சினிமாவில் ஜே.எஸ்.கே நிறுவனம் திறந்து வைக்கும் புதிய வாசல்!

jsk-solo.rsஜே.எஸ். கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிக்கப்படும் படங்களுக்கும்  வெளியிடப்படும் படங்களுக்கும் புதிய தளம் என்றோ புதிய  கதை  என்றோ ஒரு தர முத்திரை  இருக்கும்.

இந்த வகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம்’, ‘ஆரோகணம்,’ ‘பரதேசி’, ‘தங்கமீன்கள்’, ‘மேகா’, ‘மதயானைக்கூட்டம்’, ‘ரம்மி’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  போன்ற சுமார் 10 படங்களை வழங்கியுள்ளது ஜேஎஸ்.கே நிறுவனம்.இவை தேசிய விருது உள்பட சுமார் 30விருதுகளைப் பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து இப்போது வெளியாகவுள்ள படம் ‘நாலுபோலீசும் நல்லா இருந்த ஊரும்’ .வெளிவர இருப்பவை ‘குற்றம் கடிதல்’, ‘அண்டாவக் காணோம்’ ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ,’,தரமணி’ போன்றவை.

ஜே.எஸ். கே பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் இன்று ஊடகங்களைச் சந்தித்து பேசினார்.அவர் பேசும் போது.

” இன்று சினிமா மிகவும் சிக்கலான இக்கட்டான சூழலில் இருக்கிறது. படம் தயாரிப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. தியேட்டர் கிடைப்பது சிரமமாக உள்ளது ‘நாலுபோலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம்கூட இரண்டு மூன்றுமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டு இப்போது ஜூலை 24ல் வெளியாகிறது.

இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் டிவி விளம்பரங்கள் பற்றிய கட்டுப் பாடுகள் கொண்டு வந்துள்ளனர். இவை விரைவில் நடைமுறைக்கு வரும். மலையாளத்தில் ‘பிரேமம்’ என்று ஒரு படம் டிவி விளம்பரமே இல்லாமல் இணையதள விளம்பரங்களை வைத்து மட்டும் பயன்படுத்தி வெற்றி பெற்று ஒரு கலக்கு கலக்கி இருக்கிறது. நானும் இதை ‘நாலுபோலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் மூலம் தொடங்குகிறேன். இப்படத்துக்கு எந்த சேனலுக்கும் விளம்பரம் தரவில்லை. தரப் போவதுமில்லை. இணையதளங்களை நம்பி களம் இறங்குகிறோம். ” என்றார்.

ஆக இது ஜே.எஸ். கே நிறுவனம் தொடங்கி திறந்து வைக்கும் புதிய வாசல் எனலாம்.