‘சைரன்’ விமர்சனம்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, அழகம்பெருமாள், அஜய், துளசி நடித்துள்ளனர். அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

அண்மைக் காலமாக ஜெயம் ரவி நடித்த படங்களில் பிரம்மாண்டம், திரைக்கதை, பட உருவாக்கம் போன்று ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கினாலும் ஏதோ ஒரு சிறு குறை அந்த படத்தை குறை உள்ளதாக ஏதோ ஒரு போதாமை உள்ளதாக உணர வைக்கும்.ஆனால் அனைத்து அம்சங்களும் சரியாகக் கலந்து தனி ஒருவன் படத்துக்குப் பின் உருவாகி இருக்கும் படம் என்று சைரன் படத்தைக் கூறலாம்.

சரி சைரன் 108 என்று அறியப்படும் சைரன் படத்தின் கதை என்ன?

ஆயுள் தண்டனைக் கைதி ஜெயம் ரவி சிறையில் இருக்கிறார்.சிறைக்குள்ளே அவர் சாந்த சொரூபியாக இருக்கிறார் .ஜெயமோகன் எழுதிய அறம் கதையை வாசித்துக் கொண்டிருக்கிறார். மற்ற கொலைக் குற்றவாளிக் கைதிகளுக்கெல்லாம் உயிரின் மதிப்பு என்பதைப் பற்றிப் பாடம் எடுக்கிறார்.

வெளியே அவரது மகள் நந்தினி பள்ளியில் படிக்கிறாள்.பள்ளியில் படிக்கும் போது சக நண்பர்களிடம் தன் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகப் பொய் கூறுகிறாள்.ஒரு கட்டத்தில் உண்மை தெரியும் போது அவமானப்படுகிறாள். அதனால் தந்தையை வெறுக்கிறாள்.

ஒரு கொலைக் குற்றவாளியாகத் தண்டனைக் காலம் அனுபவித்து வரும் ஜெயம்ரவிக்குச் சிறையில் நல்ல பெயர். வீட்டுக்குச் சென்று யாரையும் பார்ப்பதில்லை என்ற மனநிலையோடு அவர் சிறையில் இருக்கிறார்.

பலரும் வீட்டைப் பார்த்து விட்டு வருமாறு கூறும் போது அவர் மறுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் வீடு சென்று குடும்பத்தினரைப் பார்க்கும் ஆசையில் பரோலில் வெளியே வருகிறார்.கூடவே நிழல் காவலராக யோகி பாபு வருகிறார்.

இன்னொரு புறம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது கஸ்டடியில் கொலை செய்ததாகப் புகார் வருகிறது. அதனால் அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் இருக்கிறார்.ஜெயம் ரவி பரோலில் வெளியே வந்திருக்கிற காலத்தில் சில கொலைகள் நடக்கின்றன .அதை அவர் தான் செய்தார் என்று நிரூபிக்க கீர்த்தி சுரேஷ் முயற்சி செய்கிறார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.

அதே நேரத்தில் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கும் ஜெயம் ரவி தன் மனைவியை கொன்று, அந்தப் பழியைத் தன்மீதே போட்டுத் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சிலரைப் பழிவாங்கத் துடிக்கிறார். அவரது திட்டம் பலித்ததா? அவர் நிரபராதியா ? கொலைகாரரா? முடிவு என்ன என்பதுதான் சைரன் படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

இப்படத்தில் திலகவர்மன் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். ஒருபுறம் ஒரு சிறைக்கைதியாக மிகவும் அடக்கி வாசித்து உணர்ச்சிகளைக் காட்டாமல் அடக்கமாக தனது குண இயல்புகளைக் காட்டி  நடித்துள்ளார். மறுபுறம் பிளாஷ்பேக் கதையில் ஒரு 108 ஆம்புலன்ஸ் டிரைவராக துடிப்பான இளைஞராக வருகிறார். காதலிக்கிறார், பாசத்தில் உருகுகிறார்.ஆவேசம் கொண்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமலே அந்த உணர்வுகளை கடத்துகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் கீர்த்தி சுரேஷ் ,காக்கி உடையில் இருந்தாலும் முக பாவங்களை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் .முகத்தில் ரேகை போல் இழையும் சின்ன சின்ன அசைவுகள் மூலம் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார்.

ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் ஊமைப் பெண்ணாக ஜெனிபர் பாத்திரத்தில் வரும் அனுபவமா பரமேஸ்வரன் வாய் பேச முடியாத பாத்திரத்தில் தனது உடல் மொழியாலும் விழிகளாலும் பேசி அந்த துறுதுறுப்பான பாத்திரத்தை மனதில் பதிய வைத்து விடுகிறார். ஆனாலும் , மேலும் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

உதவி கமிஷனர் ஆக வருகிறார் சமுத்திரக்கனி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் அந்த நாகலிங்கம் பாத்திரத்திற்குள் ஒளிந்திருக்கும் ஜாதி உணர்வையும் வெளிப்படுத்துகிறார்.நல்லவர் போல் படத்திற்குப் படம் வசனம் பேசும் சமுத்திரக்கனி இதில் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் வருகிறார். அதை அவர் அனாயாசமாகவே செய்துள்ளார்.

வேளாங்கண்ணி என்ற பெயரில் ஒரு போலீஸ்காரராக வரும் யோகி பாபு காக்கி சட்டை அணிந்து கொண்டு சின்ன சின்ன வசனங்கள் மூலம் கூட சிரிக்க வைக்கிறார். பரிதாபத்தையும் அள்ளுகிறார்.

ஜாதிக் கட்சி தலைவராக அழகம்பெருமாள் வருகிறார். அவரது கட்சியின் இன்னொரு பிரமுகராக வரும் அஜய் வில்லத்தனம் காட்டுகிறார்.

முதல் பாதி போனதே தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் ப்ளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன. மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டே ஒன்றன்பின் ஒன்றாக அந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ். 108 ஆம்புலன்ஸில் ஓடும் வாகனத்தில் அனைத்தும் நிகழ்வது போல இந்தப் படத்தில் கதை செல்லும் வேகத்தில் முடிச்சுகளைப் போடுவதும் அவிழ்வதும் நிகழ்கின்றன.
ஏராளமான காட்சிகளை வைத்துள்ளதால், இரண்டாம் பாதி சற்று நீளம் போல் தோன்றும்.போலீஸ் துறையின் புலனாய்வுக் காட்சிகள் விவரமாகக் காட்டப்பட்டுள்ளன.

இந்தப் படம் ஒரு ஆக்சன் படம் என்றாலும் விறுவிறுப்பான த்ரில்லர் படம் என்றாலும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் இதமாக ஒலிக்கின்றன.குறிப்பாக ஜெயம் ரவி அனுபமா பரமேஸ்வரன் தோன்றும் ‘நேற்று வரை’ டூயட் பாடல் ரகம்,மயில் தோகை விரித்து நடனமாடும் சுகம்.

ஆக்சன் புலனாய்வு விறுவிறுப்பு மர்மம் காதல் பாசம் நெகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளும் கலந்த ஒரு முழு நீள வணிகத் திரைப்படமாக 155.39 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், பார்வையாளர் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது.காட்சிகளில் ஆபாசக் கலப்பில்லாதது அனைவரையும் கவரும்.

படத்தில் பிரம்மாண்டத்திற்குச் செறிவூட்டும் வகையில் செல்வகுமார் எஸ் கே யின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.இரவு நேரக் காட்சிகள் ,சாலைகள்,வாகன விரைவுகள், தெருக்கள், திருவிழாக் கூட்டம் என்று அவரது உழைப்பு தெரிகிறது.

பாடல்களைப் போலவே  ஜீ.வி .பிரகாஷ் குமாரின் பின்னணி இசை மிகச் சிறப்பாக வந்துள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடித்த ஒரு முழுமையான திருப்தியளிக்கும் படமாக ‘சைரன்’ அமைந்துள்ளது.

‘சைரன்’ அனைவரையும் கவரும்.