தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து செயல்படும்: விஷால்!

vishal-gpதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 
 
தலைவர் விஷால் பேசியதாவது :
 
இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் வைத்து இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களா? என்பதை செயல்களில்தான் காட்ட முடியும். 
வெற்றி அறிவிப்பு வந்த இரவே செயல்பாடுகளில் இறங்கிவிட்டோம். வரும்  வியாழக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர்கள் குடும்பத்தோடு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.
தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக  தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும்.  ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று ஒரு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்! “என்றார்.
 
துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் பேசுகையில்,
 
” தேர்வு செய்யப்பட்ட 27 பேர் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்பது அல்ல. எல்லா தயாரிப்பாளர்களும் வர வேண்டும்.  ஒவ்வொரு பிரச்சினைக்கும் பல அணிகளாக பிரிந்து வேலை பார்க்கப் போகிறோம். எல்லோரது ஒத்துழைப்பும் வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
துணைத்தலைவர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில்,
 
 “எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.  தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரை, ‘வாழ்வு வந்தால் அனைவரையும் சாகடிப்போமே’ என்ற சூழ்நிலைதான் இருந்தது. இனி அது முற்றிலுமாக மாறும். மிகவும் சந்தோஷமாக இந்த சங்கத்துக்குள் வந்துள்ளோம். பதவியில் இல்லாவிட்டாலும் மிஷ்கின் என்னோடு இணைந்து பணியாற்றுவார்” என்று தெரிவித்தார்.
 
செயற்குழு உறுப்பினர் சுந்தர் சி பேசுகையில்,
 
 “ஒரு ஆண்டுகாலம் நேரம் கொடுங்கள். மாற்றத்தை கொண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.
 
பொது செயலாளர் K.E.ஞானவேல்ராஜா பேசுகையில்,
 
 “கேபிள் டிவி விஷயங்கள் குறித்து தலைவர் சொன்னார். அந்த விஷயங்களில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முன்பு முன்னால் உட்கார்ந்து கேள்விக் கேட்டு கொண்டிருந்தோம். நீங்கள் என்ன செய்யுறீங்க என பார்ப்போம் என்று வாக்களித்துள்ளார்கள். கண்டிப்பாக ஒரு நிமிடம் கூட வீணடிக்க மாட்டோம். எங்களுடைய பணிகள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே 
ஒவ்வொரு விஷயம் நடைபெறுவது போல செயல்பாடுகள் இருக்கும். அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும்” என்று பேசினார்.
 
பொது செயலாளர் கதிரேசன் பேசுகையில்,
 
நாங்கள் அனைவரும் வாக்களித்த தயாரிப்பாளர்களுக்கு எங்களை இந்த பொறுப்பிற்கு கொண்டுவந்த அனைவருக்கும் கண்டிப்பாக நல்லது செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
 
பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில்,
 
 “இந்த சங்கத்தில் எனது வயதுக்கு மீறிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்து அனைத்து தயாரிப்பாளர்களும் எனக்கு கொடுத்துள்ளார்கள். நிச்சயமாக இந்த நம்பிக்கை வீண் போகாத அளவில் என் செயல்பாடுகள் இருக்கும், கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும்”