சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு

img_9967சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படாதீர்கள் என்று  ஒரு சினிமா படவிழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.

கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார். ‘யூடிவி’ தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர்  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

img_9985விழாவில் கலந்து கொண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பேசும் போது ,

”  இந்தப் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் அழைத்ததால் இங்கே நான் வந்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு மகேந்திரனைத் தெரியும். குழந்தை நட்சத்திரங்களில் ஒரே டேக்கில் நடித்து ஓகே வாங்குபவன் அவனாகவே இருப்பான். சிறுவயதில் நடித்தான் பிறகுகூட இடைவெளி விடாமல் ஏதாவது குறும்படம் அப்படி இப்படி ஏதாவது ஒரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறான்.  எங்கும் வெளியே செல்லவில்லை.அவன்  திறமைக்கு இன்னும் உயரம் செல்வான்.

நான் ஒரு விஷயம் எப்போதும் சொல்வேன் வாழ்த்து வாங்கா விட்டாலும் சாபம் வாங்காமல் இருக்க வேண்டும்.

சினிமாவில் எல்லாருக்கும் எல்லாரும் போட்டிகள்தான் ஆனால் யாரும் எதிரியில்லை.நாசரை எல்லாருக்கும் பிடிக்கும் என்றார்கள்.

எல்லாருக்கும் பிடித்தவராக இருப்பது சிரமம்.

படத்துக்காக செய்த செலவு படத்தில் தெரிய வேண்டும். இதில் தெரிகிறது.  அதற்காக பாராட்டுக்கள்.இந்தத் தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொல்லும் போதே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

தயவு செய்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள். நான் போர்டு உறுப்பினர் என்கிற முறையில்  புதிய தயாரிப்பாளர்களுக்கு சொல்லவேண்டிய விஷயம் இதுதான். அப்படிப் போகும் போது  நேர நெருக்கடிக்கு ஆளாகும் போது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டி வரும்.  சென்சாரில் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை வரும்.

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது. நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும் .சட்டப்படி தானே படம் எடுத்திருக்கிறோம்?, இது நம் தயாரிப்பு ,இதற்காக அவர்களிடம் கெஞ்சக் கூடாது. தைரியமாகப் பேச வேண்டும். உங்கள் படைப்பு மீது உங்களுக்கே நம்பிக்கை வேண்டும். இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லக் கூடாது. வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டுப் போனால் தேவையில்லாத பதற்றம்  வரும்..

படத்தின் கதை விவாதம், படப்பிடிப்புக்கு  எல்லாம் பல மாதங்கள் ஒதுக்குகிறீர்கள் ஆனால் சென்சார் சான்றிதழ் மட்டும் உடனே வேண்டுமென்றால் எப்படி? சென்சாருக்கும் ஒரு மாதம் ஒதுக்குங்கள்.

நாம் யாரோடும் போட்டி போடக் கூடாது. உங்கள் பட்ஜெட்டுக்குள் எடுங்கள். ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் செலவாகிறது இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று படமெடுப்பது சுலபம் .அதை வியாபாரம் செய்வது சிரமம்.

சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல்நாளே டிவிடி கொண்டு வரலாம். அதன் மூலம் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்?  இதைச்செய்யாததால் யாரோ சம்பாதிக்கிறார்கள்.” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.  விழாவில் இசையமைப்பாளர்கள் ஹரீஷ், சதிஷ், ஜெர்மன்விஜய், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன், இயக்குநர்கள் ஆர். அரவிந்தராஜ். பிரவீன் காந்தி,  பட த்தை இயக்கிய மு.பிரதாப் முரளி ,நடிகர்கள் மகேந்திரன், ‘மைம்’ கோபி, அஜய்ரத்னம், தீரஜ்அஜய்ரத்னம்,  வினோத் கினி, பாடகர் சிரிஷ், பாடலாசிரியர்கள் ஜெ.சதீஷ், பி.சிவமுருகன், தயாரிப்பாளர்கள் ஸ்ரீநிவாஸ்ராவ்,கே.எம். கங்காதரராவ், ஜி.வெங்கட்ரமணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தயாரிப்பாளர்  ஸ்ரீநிவாஸ்ராவ் அனைவரையும் வரவேற்றார்.