‘பன்னி குட்டி’ விமர்சனம்

விலங்குகளை வைத்துப் படம் எடுப்பதில் அந்தக் காலத்து தேவர் முதல் இடைக்காலத்து ராமநாராயணன் வரை பலரும் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் சிங்கம் புலி கரடி நாய் குரங்கு பாம்பு என்று எடுத்துள்ளார்களே தவிர யாரும் பன்றியைப் பயன்படுத்தவில்லை. அப்படி ஒரு பன்றிக் குட்டியை கதை மையமாக வைத்து ஒரு முழுப் படம் எடுக்கப்பட்டுள்ளது ,அதுதான் பன்னி குட்டி. மிகப் பிரமாண்ட படங்கள் எடுத்து பிரபலமாக உள்ள லைக்கா நிறுவனம் இந்தச் சிறிய படத்தைத் தயாரித்துள்ளது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும்.

வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை வந்ததால் நொந்து போன கருணாகரன் தற்கொலை முயற்சி செய்கிறார் .அவரைக் காப்பாற்றுகிறார் ராமர்.பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடி சாமியாரான திண்டுக்கல் லியோனி இடம் அழைத்துச் செல்கிறார்.அவர் சிலவற்றை கருணாகரிடம் சொல்ல அவற்றை பின்பற்றும் போது கருணாகரனுக்கு பல விஷயங்கள் பலிக்கின்றன.பிரச்சினைகள் தீர்கின்றன.மீண்டும் சாமியாரை சந்தித்து நன்றி கூறச் செல்லும் போது ஒரு பன்றிக்குட்டி மேல் அவர் பைக் மோதி விடுகிறது.மீண்டும் பிரச்சினைகள். அவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றால் மீண்டும் அந்த பன்றிக் குட்டியின் மீது ஐந்து நாட்களுக்குள் மோத வேண்டும் இல்லாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சாமியார் கூறுகிறார் எனவே பன்றியைத் தேடி ஓடுகிறார் கருணாகரன்.

பெண் வீட்டிலிருந்து சீதனமாகக் கொடுக்கப்பட்டுள்ள
அதே பன்றிக் குட்டியை ஐந்து நாட்கள் பத்திரமாகப் பார்த்துக்கொண்டால் தான் திருமணம் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது யோகி பாபுவிற்கு. அதனால் யோகி பாபு, அந்த பன்றிக் குட்டியைக் குழந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறார்.

கருணாகரன் பன்னி குட்டியின் மீது மீண்டும் மோதினாரா? யோகி பாபுவிற்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் கதை செல்லும் பாதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாகரன் தனது இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார். கதை கேட்ட வகையில் காமெடி காதல் சோகம் பரபரப்பு என அசத்தியிருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் குறைவு தான். அந்தக் குறைவான காட்சிகளிலும் நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

ராமர், தங்கதுரை, சிங்கம் புலி ஆகியோரது கூட்டணியின் காமெடி படத்தில் களை கட்டுகிறது. குறிப்பாக சிங்கம்புலியின் காமெடி பெரும்பாலான படங்களில் எரிச்சலூட்டும். ஆனால் இப்படத்தில் எடுபட்டுள்ளது. இது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கிருஷ்ண குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளன.

பன்றிக்குட்டியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடி ஓடிக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன், காட்சிகளை ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்.ஏன் அந்தப் பன்றிக்குட்டியையும்தான்.

ரவி முருகையாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அனுசரன், காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.இப்படிக் கூட சிந்திக்க முடியுமா என்று காட்சிகள் மூலம் ரசிக்கச் செய்கிறார்கள்.

வாழ்க்கையில் பிரச்சினை வரும் போது சிந்தித்து தீர்வு காண வேண்டுமே தவிர சாமியார்களிடம் செல்லக் கூடாது என்ற
கருத்தை இயக்குநர் அனுசரன் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் கலகலப்பான ஒரு Funny யான படம் தான் இந்த பன்னி குட்டி.