படைப்பாளிகள் புத்திசாலியாகவும் இருக்கவேண்டும்: குறும்பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் அறிவுரை!

இயக்குநர்கள் பாலுமகேந்திரா, மணிரத்னம், தாமிரா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராம் மஹிந்திரா.. இவர் இயக்கியுள்ள ‘மனம்’ என்கிற 45 நிமிட குறும்படம் நேற்று மாலை சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடல் நடைபெற்றது.. இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு வருகை தந்த பிரபலங்கள் இந்த குறும்படம் குறித்த தங்களது மதிப்பீடுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்த மனம் குறும்படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்.. பார்த்ததுமே ராமிடம் இத்தனை நாளா எங்கே இருந்தாய், ஏன் இயக்குனர் மணிரத்னத்திடம் இருந்து வெளியே வரவில்லை என்று கேட்டேன்.. அந்த அளவுக்கு இந்த குறும்படத்தை ஒரு திரைப்படம் போலவே நுட்பமாக இயக்கியுள்ளார்.. ஒரு படைப்பாளி திறமையான தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல்.. நல்ல வியாபாரியாகவும் மாற தெரிந்திருக்க வேண்டும்.. நிறைய அறிவாளிகள் இந்த இடத்தில் தான் தோற்றுப் போகிறார்கள்.. அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது புத்திசாலியாக இருக்க வேண்டும்” என்று கூறினார் .

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசும்போது, “இந்த கதை ஆரம்ப நிமிடங்களில் சற்றே மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக விறுவிறுப்பாக மாறி, அதேசமயம் எங்கே அபத்தமாக முடிந்து விடுமோ என்கிற ஒரு பயத்தையும் ஏற்படுத்தியது.. ஆனால் நேர்மையாகவும் பக்குவமாகவும் படத்தை முடித்து இருந்தார்கள். இப்பொழுது நிறைய பேர் படிப்பதை தொலைத்து விட்டார்கள்.. ஆனால் இந்த அடுத்து இயக்குனர் இலக்கியத்தை ஆழமாக ஊன்றி கவனித்து படிக்கிறார்.. அதனால் தான் இந்தப்படத்தில் ஒரு நேர்த்தியை கொண்டு வர முடிந்திருக்கிறது” என்று பாராட்டினார்.

ஒளிப்பதிவாளரும் பல சர்வதேச விருதுகளை அள்ளிய டூலெட் படத்தின் இயக்குநருமான செழியன் பேசும்போது, “ஒரு மிகச்சிறிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு, குறைந்த கதாபாத்திரங்களை வைத்து முக்கால் மணி நேர படமாக பண்ணுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.. இன்னும் சில நிமிட காட்சிகளை இணைத்து இருந்தால் இது ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கும்.. தமிழ் சினிமாவில் வருங்காலத்தில் இந்த குழுவினர் அனைவரும் மிகப்பெரிய இடத்திற்கு வருவார்கள் என்பது உறுதி” என்று பாராட்டினார்.

இயக்குநர் தாமிரா பேசும்போது, “நான் ரெட்டச்சுழி படத்தை இயக்கியபோது அதில் நடித்த 22 குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் 23வது குழந்தையாக ராம் இருந்தான். அப்படி விளையாட்டாக இருந்த ஒரு பையன் இப்படி நெகிழ்வான ஒரு படத்தை எடுப்பார் என நான் நினைக்கவே இல்லை.. இப்போது இருக்கும் சூழலில் அறம் சார்ந்த விஷயங்களை திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது.. மனித மனங்களுக்கு முன்னாடி பொருள் என்பது ஒன்றுமே இல்லை.. ராம் இயக்கும்ம் திரைப்படம் ஒன்றுக்கு ஒரு எழுத்தாளனாக நான் எழுத வேண்டுமென விரும்புகிறேன்” எனது விருப்பத்தை பாராட்டாக வெளிப்படுத்தினார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “குறும்படம் என்றாலே கொஞ்சம் பயப்படும்படியான விஷயம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.. அப்படியான சூழலில் இந்த மனம் என்கிற குறும்படம் மிகுந்த நம்பிக்கையை தருகிறது.. நாம் செய்யும் வேலை என்பது ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.. இந்த குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரிக்க காத்திருக்கிறது. ஆனால் நல்ல தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து நல்ல படங்கள் பண்ண வேண்டும்.. இன்று டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற குறும்படங்களை நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்

இயக்குநர் மணி நாகராஜ் பேசும்போது, “பிறக்கும்போது யாரும் கிரிமினல்கள் ஆக பிறப்பதில்லை.. சூழ்நிலை தான் அவர்களை அவ்வாறு மாற்றுகிறது.. 90களில் வெளியான திரைப்படங்களில் ஹீரோ கெட்டவனாக இருந்தால்கூட அவன் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து திரும்பி வருவதாக க்ளைமாக்ஸில் தவறாமல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.. ஆனால் இப்போது இருக்கும் சினிமாக்களில் நாயகன் மற்றவர்களை ஏமாற்றி ஜெயித்து விட்டால் அதற்கு கைதட்டுகிறார்கள்.. அப்படி மாறிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கருத்தை சொல்லும் விதமாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ள ராம், ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திறமையும் தகுதியும் வாய்ந்த நபர் தான்” என பாராட்டினார்..

இயக்குநர் ’எத்தன்’ சுரேஷ் பேசும்போது, “இன்றைய சூழலில் மனிதநேயம் தான் இல்லாமல் இருக்கிறது.. இந்தப் படம் பேசுகின்ற மனிதநேயம் அளப்பரியது.. இந்த குறும்படத்தை பார்க்கும்போது இதிலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்களது கண்ணோட்டத்தில் உள்வாங்கித்தான் இயக்குனர் மஹிந்த்ரா உருவாக்கியிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதேபோல குறும்படத்தில் நடன காட்சிகள் என்பதே வித்தியாசமாக இருக்கிறது.. இன்னும் 25 நிமிட காட்சிகளை எடுத்து சேர்த்திருந்தால் இது ஒரு திரைப்படமாக மாறி இருக்கும்” என்றார்.

இயக்குநர் ஆடம் பேசும்போது, “எனது மகன் எப்போதுமே கதை கேட்டுக்கொண்டே தூங்குவது போல பழகிவிட்டான். அதனால் இது போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு அவனை அழைத்துச் செல்லும்போது புதிதாக ஏதாவது கற்றுக் கொள்கிறான்.. இந்த படத்தை பார்த்தும் அவன் ஏதாவது நிச்சயம் கற்றுக் கொள்வான். இது குறும்படம் தான் என்றாலும் இந்த படத்தில் ஒரே ஒரு கல்லூரி காட்சியில் வந்து போகும் நாயகியை வைத்து இன்னும் ஒரு மணி நேர காதல் காட்சிகளை டெவலப் பண்ணி இருந்தால் இது ஒரு பீல் குட் திரைப்படம் ஆகவே மாறியிருக்கும்’ என்றார்

இந்த குறும்படத்தின் இயக்குநர் ராம் மஹிந்திரா பேசும்போது, “இந்த கதையில் நடித்திருந்த லீலா சாம்சன் கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததே எனது மாமியார் தான் நான்.. சினிமாவில் நான் நுழைந்த காரணமாக எனது தாயுடன் நெருங்கி பழக முடியாமல் ஒரு இடைவெளி விழுந்தது. ஆனால் மாமியார் மருமகள் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் எனது மாமியாரே தாயாக மாறியதும் இங்கேதான்.. நாம் எது செய்தாலும் தட்டிக்கொடுப்பதற்கு ஒரு பெரிய மனது வேண்டும்.. அது இந்த அம்மாவிடம் இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம்.. அந்த மனது இந்த அம்மாவிடம் இருந்ததால் தான் நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிகழ்வின்போது மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.