‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை !

barathwaj-cdபரத்வாஜ் இசையமைத்த ‘திருக்குறளிசை’  வெளியீட்டு விழா  நடந்தது. முதலில் அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்கங்கள் என  அறத்துப்பால் அதிகாரத்துக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. சுவாமி ஓங்காரனந்தா வெளியிட இயக்குநர் சரண் பெற்றுக்கொண்டார்.

இயக்குநர் சரண் பரத்வாஜைப் பாராட்டிக் கவிதை எழுதி வாசித்ததார்.

இதோ அந்தக் கவிதை !

திருக்குறளுக்கு முதல் வணக்கம்!

அதன் வழி நடக்கும் ஆன்றோருக்கும் சமூக விஞ்ஞானிகளான பத்திரிகையாளர்களுக்கும் தொடர் வணக்கம்!

இசைமேதை பரத்வாஜ் அவர்களும் நானும் பல ஆண்டுகளாக திருக்குறளின் ஈரடிபோல இணைந்தே இருந்து வருகிறோம்…

சந்தேகமில்லாமல் நெடிய முதலடி அவர்… குறுகிய அடுத்த அடி நான்!

டில்லியில் பிறந்து வளர்ந்த திருநெல்வெலி தமிழரான பரத்வாஜ் தமிழ்த்திரை இசைக்கு ஒரு வழிப்பயணி போலத்தான் வந்தார்..

பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும் அவரின் இலக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பெட் டகமாம் திருக்குறளை இசைச்சாவி கொண்டு திறப்பதும், அந்தப் பொக்கிஷத்தை வருங்காலத் தலைமுறைக்கு செவி வழியே கடத்துவதும்தான் என்பதை நிரூபிக்கும் நாள் இன்று!

இதே மேடையில் இதே பத்திரிகை தோழர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன்..

பரத்வாஜ் அவர்கள் ஓலைவேய்ந்து மறைவாக ஒரு கட்டடத்தை எழுப்பிக்கொண்டிருக்கிறார். அது சாதாரணக் கட்டடமல்ல..ஒரு கோவில்… கோபுரம் தாங்கிய கோவில்… வேய்ந்த ஒலைகள் வெறும் ஒலைகளல்ல ஓலைச்சுவடிகள்! எழுந்த கோபுரம் ஒரு இசைக் கோபுரம்..

பாமர இசை வடிவத்தில்.
மரபான இசை வடிவத்தில்,
மேற்கத்திய இசை வடிவத்தில்
நம் மனதில் இசை உளி கொண்டு

திருக்குறளைச் செதுக்கியிருக்கிறார்…

இது தமிழர் இல்லம் தோறும் இருக்கவேண்டிய காதுகளுக்கான ஆபரணம்!

ஆபரணம் மட்டுமல்ல.. மனதிற்கான ஆவணம்!

பரத்வாஜ் என்றாலே,

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்”

“உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே!”

“மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு”

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே”

“ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்..”

”அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்”

“பார்த்தேன் பார்த்தேன்… பார்த்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன்… ரசித்தேன்”

”நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதை வைத்து கவனி கவனி”

“உனை நான் உனை நான் உனை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்”

“காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?”

“தல போல வருமா? தல போல வருமா?”

“கலக்கப் போவது யாரு? ஜெயிக்கப் போவது யாரு?”

“சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்”

“காடு திறந்தே கிடக்கிறது … காற்று மலர்களை உடைக்கின்றது..”

போன்று பல பாடல்களின் முதல் இருவரிகள் இவரது முகவரியாய் நம் நெஞ்சில் தோன்றும்…

ஆனால் இனி

குறளின்  இருவரிகள்தான் இவரின் முகவரி…

சினிமா இவருக்கு கோப்பை தந்தது… அந்தக் கோப்பையில் இவர் திருக்குறள் நிரப்பி நமக்கே தருகிறார்… ஒரு தமிழன் சக தமிழனுக்கு தமிழால், தன்னால் ஆனதைத் தந்திருக்கிறான்…

வாருங்கள்.. இதை உலகிற்கு எடுத்துச் செல்வோம்….

முப்பால் உண்ட களிப்பால் சொல்கிறேன்…

பரத்வாஜ்… வாழ்க நீங்கள்

திருக்குறள் போல….!
திருக்குறள் போல….!
திருக்குறள் போல….!