நகைச்சுவை கலந்த ஜில் ஜங் ஜக் பாடல்கள் !


jil-sdhஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் . ஆனால் எல்லாப்  பாடல்களுமே  ஹிட் ஆன படமான ஜில் ஜங் ஜக்  வந்திருக்க , அதன் இசை அமைப்பாளர் என்ற கம்பீரப் பெருமையோடு புன்னகைக்கிறார்  விஷால் சந்திரசேகர் .

விஷால் சந்திர சேகர் இசையில் உருவாகி இருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பாடல்கள் எவ்வளவு ஹிட் என்பதை, படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு  கல்லூரிகளுக்கு செல்லும்  படக் குழு நேரடியாக  உணர்ந்து புல்லரித்து நிற்கிறது . படததின் எல்லாப் பாடல்களுக்கும்  ஆடிப் பாடி தங்கள் சந்தோஷத்தை தெரிவிக்கும் மாணவர்களும் ரசிகர்களும் , “ஷூட்  த குருவி”பாடலுக்கு மட்டும் ஒரு படி  மேலே போய் கொண்டாடித் தீர்க்கிறார்கள் .

இப்படியாக படம் வருவதற்கு முன்பே பாடல்களாலேயே  பெருத்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும்  ஏற்படுத்தி இருக்கும் படம்  ஜில் ஜங் ஜக். ஆனால் ஆரம்பத்தில் இந்தப்  படத்தில்,  பாடல்களே வைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பதும்,  பின்னணி இசைக்கு மட்டுமே படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரை அணுகினார் என்ற உண்மையும்,

எத்தனை பேருக்கு தெரியும்  ? ஒரு நிலையில் படத்துக்கு ஒரே ஒரு பாடல் வேண்டும் என்று தீர்மானித்த இயக்குநர் தீரஜ் , விஷால் சந்திரசேகர் போட்டுக் கொடுத்த அந்த ஒற்றைப் பாட்டில் மனம் மயங்க , கடைசியில் படத்தில் இத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தன .

jil3இது பற்றிப் பேசும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் , ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சித்தார்த் , இயக்குநர் தீரஜ் வைத்தி இருவருமே, இந்தப் படத்துக்கு வினோதமான நகைச்சுவைப் பாடல்கள் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக  இருந்தனர்

.எனக்கும் அது பிடித்து இருந்தது . ஒவ்வொரு பாடல் உருவாக்கமும் தந்த சவாலை நான் விரும்பி ஏற்றுக் கொண்டேன் .

1940 களில் உருவான ஆப்பிரிக்கோ அமெரிக்கப் இசைப் பின்னணியில் அமைந்த   ரிதம்ஸ் அண்ட் புளூ பாணியில்,  ”ஷூட் த குருவி…” பாடலை அமைத்து அதில் ராதாரவியின் குரலும் வருவது போல அமைத்தேன் .

மேற்கத்திய நாடோடிப் பாடல் பின்னணியில் ”டோமரு.. லார்டு…” பாடலை அமைத்தேன் .

அதி தீவிர  ஜாஸ் இசையான ரெட்ரோ ஜாஸ் இசைப் பாணியில் ”ரெட் ரோடு…” பாடல் உருவானது .

1990 களில் இங்கிலாந்தில் தெற்கு லண்டனில் உருவான டப் ஸ்டெப் இசையோடு ஜாஸ் இசையைக் கலந்து காஸனோவா பாடலை அமைத்தேன் .

உண்மையை சொல்லப் போனால் இப்படி ஒரு படத்துக்காகத்தான் நான் காத்திருந்தேன் . எனது இசையை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு சித்தார்த் மிகப் பெரும் உதவியாக இருந்தார்.  பின்னணி இசையிலும் முழு உழைப்பை கொடுத்துள்ளேன் .

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலையும் பல்வேறு சந்தர்ப்பங்களில்  சல்மான் கான் , ஜெயம் ரவி, விஷால் மற்றும் ஆர்யா  ஆகியோர் ஆன்லைனில் வெளியிட்டதும்  எனக்கு மிக சந்தோஷமான விஷயம் ” என்கிறார் , விஷால் சந்திர சேகர்