’தி கோட் லைஃப் – ‘ஆடு ஜீவிதம்’ விமர்சனம்

பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில்  பிளஸ்ஸி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.

இது ஓர்உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது .அக்கதை நாவலாகவும் வெளியாகியு ள்ளது.பாரின் ரிடர்ன் என்று வெளிநாடு சென்று வந்தவர்களைக் குறிப்பிடுவதுண்டு.அவர்கள் உள்ளூரில் பகட்டாகப் பார்க்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் அங்கே என்ன சிரமப்படுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

அப்படி வளைகுடா நாடு சென்ற ஒருவன் அங்கே அடிமையாக மாறி துயரங்களை அனுபவித்த கதை தான் இது.

கதாநாயகன் பிருத்விராஜ் தனது நண்பனின் மாமாவின் மூலம் சவுதி அரேபியா செல்கிறார்.ஆரம்பத்தில் உதவியாளர் வேலை என்று நம்பிச் செல்கிறார். ஆனால் போன இடத்தில் தவறான ஏஜெண்ட் உடன் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார்.புரியாத மொழி, எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் பிருத்விராஜ், அங்கே அவர் அடிமையாக வேலை பார்க்க வேண்டிய கொடுமை.எதிர்பாராத இந்த கொடுமையால் அவர் அதிர்ந்து போகிறார். இந்த வேலைக்கு நான் வரவில்லை என்று எவ்வளவோ கெஞ்சி மன்றாடுகிறார் .ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.அதிலிருந்து விடுபட்டு ஊருக்குச் சென்றால் போதும் என்று நினைக்கிறார் .ஆனால் எலிப்பொறியில் மாட்டியதுபோல் அகப்பட்டுக் கொள்கிறார்.தப்பிக்கச் செல்லும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. கொடுமைகளை அனுபவிக்கிறார் .

இப்படி பல ஆண்டுகள் உருண்டோடுகின்றன வருடங்கள் செல்லச் செல்ல, ஆளே மாறிவிடுகிறார்.நஜீப்பாக வரும் பிருத்விராஜுக்கு என்ன நடந்தது? இறுதியில் அவர் அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் மீதிக் கதை.

பென்யமின் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை மையமாக வைத்து இயக்குநர் பிளஸ்ஸி இந்த உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பைக் கொடுத்துள்ளார். அடிமையாக நஜீப் பட்ட கஷ்டங்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் திரையில் காட்டியுள்ளார் பிருத்விராஜ். உடலில் மட்டும் இன்றி குரலிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிப்படுத்தி,பல இடங்களில் தனது சிறு சிறு அசைவுகளின் மூலமாகவே , இன்னல்களை அனுபவித்த நஜீமின் வாழ்க்கையை நம்முள் , கடத்திவிடுகிறார்.பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகள், சாலையை தேடி மனம் பிறழ்ந்து தடுமாறி அலையும் காட்சிகள்பார்ப்பவர் மனதை உறைய வைக்கும்.எப்படியாவது குடும்பத்தைப் பார்த்து விட வேண்டும் என்று அவர் தவிக்கும் காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

அமலா பாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்துள்ளார்.பிருத்விராஜ் உடன் சவுதிக்கு சென்று பாலைவனத்தில் கஷ்ட்டப்படும் கே.ஆர்.கோகுல், பிருத்விராஜைக்  காப்பாற்ற முயற்சிக்கும் ஆப்பிரிக்க அடிமையாக நடித்திருக்கும் ஜிம்மி ஜூன் லூயிஸ், ஆட்டு மந்தையின் முதலாளியாக நடித்திருக்கும் அரபு நாட்டுக்காரர் என படத்தில் நடித்திருப்பவர்கள் நடிப்பு பாராட்டுக்குரியது.

மனித வாழ்வின் அவலமான அத்தனை தருணங்களையும் உணர வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. அதற்கேற்ற பின்னணி இசை அமைத்து அந்த உணர்வுகளை நம் மனதில் கடத்துகிறார் ஏ ஆர் ரகுமான்.

ஒளிப்பதிவாளர் சுனிலின் ஒளிப்பதிவு ஒளி அமைப்புகள், கேமரா கோணங்கள் அனைத்துமே கதை மட்டுமே சொல்கின்றன. அவரது ஒளிப்பதிவு உலகத் தரம்.குறிப்பாக பாலைவனத்தில் இடம்பெறும் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன.பாலைவனம் கானல் நீர், பிருத்விராஜ் கண்களில் சாலை, ஒட்டகத்தின் கண்களில் பிருத்விராஜ் முகம் என்று வரும் அந்தக் காட்சிகள் நம்மை அலைக்கழிக்க வைக்கும்.

சினிமாவின் எந்த செயற்கைப் பூச்சும் இல்லாமல் ஒரு அசல் மனிதனின் வாழ்க்கையை வழங்கி உள்ள பிளஸ்ஸியின் இந்தப் படைப்பு திரையில் ஒரு வாழ்க்கை அனுபவம். இந்தப் படத்தை இயக்கிய பிளஸ்ஸியை முதுகு வலிக்கும் வரை தட்டிக் கொடுக்கலாம்.