‘ஜாங்கோ’ விமர்சனம்

காலச்சக்கரம், காலச்சுழற்சி, காலக் கடிகாரம் இந்த வகையான கதைகளைப் பார்த்திருக்கிறோம் . டைம் லூப் என்கிற விஷயத்தை எடுத்துக்கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ஜாங்கோ.

முதலில் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு அதீத கற்பனை கதையைப் படமாக்கத் துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரைப் பாராட்ட வேண்டும்.படம் எப்படி என்பதைப் பார்ப்போம்.

டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் விண்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார். அதன் கதிர் வீச்சு தாக்கி பாதிக்கப்படுகிறார். அதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார்.அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது.அன்றுமுதல் அவருக்கு முதல்நாள் என்ன சம்பவங்கள் நடக்கிறதோ மறுநாளும் அதற்கடுத்த நாளும் அதே சம்பவங்கள் மட்டுமே நடக்கின்றன.

தன் மனைவி யாரோ மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் படுவது தெரிகிறது. மனைவியை டைம் லூப் மூலம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரை தடுக்கிறது. திரும்ப திரும்ப ஒரேநாட்களில் சதீஷ்குமார் பயணிப்பதால் மனைவியை மீட்க தொடர்ச்சியாக முயற்சிக்கிறார் .அவரால் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா ?டைம் லூப்பில் இருந்து மீண்டாரா?என்பதே படத்தின் மீதிக்கதை.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து இருக்கிறார்.

போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் மனோ கார்த்திகேயன். முதல் பாதி திரைக்கதை ரசிகர்களைக் குழப்புவது போலத் தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால், கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்குப் பலம். அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

நிச்சயமாக ‘ஜாங்கோ’ என்கிற இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டலாம்