நண்பருடன் ஹோட்டல் ஆரம்பிக்கும் கஞ்சா கருப்பு !

Actor Kanja Karuppu in Mannar Valaikuda Movie Stillsசுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.சுத்தமாக சோறு போட்டால் பணம் கொட்டும் என்பது புது மொழி எனலாம்.சோறு  போடும் தொழில் அதாவது உணவளிக்கும் தொழில் சோடை போகாது. சல்மான்கான், ஷாருக்கான் என வட இந்திய நடிகர்களில் தொடங்கி விஜயகாந்த், ஆர்யா, ஜீவா, த்ரிஷா, ஆர்.கே, கருணாஸ் என நம்மூர் நட்சத்திரங்களில் பலரும் ஹோட்டல் பிசினஸில் குதித்தவர்கள்.

இதில் சிலர் வெற்றியும், பல நட்சத்திரங்கள் தோல்வியும் கண்டு வந்தாலும் ஹோட்டல் பிசினஸ் என்றால் ஒரு கை பார்த்து விடலாம்… என களம் இறங்காத கலைஞர்கள் குறைவு! அந்த வகையில் ஹோட்டல் பிசினஸில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் இடம் பிடித்தே தீருவேன்… என கங்கணம் கட்டிக்கொண்டு சென்னையில் நல்லதொரு செட்டி நாடு உணவகத்தை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”இத்தனை நாளா நடிச்சு, சிரிச்சு குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருந்தேன். அத வச்சி, ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி, நாலு எழுத்து படிச்சு அறியாத எனக்கு, நாலு ஏழை பிள்ளைங்களுக்கு பயன்படுற மாதிரி இஸ்கூல் ஆரம்பிக்கணுங்கறது ஆசை. அது முடியாத பட்சத்தில் டாக்டருக்கு படிச்ச என் மனைவி சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டி தரணுங்கறது ஆசையா இருந்துச்சு!

இந்த சமயத்தில கூட்டாளிங்க சில பேரு கொடுத்த ஐடியா., கொஞ்சம் காச வச்சிக்கிட்டு முழுசா  இஸ்கூலும் கட்டமுடியாது, பெரிசா ஆஸ்பத்திரியும் கட்டமுடியாது… அந்த காசுல ஒரு படம் சொந்தமா எடுத்தோமுன்னா நல்ல லாபம் கிடைக்கும். அத வச்சு இஸ்கூலு, ஆஸ்பத்திரி, இரண்டையும் கட்டலாம். அப்படின்னு சொன்னாங்க, ஐடியா நல்லாருக்கேன்னு அகலக்கால் வச்சேன்.

jayamஅப்படி சொன்னவரையே டைரக்டரா போட்டு “வேல்முருகன் போர்வெல்ஸ்”ன்னு ஒரு படத்தை சொந்தமா தயாரிச்சு ஹீரோவாவும் நடிச்சேன். ஒரு கோடி ரூபாக்கு மேல நஷ்டம்! அதான்., ஆரம்பத்துல டீக்கடையில வேல பார்த்த நாம் ஏன்? டிபன் கடை போடக்கூடாதுன்னு யோசிச்சேன்..? இந்த சமயத்துல என் கோடம்பாக்கத்து ஆருயிர் நண்பர் பாடலாசிரியர் ஜெயம்கொண்டானின் ஞாபகம் வந்துச்சு!

வளரும் பாடலாசிரியராகவும் இருந்து கொண்டு சினிமா கனவுகளுடன் சென்னை நோக்கி வரும் இளைஞர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும், வேலைவாய்ப்பும் கொடுத்தபடி கே.கே.நகர், காமராஜர் சாலையில் சின்ன இடத்தில் ‘கவிஞர் கிச்சன்’ எனும் ஹோட்டலை பெரிய மனதுடன் நடத்தி வரும் என் நண்பர் ஜெயம்கொண்டான், நல்ல கை பக்குவம் உடையவர். சிவகங்கை சீமையை சேர்ந்த எனக்கும் காரைக்குடி செட்டி நாட்டு சமையல் மீது ஒரு பெரிய பாசம், நேசம் உண்டு. எனவே என் நட்பு ஜெயம்கொண்டானுக்காகவும், சென்னை வாழ் மக்களின் நாக்கிற்கு நல்ல ருசி தருவதற்காகவும் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பல லட்சம் செலவில் ஒரு செட்டிநாடு உணவகம் ஆரம்பிக்க நல்ல இடம் பார்த்து வருகிறேன்! தெரியாத தொழிலில் இழந்ததை நமக்கு தெரிந்த தொழிலில் தானே எடுக்கமுடியும்” என்றார்.

எது, எப்படியோ கவிஞருக்கும், கஞ்சாவிற்கும் ஹோட்டல் தொழில் ஒரு சேர கைகொடுத்தால் சரி!