இந்தியன் பனோரமாவில் ‘குரங்கு பெடல்’!

‘குரங்கு பெடலு’க்கு இந்தியன் பனோரமா திரையீடு அந்தஸ்து கிட்டியுள்ளது. இது குறித்து தயாரிப்பு தரப்பினர் கூறுவதாவது,

எங்களது இரண்டாவது திரைப்படமான குரங்கு பெடல் திரைப்படம் இந்த ஆண்டு கோவாவில் நடக்கவிருக்கும் நவம்பர் 20 முதல் 28 வரை ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவினால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதுபான கடை, வட்டம் திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
மாண்டேஜ் பிக்சர்ஸ் சவிதா சண்முகம் ,சுமீ பாஸ்கரன், இணைத்தயாரிப்பு எஸ் ஆர் ஜெ புரடக்சன்ஸ் சஞ்சய் ஜெயக்குமார் மற்றும் கத கேளு எண்டர்டெயினர்ஸ் உடன் இனைந்து தயாரித்துள்ளோம்.

ராசி அழகப்பனின் அவர்களின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

1980 களின் கோடைக் காலத்தில் சேலம் (தற்போது நாமக்கல் மாவட்டம்) மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக்கரையோர பகுதிகளை களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் குழந்தைகளுடன் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையின் மூலம் மக்களை கவர்ந்த ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை, மற்றும் பாடல்கள் இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.

காலா, பரியேறும் பெருமாள், சர்ப்பாட்டா பரம்பரை, குதிரை வால், ஜல்சா (ஹிந்தி) திரைப்படங்களுக்கு ஒலிக்கலவை செய்த அந்தொனி பி ஜெ ரூபனின் ஒலிக்கலவை இத்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று, டெடி, க/பெ ரணசிங்கம், வட்டம் திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சிவா நந்தீஸ்வரனின் மிக நேர்த்தியான படத்தொகுப்பு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

சுமீ பாஸ்கரன் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இயக்குநரின் கற்பனையை அப்படியே திரையில் காட்சி படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் பிரம்மா, என்.டி. ராஜ்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு, ஜெய் பீம், காத்துவாக்குல ரெண்டு காதல், சாணிக்காயிதம், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு வண்ணக்கலவை செய்த பாலாஜி கோபால் இத்திரைப்படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

1980களின் கோடைகாலத்தில் கத்தேரி என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப்பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.