‘பர்த் மார்க்’ விமர்சனம்

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா மேனன், தீப்தி ஓரியண்டலு, இந்திரஜித் ,பி ஆர் வரலட்சுமி, பொற்கொடி செந்தில் நடித்துள்ளனர். விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கியுள்ளார்.
உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் .விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.இனியன் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.சேப்பியன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

காதலர்கள் இருவர் கண்களைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுவது போல் அதாவது கண்ணைக் கட்டி காட்டில் விட்டு ஒருவரை ஒருவர் தேடுவது போல் காட்சியுடன் படம் தொடங்குகிறது. பிறகு கதை மெல்ல நகர்கிறது.டேனியல் – ஜெனிபர் என்கிற பெயர் கொண்ட அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் .

டேனியல் தனது காதல் மனைவி ஜெனிபரைக் கேரளாவில் ஒரு மலைப் பகுதியில் மேடு பள்ளம் கடந்து சிரமப்பட்டு அழைத்துச் செல்கிறான்.அங்கே தான் இருக்கிறது தவந்திரி பர்த்திங் வில்லேஜ் .அதாவது இயற்கை முறையில் பிரசவம் பார்க்கும் பாரம்பரிய மருத்துவமனை.
இங்கே தன் மனைவியைக் கொண்டு சேர்க்கிறான் டேனியல் .ஆனால் அவளுக்கு அந்த புதிய இடம் பயத்தையும் சந்தேகத்தையும் அளிக்கிறது. அந்த மருத்துவ முறை மீது அவநம்பிக்கையுடன் இருக்கிறாள். பிறகு மெல்ல மனம் மாறுகிறது. இருந்தாலும் சில விரும்பத்தகாத ஏதோ ஒரு அமானுஷ்யம் நிகழ்வதாக அவளுக்கு உள்ளுணர்வு சொல்கிறது.

டேனியலும் அவ்வப்போது சாதாரண தனது குண இயல்பிலிருந்து அதீத மனநிலைக்கு மாறுகிறான். காரணம் கேட்டால் அவன் ராணுவத்தில் அந்த போர்க் காலத்தை மனதில் நினைக்கும் போதெல்லாம் அப்படிப் பதற்றமாகித் தன் வசம் இழந்து விடுவதாகக் கூறுகிறான் .இந்நிலையில் அங்கே இருக்கும் ஒரு சரியாக பேச்சு வராத ஒரு வேலைக்காரனுக்கும் டேனியலுக்கும் பகைமை மூள்கிறது.

நிறைமாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு அவ்வப்போது வெளியே செல்கிறான் டேனியல். இதனால் அவள் பதற்றத்துக்குள்ளாகிறாள்.அவளுக்குள் சந்தேகப்பொறி எழுகிறது.
ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை பிறப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் உணர்கிறாள்.ஒரு கட்டத்தில் குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என்று அவன் பேசுகிறான் .அவன் மீது சந்தேக நிழல் படிகிறது.பிறகு தான் தெரிகிறது அவனுக்கு அவள் மீது சந்தேகம். அத தன் குழந்தை அல்ல என்று நினைக்கிறான். இந்நிலையில் அவள் அது தவறு இது உன்னுடைய குழந்தை தான் என்று அவனிடம் கூறுகிறாள். ஒரு நிலையில் அவனை நம்பாமல் அவள் தனது குழந்தைக்கு ஏதாவது அவனால் ஆபத்து வருமோ என்று அஞ்சி, துணிச்சலாக ஒரு காரியத்தைச் செய்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாக தன்னந்தனியே வெளியே சென்றவளுக்கு என்ன ஆனது? அவனது நிலை என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை

படத்தில் மிர்னா மேனன் ஜெனிபர் பாத்திரத்தை ஏற்றுள்ளார் .அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஓடி ஆட முடியாது .கை கால்களை ஆட்டிப் பேச முடியாது . மென்மையாகத்தான் உடல் மொழியை காட்ட முடியும்.ஆனாலும் அவர் தனது முக பாவனைகள் மூலம் அந்த பாத்திரத்தின் உடல் வலி மன வலி என்று அதன் முழு பரிமாணத்தையும் வெளிக் கொணர்ந்து விடுகிறார்.
தனது வலிகளை உதட்டசைவிலும் மூக்கசைவிலும் கண்களின் அதிர்விலும் காட்டி சிறந்த நடிப்பை அவர் வழங்கியுள்ளார்.

அடுத்தபடியாக டேனியலாக வரும் ஷபீர் சாதாரணமாக இருக்கும் போது ஒரு மனிதனாகவும் அப்பாத்திரத்துக்குள் எண்ண ஓட்டம் மாறும்போது வேறொரு முகத்தையும் காட்டி அவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

திக்கி திக்கிப் புரியாமல் பேசும் அந்த கேரளத்து வேலைக்காரன் பாத்திரத்தில் வருபவரும் மனதில் பதிகிறார்.

தவந்திரி மருத்துவமனையில் வரும் அம்முலு பாத்திரத்தில் வரும் தீப்தி ஓரியண்டலு வும் மருத்துவராக ஆஷா பாத்திரத்தில் வரும் பொற்கொடி செந்திலும் அளவான நடிப்பினை வழங்கி உள்ளார்கள்.

வழக்கமான சினிமா பாதையில் இருந்து ஓடு பாதை விலகி இந்தக் கதையை உருவாக்க முயன்ற இயக்குநரை முதலில் பாராட்டலாம்.117.33 நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தில் ,எந்தவித பிரம்மாண்டங்களின் திணிப்பும் இல்லாமல் வழவழ வசனங்களும் இல்லாமல் ஆர்பாட்டம் இல்லாமல் இரு பாத்திரங்களின் மன உணர்வுகளைக் காட்டும் நோக்கத்திலேயே முழுப்படத்தை எடுத்துள்ளார். மற்ற எதிலும் கவனம் செல்லாமல் அவ்வப்போது மர்ம முடிச்சுகள் போட்டுக் கொண்டே இந்தக் கதையை எடுத்துக் கொண்டு சென்று முடிவை ரசிகர்கள் கையில் ஒப்படைக்கிறார். இந்த முயற்சிக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

இயற்கை முறையிலான பிரசவம் குறித்துப் படிப்படியாக விளக்கப்படுகிறது. அது சார்ந்த விவரங்கள் பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்

படத்தில் ஒளிப்பதிவையும் இசையையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். செயற்கை ஒளிஅமைப்புகளுக்கு இடமில்லாத இடங்களில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்து படத்தை உயிர்ப்புடன் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் .அதேபோல் வழக்கமான வாத்திய இரைச்சல்களோ மிகை ஒலிகளோ காட்டாமல் அளவான கருவிகளின் மூலம் புதிய பின்னணியை வழங்கியிருக்கிறார் விஷால் சந்திரசேகர். மனதில் நிற்கும் ஒரு பாடலையும் இரண்டாவது பாதி படத்தில் வழங்கி உள்ளார்.

மொத்தத்தில் ஆங்காங்கே எழும் சில கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பர்த்மார்க் ஒரு புதிய முயற்சி எனலாம். புதிய முயற்சிகளை காணும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.