‘பத்து தல ‘ விமர்சனம்

சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ,ப்ரியா பவானி சங்கர், கௌதம்மேனன்,டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி , அனுசித்தாரா, மது குருசாமி ,சென்றாயன் நடித்திருக்கிறார்கள்.ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

அரசியல் பின்புலங்கள் இல்லாமல் தாதாக்கள் உருவாவதில்லை. ஒரு தாதா செய்யும் அரசியல் பற்றிய படம் தான் இது.

ஏற்கெனவே கன்னடத்தில் மப்டி என்ற பெயரில் விழுந்து பெரிய வெற்றி பெற்ற படம். சில மாற்றங்களுடன் தமிழில் வந்துள்ளது.

தமிழக முதல்வர் சந்தோஷ் பிரதாப் திடீரென்று காணாமல் போகிறார் .அவரைக் கடத்தியது யார் என்ற விசாரணையில் காவல்துறை இறங்குகிறது.

தமிழகத்தை யார் ஆள வேண்டும் எந்தக் கட்சியில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதை ஏஜியார் என்கிற கன்னியாகுமரி சுரங்க தொழிலதிபர் மற்றும் தாதாவான சிம்புதான் தீர்மானிக்கிறார்.
கௌதம் கார்த்திக் அடியாளாக இருந்து சிம்புவிடம் வேலை செய்ய கன்னியாகுமரி போகிறார். ஆனால் அவர் அடியாள் அல்ல காவல்துறையின் ஆள். சிம்புவைப் பிடிப்பதே அவருக்கு இடப்பட்ட கட்டளை. கடத்தப்பட்ட முதல்வர் கிடைத்தாரா? சிம்புவின் பின்னணி என்ன? கௌதம் கார்த்திக் நினைத்தபடி அந்த தாதாவைப் பிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீது கதை.

பரபரப்பான ஆக்சன் படமாகத்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் இயக்குநர்.
பத்து தலையில் பிரதான நாயகன் சிம்புதான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாதியில் இடைவேளைக்கு முன்புதான் வருகிறார்.அவரைப் படம் முழுக்க வருவது போல் மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது.
இடைவேளைக்கு முன்பு வரும் சிம்பு தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து பார்ப்பவர்களைக் கவர்கிறார். ‘வெந்து தணிந்தது’ காடு படத்தின் மூலம் சில படிகள் மேலே ஏறிய சிம்பு, இப்படத்தின் மூலம் இன்னும் சில படிகள் மேலே ஏறி இருக்கிறார். மணல் மாபியாவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்கிறார் என்கிறபோது அவரது நேர்நிலை அபிப்பிராயத்தை படத்தில் அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். தவறிவிட்டார் இயக்குநர்.

சக்திவேலாக வரும் கௌதம் கார்த்திக் இதில் undercover போலீசாக வருகிறார். இதுவரை நடித்த படங்களைப் போல் அல்லாமல் மாறுபட்ட முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார்.

தாசில்தாரராக பிரியா பவானி சங்கர் வருகிறார். கௌதம் கார்த்திக்கின் காதலியாகவும் இருப்பவர் அவர்.அவருக்குக் காட்சிகள் குறைவுதான்.
துணை முதல்வராக இருக்கும் கௌதம் மேனன் வில்லத்தனம் காட்டுகிறார்.

சிம்புவே பிரதான வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளதால் கௌதம் மேனன் பாத்திரம் வீரியம் குறைந்து விடுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தன் பின்னணிஇசையில் பளிச்சிடுகிறார்.

தமிழுக்காக மேலும் சில மாற்றங்களை செய்து திரைக்கதையை ஆழமாக்கி, அழுத்தமாகவும் கூறி விறுவிறுப்பைக் கூட்டி இருந்தால் பத்து தல ஒரு வணிகப்படமாக மேலும் உயர்ந்திருக்கும்.
கிளைமாக்ஸ் சண்டைகள் நம்பகத்தன்மை குறைந்தவை.
தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை தூக்கித் தாங்கிப் பிடிக்கிறார் சிம்பு.
சிம்பு ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட திரை அனுபவம்.