது வேலையைச் கச்சிதமாகச்  செய்துள்ளார் இயக்குநர் வாலி மோகன் தாஸ்.
நோக்கத்தில் குறைவில்லை. ஆனால் திரைக்கதையில் மேலும் செழுமை சேர்த்திருந்தால் படம் மேலும் வண்ணமயமாகி அழகான ரங்கோலி கோலமாக மாறி இருக்கும்.