‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்

tsta1தூது அஞ்சல்,  தனியார் அஞ்சல் என அழைக்கப்படும் கொரியரில் டெலிவரி  பாய் வேலைபார்க்கும் இளைஞன்தான் நாயகன். அப்படிப்பட்ட கொரியர் பாய் பாத்திரத்தை வைத்து சமூகத்துக்குத் தேவையான விஷயத்தைச்சொல்ல முடியுமா ? முடியும் என்று காட்டியுள்ளள படம்தான் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்.

கௌதம் மேனன் தயாரிப்பில் பிரேம் சாய் இயக்கத்தில் ஜெய் நடிப்பில்  உருவாகியுள்ள படம்.

நடப்பு  தமிழ்ச் சினிமாவின் டெம்ப்ளேட் குணச்சித்திரமான வேலைக்குப் போகவே விரும்பாத இளைஞன் தான் நாயகன். காதலிக்கு கொரியர் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்குமே என்கிற லட்சியத்தோடு  கொரியர் கொடுக்கும்  வேலைக்குப் போகிறான்.அவனிடம் ஒரு முக்கியமான கொரியர்  டெலிவரிக்கு கிடைத்து,அது  கதையின் போக்கையே மாற்றுகிறது. அதன் படி ஸ்டெம்செல்லை முறைகேடாகப் பயன்படுத்தும் சர்வதேச கும்பலின் சதியை, கொரியர் கொடுக்கும் சாதாரண இளைஞன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை.

வேலையில்லாமல் வெட்டியாகத்திரியும் ஜெய் ,எந்த வேலையும் பிடிக்காமல், காதலிக்காக கொரியர் கொடுக்கும் வேலையில் சேரும் தமிழ்ச்செல்வனாக சரியாகப் பொருந்துகிறார். காதலியைப் பின் தொடர்வது, காதலியைக் கவர முயற்சிப்பது, நட்புக்கு முக்கியத்துவம் தருவது, பாசமான தம்பியாக அக்கறை காட்டுவது என ஜெய்க்கு  தோற்றத்துக்குப் பொருத்தமான சட்டைதான். அதை எந்த வித அலட்டலும் இல்லாமல் அளவாகச் செய்திருக்கிறார்.

அவருக்கேற்றபடியான  பல்பு வாங்கும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார்.

யாமி கௌதம் அழகான ஓவியம் போல வந்து போகிறார்.காதி கிராப்டில் வேலை பார்ப்பவராக வருகிறார். அவரது  தோற்றம், உடல் மொழி மூலம் கதாநாயகிக்கான பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளார்.

சந்தானம்- விடிவி கணேஷ் இடையே நடக்கும் உரையாடல்களுக்கு சிரிக்கலாம்.

நாசர், பிரேம், அஷுதோஷ் ராணா ஆகியோர் கதாபாத்திரத்துகான நடிப்பைக்காண முடிகிறது.

சத்யா பொன்மாரின் கேமரா காதல், ஆக்‌ஷன் என எல்லா வகைகளிலும் முத்திரை பதிக்கிறது. கார்த்திக் இசை பாடல்களுக்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை..பின்னணி இசைதான் சுமாராகத் தேறுகிறது.

மிகப் பெரிய சட்டவிரோதப் பிரச்சினையை வசனங்கள் மூலம் விளக்குகிறார் இயக்குநர் பிரேம்சாய். அதற்கான அழுத்தத்தை காட்சிகளில் கொடுக்கத் தவறிவிட்டார்.

முதல் பாதியில் காதலுக்காக காத்திருப்பது, பின் தொடர்வதை கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்., ஸ்டெம்செல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்துக்கு அழுத்தமும் எடையும் கூடியிருக்கும். அதுவும் அந்தப் பாடலை எந்த இரக்கமும் இல்லாமல் தூக்கலாம்.

கொரியர் இளைஞன் எப்படி அந்த சதியை முறியடிக்கிறான் என்று திரைக்கதை முடிச்சை அழகாக அவிழ்த்த விதத்தில்  இயக்குநரின் திறமை தெரிகிறது.
இப்படம் புதிய சமூகவிழிப்பூட்ட முனைந்த வகையில்  கவன ஈர்ப்பு  பெறுகிறது. அதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.