‘நித்தம் ஒரு வானம்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் பிரதான நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’
படத்தின் கதை என்ன?

வழக்கமாகச் சினிமாவில் காட்டப்படும் கதாநாயக இளைஞர்களைப் போல் பொறுப்பின்மையும் கேளிக்கையும் இல்லாமல் கடமை, பொறுப்பு, நிதானம் என்று இருப்பவர் அசோக் செல்வன்.நிச்சயிக்கப்பட்ட அவரது திருமணம் கடைசி நேரத்தில் தடைப் படுகிறது. சமூகம் அவரைக் கேலி பொருளாகப் பார்ப்பதாக உணர்கிறார். அதனால் மன அழுத்தம் வருகிறது. என்ன செய்வது என்று தெரியாத மனநெருக்கடிக்கு ஆளாகிறார். அப்போது அவரது குடும்ப நண்பரான டாக்டர் அவரை ஆற்றுப்படுத்தும் வகையில் படிக்கச் சொல்லி இரண்டு டைரிகளைக் கொடுக்கிறார்.கதை போல் இருக்கின்ற அதைப் படித்தால் அது நிஜமான வாழ்க்கை என்று அறிகிறார். முடிவைத் தேடிப் புரட்டிப் பார்த்தால் முடிவுக்கான பக்கங்கள் கிழிக்கப் பட்டுள்ளன. முடிவு என்ன என அறிய நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் என்று அவர்களுக்கான தொடர்பு எண்களையும் டாக்டர் கொடுக்கிறார். ஒரு மனமாறுதலுக்காக அந்தப் பயணத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் டாக்டர்.அந்த இரண்டு கதைகளின் முடிவை அறிய முதலில் ஆர்வம் இல்லாமல் புறப்பட்டுப் பிறகு என்னதான் முடிவு என்று பார்த்து விடுவோம் என்று பயணம் செய்கிறார் அசோக் செல்வன். தன் மனதில் அந்தக் கதையைப் பற்றி ஒரு கற்பனை வைத்திருக்கிறார்.சண்டிகர், கொல்கத்தா என்று வட இந்தியப் பகுதிகளுக்குச் செல்கிறார்.

இந்தப் பயணத்தில் அவருடன் வழியில் சந்திக்கும் ரிது வர்மாவும் இணைந்து கொள்கிறார்.
நேரில் போய்ப் பார்க்கும்போது கதையின் முடிவு அவர் நினைத்தபடி அப்படியே இருக்கிறதா? நேர்மாறாக இருக்கிறதா? என்ற திரைக்கதையின் பாதை தான் ‘நித்தம் ஒரு வானம்’ படம்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.

இந்தப் படமே ஒரு பயண அனுபவத்தைத் தருகிறது.பயணம் ஒரு மனிதனுக்கு எப்படி இதயத்திறப்பை அளிக்கிறது என்று சொல்கிறார் இயக்குநர்.

கதை தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு ஒவ்வொரு ஊராக நகர்ந்து செல்கிறது.பயணம் செய்யும்போதுதான் ஒவ்வொரு ஊரிலும் நாம் பார்க்கும் வானம் புதியது என்பதை அறிவோம். அப்போது ‘நித்தம் ஒரு வானம் ‘ என்று உணர்வோம் என்று இயக்குநர் புரிய வைக்கிறார்.

அசோக் செல்வன் அர்ஜுன் என்கிற பிரதான பாத்திரத்தில் வருகிறார்.யாரிடமும் பெரிதாக பேசாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு பேணுபவர் .ஒரு நெறியில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்.அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கையில் மன அழுத்தம் தாக்கும் போது அவர் எப்படி மாறுகிறார்? அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை மையம் கொள்ளும் உணர்வு.
அவர் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு நிலத்தில் நடக்கிற கதைக் காட்சிகளில் தன்னை அந்தப் பாத்திரமாகப் பாவித்துக் கொள்வதால் அந்தக் கதையின் போதெல்லாம் தனித்தனி பாத்திரம் போலவே வருகிறார். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வகையான உடல் மொழி, பேச்சு வழக்கு, பாணி என்று அவர் முக்கியமாக மூன்று விதங்களில் தனித்தனியான பரிமாணம் காட்டியுள்ளார்.

அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ,ரிது வர்மா என்று மூன்று நாயகிகள்.

இந்த மூன்று நாயகிகள் ஏற்றிருக்கும் மூன்று கதாபாத்திரங்களும் மூன்று விதமான நிலச்சூழலில் மூன்று விதமான வாழ்க்கைச் சூழல் கொண்டவை.அவற்றை உணர்ந்து மூவருமே முத்திரை பதித்துள்ளனர்.

அப்பா செல்லமாக இருந்து கொண்டு கட்டுகளை உடைத்துக் கொண்டு விடுதலைப் பறவையாக விரும்பும் மனநிலையோடு வாழ்கிறவர் அபர்ணா. நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்காமல் காதல் திருமணமே செய்து கொள்வேன் இல்லாவிட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுவேன் என மிரட்டுகிற அபர்ணா,கிராமத்தில் அடாவடி செய்து கொண்டு சுதந்திரம் தேடும் ரகளை நாயகி.அவரது திருமணம் எப்படி நடந்தது?

ஷிவாத்மிகா தான் உண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் கல்லூரி மாணவி.தனது கூடைப் பந்தாட்டக் கனவைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பவர். அதை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்?

நினைத்த பாதையில் நடக்கிற எதையும் இலகுவாக எடுத்துக் கொண்டு செல்கிற நவீன யுகத்துப் பெண் ரிது வர்மா.அவர் வாழ்க்கைக்குள்ளும் புயல் அடித்த ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வி இருக்கிறது.அசோக் செல்வனின் பயணத்தில் இணைந்து கொள்ளும் அவரது வாழ்க்கை எப்படிச் செல்கிறது?


இந்த மூவருக்குள்ளும் நுழைந்த காதல் என்ற சரடு அவர்களை யாருடன் எப்படி தொடர்பு படுத்துகிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன என்கிற புதிரைக் கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறார் இயக்குநர். அந்த மூன்று நடிகைகளும் தங்களது பாத்திரத் சித்தரிப்புகளை உணர்ந்து , தங்களுக்கான வேலையைச் சரியாக செய்துள்ளார்கள்.

நாம் எதிர்பார்க்காதவர்கள் சில காட்சிகளில் வருகிறார்கள்.

இவர்கள் தவிர அழகம்பெருமாள், காளி வெங்கட், விருமாண்டி அபிராமி போன்றவர்களும் நடித்துள்ளார்கள். அவர்கள் தங்களுக்கான பகுதிகளில் ஸ்கோர் செய்துள்ளார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு விது அய்யன்னா.படத்தின் காட்சிகள் பல்வேறு பகுதிகளில் பயணிப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக விரியும் நிலக்காட்சிகளை அருமையாகப் படம் பிடித்துள்ளார் .
தமிழ்நாடு , கொச்சி ,சண்டிகர், கொல்கத்தா என்று கேமரா பயணம் செய்துள்ளது. மணல்வெளி,புல்வெளி, மலைப்பகுதி, பனிவெளி என்று பெரிய பயணம் செய்திருக்கிறார்கள்.

இசை கோபி சுந்தர்.பாடல்களும் பின்னணி இசையும் ஒளிப்பதிவைப் போலவே படத்திற்குப் பெரும் பலம்.

இந்த படத்தின் கதையை வாய் வழியாகச் சொல்லும் போது அதன் விரிவைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் சாகரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

பெரும்பாலான படங்கள் அச்சத்தையும் அவநம்பிக்கைகளையும் பதற்றத்தையும் நம்மிடம் தோற்றுவிக்கும் சூழலில் நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்தக் கதை அமைந்து இருக்கிறது.

எல்லாருக்கும் அவரவர் சார்ந்த தனி வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பிரச்சினைகள், தடைகள் இருக்கவே செய்யும். பிரச்சினை என்பது நமது பார்வையில்தான் உள்ளது. ஒரு சிறு கல்லைக் கண்ணருகே காட்டும் போது பெரிதாக தோன்றுவதும், தள்ளி வைத்துப் பார்க்கும் போது சிறிதாக தோன்றுவதும் போலத்தான். எனவே நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது என்பதைச் சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக்.

படத்தில் கிளைக்கும் கதைகள், விரியும் காட்சிகள், நடிகர்களின் நடிப்பு , ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் தங்களுக்கான மேன்மையை வெளிப்படுத்திக் கவனம் பெறுகின்றன.

சிற்சில குறைகளைப் புறந்தள்ளலாம். கதை சொல்லும் விதத்தின் மூலம் மனதைத் தொடும் உணர்ச்சிகரமான காட்சிகள் பல இடங்களில் வருகின்றன. அந்த அனுபவத்தை திரையில் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
‘நித்தம் ஒரு வானம் ‘பார்த்து ரசிக்கலாம்.