‘சலார்’ விமர்சனம்

பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரிராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி நடித்துள்ளனர். கேஜி எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு புவன் கவுடா, இசை ரவி பஸ் ரூர், எடிட்டிங் உஜ்வல் குல்கர்னி, தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்,தயாரிப்பு ஹோம்பாலே பிலிம்ஸ் ,தமிழ்நாடு வெளியீடு ரெட்ஜெயண்ட் மூவிஸ் .

பெற்ற பாசத்துக்கும், வளர்த்த பாசத்துக்கும் இடையிலான போட்டி போல ரத்த உறவுக்கும் விசுவாச நட்புக்கும் இடையில் உள்ள போட்டியும் இந்திய பாரம்பரிய உணர்ச்சிகளை கிளறுவதாகும்.அப்படி மகாபாரதம் கதையில் கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசம் ஆக இருப்பதை அடிப்படையாக வைத்து அந்த நட்பு தர்மத்தை நினைவூட்டும் வகையில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படம் தான் ‘சலார்’ பார்ட் 1: சீஸ் பயர்.

கான்சார் என்பது ஒரு ராஜ்ஜியம்.அப்பகுதியில் மூன்று பழங்குடியினர் ஆட்சி நடத்துகிறார்கள்.சுதந்திர இந்தியாவின் எந்த சட்டத்திட்டங்களுக்கும் உட்படாமல் அவர்களுக்கு என்று ஒரு சட்டம், திட்டம், கொள்கை என்று அந்த ஆட்சி நடைபெறுகிறது.அந்த சாம்ராஜ்யத்தின் அதிபர்தான் சிவம் மன்னார் . அவரது மரணத்திற்குப் பிறகு இன்னொரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் சிம்மாசனம் ஏற வேண்டும். ஆனால் அந்த விதியை மீறி அந்த சமூகத் தலைவர் மட்டுமல்ல மக்களையும் கொன்று குவித்துவிட்டு சிவம் மன்னாரின் மகன் ராஜ மன்னார் ஆட்சியைக் கைப்பற்றுகிறான்.அவன் காலத்திலேயே கான்சாரில் மீண்டும் அதிகாரப் போட்டி நிலவுகிறது.
ராஜ மன்னாருக்குப் பிறகு யார்? என்ற போட்டியில், அவனுடைய இரண்டாம் தாரத்து மகன் வர்த மன்னாருக்கு உரிமை மறுக்கப்படுகிறது.அவரை அழித்து ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். இந்த நிலையில் தான் எந்தப் படையும் சேர்க்காமல் தனது நண்பன் சலாரை மட்டும் உதவிக்கு அழைக்கிறார்.

நண்பனுக்காக எதையும் செய்யும் சலார் தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக போரிடுகிறான் தன் நண்பனுக்கு அதிகாரத்தை கைப்பற்ற போராடுகிறான். அப்போது அவனைப் பற்றிய உண்மை ஒன்று தெரிய வருகிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கான்சார் தேசம் பற்றிய வரலாறு, சலாரான பிரபாஸ் மற்றும் வர்த மன்னாரான பிருத்விராஜ் சுகுமாரன் இடையிலான நட்பு என்று சுற்றிப் பின்னிப்பிணைந்து நகர்கிறது கதை.நண்பனுக்காக கான்சார் தேசத்து அதிகாரத்தை பிரபாஸ் எப்படி கைப்பற்றுகிறார் என்று கதை முடிகிறது.

இயக்குநர் பிரசாந்த் நீல், வழக்கம் போல் தனது  உருவாக்கத்தில் மிரள வைக்கிறார். இருந்தாலும் ஏனோ கேஜி எப் பின் வாசனை படம் முழுதும் தெரிகிறது.

மிகைப்படுத்தப்பட்ட மிகையான எதிர்பார்ப்பூட்டும் காட்சிகள் மிகையாகத் தோன்றுகின்றன.

கான்சார் என்ற நாட்டை ஐரோப்பிய நாட்டை போல் காட்டும் இயக்குநர் அங்குள்ள மனிதர்களை மட்டும் பழங்குடியினர் போலக் காட்டுவது ஏன்?அவர்களிடம் நாகரிகம் எட்டிப் பார்க்காதது போல் தோற்றம் உள்ளது.கான்சர் நாட்டின் படை  நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றன ஆனால் வாக்களிக்கும் போது மட்டும்
மட்டும் தராசு முறை, நேரம் காட்டியாக பழைய மணற்கடிகை என்று முரண்படுகிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸுக்கு கொடுக்கப்படும் மிகை எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரும் பொருந்துகிறார். அவரது ஆஜானுபாகுவான தோற்றமும் பொருந்துகிறது.ஆனால் படம் முழுக்க நடிக்க வைப்பதற்குப் பதிலாக அவரை அடிக்க மட்டுமே வைத்துள்ளார்கள்.
அந்த அளவுக்கு அதிரடி சண்டைக் காட்சிகள். எனவே அவர் நடிப்பதற்கான தருணங்கள் குறைவு.

எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனுக்குத் தான் அதிகமாக  நடிக்கும் வாய்ப்புகள் .இரண்டாம் மனைவியின் மகனாக இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு அவமானப் படுத்தப்படும் போது நிராகரிப்பின் வலியை நமக்குள் கடத்துகிறார்.சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.

ராஜ மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜ மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பங்கில் குறை வைக்கவில்லை.

பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு திரையரங்கு உணர்வோடு காட்சிகளைப் பிரமாதப்படுத்தியுள்ளது. திரை அனுபவத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்சிகளில் மிரட்டி உள்ளார்.ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.படத்தொகுப்பாளர்  உஜ்வல் குல்கர்னி, இயக்குநர் நினைத்தபடி படத்தில் விறுவிறுப்பு காட்ட முயன்றுள்ளார்.

அதேபோல் கலை இயக்கமும் படத்திற்குத் துணை நிற்கிறது.அதைவிட கிராபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் நிறையவே உழைத்து உள்ளார்கள்.

சினிமாவில் கதையை விட சொல்லும் விதம்தான் முக்கியம் என்பதை உணர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல்,காட்சிகளிலும் அதை முயன்றிருக்க வேண்டும்.முந்தைய படங்களின் சாயலைக் கொண்டு வந்திருப்பது ஏமாற்றமாக உள்ளது.அதை தவிர்த்திருக்கலாம்.ஆனாலும் இந்தக் குறைகளை மறைக்கும் விதத்தில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், பிரமாண்டமும்அமைந்துள்ளன. கேஜி எப் அனுபவத்தை மனதில் ஏந்தி வரும் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றம் தரலாம். ஆனால் ஆக்‌ஷன் ரசிகர்களை இந்த ‘சலார்’ திருப்திப்படுத்தும்.