‘தேவி’ விமர்சனம்

devi-aka-devil-photos-images-45549பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ,நாசர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் நடித்துள்ளனர். இயக்கம் விஜய்.

பயங்கர உருவம், முடிமறைத்த முகங்கள், வீல் என அலறும் சத்தங்கள்,சொட்டும் ரத்தம் இவை எதுவும் இல்லாமல் ஜாலியாகவும் ஒரு பேய்ப்படம் சாத்தியம் என்று சொல்ல வைக்கும் படம்’தேவி’.

மும்பையில் வேலை பார்க்கும் பிரபுதேவாவுக்கு மாடர்ன் பெண்ணாக திருமணம் செய்ய ஆசை. ஆனால் ‘தேவர் மகன்’, ரேவதி போல கிராமத்துப் பால்காரப் பெண் தமன்னாவை திடீர் திருமணம் செய்ய வேண்டியதாகி விடுகிறது. வேண்டா வெறுப்பாக மனைவியுடன் வாழத் தொடங்கி மும்பையிலுள்ள ஒரு வீட்டில் குடியேறுகிறார்.

அங்கே போன பின்பு அருக்காணி போலிருந்த தமன்னா ஐஸ்வர்யா ராய் போல் ஸடைலாக தோன்றுகிறார். அதைப் பார்த்து அதிர்கிறார் பிரபுதேவா, பிறகுதான் தெரிகிறது.அது ஒரு தற்கொலை நடந்த வீடு. பெரிய ஸ்டார் கனவிலிருந்த ஒரு பெண் அது நிறை வேறாமல் போய் அந்த வீட்டில் தற்கொலையில் இறந்த செய்தி .அது தன் ஆசையை நிறை வேற்றிக் கொள்ளும் வரை தமன்னா உடம்பில் குடியிருப்பதாக  டீல் பேசுகிறது.

அந்தப் பாவி ஆவி மூலம் அப்பாவி பால்காரப் பெண் தமன்னா பாலிவுட் நாயகி ஆகி உயார்வது வரை நடக்கும் ஜாலியான களேபரங்கள்தான் கதை.

படத்தின் முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்கிற கதை, தமன்னாவுக்குள் பேய் புகுந்தபின் வேகம் எடுக்கிறது. அதன்பின் ஜாலி எக்ஸ்பிரசாக விரைந்து ஓடுகிறது.

படத்தின் நாயகன் பிரபுதேவா என்றாலும் தமன்னாவே படத்தின் எடையை சுமந்துதுள்ளார் .பிரபுதேவா பயந்து பயந்து சிரிக்க வைக்கிறார். ஆட்டம் ஆடியும் வியக்க வைக்கிறார்.

நாயகனான பிரபுதேவா ஒருகட்டத்தில் தமன்னாவிடம் படத்தை ஒப்படைத்து விலகி நின்று ரசிப்பதில் அவரது பெருந்தன்மை புரிகிறது.

‘ஆவி’ பற்றிய ஜாலியான படம் ‘தேவி’. முதல்பாதியை இவ்வளவு ஜவ்வடிக்காமல் சடாரெனக் கதைக்குள் நுழைந்து இருந்தால் தேவியில் இன்னமும் அதிகமான ஆவிபறக்கும் சூடு இருந்திருக்கும்.