‘கே.ஜி.எஃப் 2 ‘ விமர்சனம்

ரத்தத்துல எழுதின கதை இது மையால் தொடர முடியாது என்று ஒரு வசனம் படத்தில் வருகிறது.படக்கதையின் க் கரு இதுதான். வன்முறைப் பாதையில் போனால் திரும்ப முடியாது என வன்முறைப் பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருப்பதுதான்
‘கே.ஜி.எஃப் 2 ‘

கேஜிஎஃப்பைக் கைப்பற்றும் ராக்கியின் போராட்டமாக இப்படத்தின் முதல் பாகம் இருந்தது. இரண்டாம் பாகத்தில் கேஜிஎஃப் பைக் கைப்பற்றிய பின் அதைத் தக்கவைக்கும் போராட்டமாக மாறியிருக்கிறது.

இந்த மாற்றத்தைத் துப்பாக்கி, தோட்டாக்கள், இரத்தம்,சதை , சத்தம், சண்டை என ஒரு போர்க்களத்தில் நம்மைக் கொண்டு சென்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

ராக்கி பாயாக வரும் யஷ் தான் மொத்த படத்தின் குவி மையமாக இருக்கிறார் என்று நினைத்தால் சமபலத்துடன் உருட்டும் விழிகள் மிரட்டும் உடல் மொழியுடன் எழுந்து நிற்கிறார் சஞ்சய் தத் . நடிப்பில் நிறைவைத் தருகிறார் .நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு வழக்கமான ஆக்ஷன் பட நாயகிகளுக்கு ஏற்ற கறிவேப்பிலை வேடம்தான்.

பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உழைப்பைக் கொடுத்திருக்கின்றனர். பிரதமராக ரவீனா டாண்டன், அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான உடல்மொழியை உள்வாங்கி நடித்திருப்பது சிறப்பு.

ஹாலிவுட் படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக என்று நாம் இதுவரை பேசி வந்தோம்.”என்ன திறமை இல்லை இந்தத் திருநாட்டில்? ”என்று இந்த கேஜி எஃப் 2 படத்தைப் பார்க்கும்போது சொல்லத் தோன்றுகிறது.நம்மவர்களிடமும் திறமை இருக்கிறது. வாய்ப்பு வசதிகள் வரும் போதுதான் அது நிரூபிக்கப்படுகிறது.

ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கும் நம்மூர் இயக்குநர்களுக்கு பழைய படங்களைத் தழுவி புதிதாக இட்லி உப்புமா செய்யும் நம் ஊர் படைப்பாளிகளுக்கு இந்தப் படம் ஒரு பாடம். சொல்ல நம்மிடையே ஆயிரம் கதைகள் இருக்கின்றன கற்பனையும் சிந்திக்கும் திறனும் மட்டும் தான் தேவை என்று அடித்துச் சொல்லியிருக்கிறது ‘கே.ஜி.எஃப் 2 ‘

எத்தனை பிரமாண்டமான காட்சிகள், அழுத்தமான காட்சி அமைப்புகள் அடடா.

இவ்வளவு பிரம்மாண்டமான அதிரடி சண்டைக்காட்சிகள் இருந்தாலும் அதன் பின்னே ஒரு சென்டிமெண்ட் அதுவும் தாய் பற்றிய சென்டிமெண்டை வைத்திருப்பது இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

அருமையான காட்சிகள் மூலம் இயக்குநர் பிரஷாந்த் நீல்
படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். மிக சிரமமான படப்பிடிப்பிடங்களிடம் ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவாளர் புவன் கெளடா தன் முத்திரையைப் பதித்துள்ளார். அவரைப் போலவே பின்னணி இசை என்பது ஒரு பாத்திரம் போல் இயங்க முடியும் என்பதை நிரூபித்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறார்..செட்கள் என்று தெரியாத வகையில் பல அரங்கமைப்புகள் செய்துள்ள கலை இயக்குநரும் சற்றும் சலிக்காமல் படத்தை விறுவிறுப்புடன் பறக்கவிட்டு இருக்கும் படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள்.

படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் . இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். கேஜிஎஃப்-2 நிச்சயமாக நல்ல காட்சி இன்பத்தை அளிக்கக் கூடிய படம் என்று அடித்துக் கூறலாம்.