’பைரி’ திரைப்பட விமர்சனம்

சையத் மஜித் , மேகனா எலன்,ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார் நடித்துள்ளனர். ஜான் கிளாடி இயக்கியுள்ளார். அருண்ராஜ் இசையமைத்துள்ளார். வி. துரைராஜ் தயாரித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு, காளைப் பந்தயம், சேவல் சண்டை, ரேக்னா ரேஸ் போன்றவற்றை வைத்துப் படங்கள் வந்துள்ளன.புறா பந்தயத்தை மையப்படுத்தி இந்த ‘பைரி’ படம் உருவாகியுள்ளது.படத்தின் பெயரில் உள்ள பைரி என்பது புறாக்களை வேட்டையாடும் ஒரு கழுகு இனமாம்.

படத்தின் கதை என்ன?

வழக்கம் போலவே இந்தப் படத்தின் நாயகன் மஜித்தும் வேலைக்கு ஏதும் செல்லாமல் இருக்கிறார். புறா வளர்த்து அதைப் பந்தயத்தில் ஈடுபடுத்துகிறார்.இன்னொரு பக்கம் ஊரில் பெரிய ரவுடியாக இருக்கும் வினு லாரன்சும் புறாப் பந்தயம் நடத்துகிறார். ஆனால் நேர்மையான வழியாக இல்லாமல் மோசடி வழியில் நடத்தி வெற்றி பெற நினைக்கிறார்.அவர் பந்தயத்தில் செய்யும் மோசடியை மஜித் அம்பலப்படுத்துகிறார். அதனால் இருவருக்கும் பகை வளர்கிறது.இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு நாயகனுக்கு சிக்கல்கள் விடுகின்றன அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் கூறுகிற படம் தான் ‘பைரி’.

பந்தயப் புறா வளர்ப்பின் பின்னணிகளை இந்தப் படத்தில் விரிவாகக் காட்டுகிறார்கள்.அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தைத் தருகிறது.

படத்தின் கதை நாகர்கோவில் பின்னணியில் நடப்பதால் அந்த நாகர்கோவில் மக்களின் வாழ்க்கையை செயற்கைப் பூச்சின்றி யதார்த்தமாகக் காட்டுகிறார்கள்.

கதாநாயகனாக மஜீத் நடித்துள்ளார். அவரது நடிப்பில் பழகுநர் தகுதி தெரிகிறது. சில காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கலாம்.மற்றபடி பெரிதாக உறுத்தல் இல்லை.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பளிச் ரகம்.பார்ப்போர் மனதில் பளீரெனப் பதியும் .

இயக்குநர் ஜான் கிளாடி படத்தில் கதாநாயகனின் நண்பனாக வருகிறார். ஒரு நடிகராக அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.

சுயம்பு என்கிற பெயரில் எதிர்மறைப் பாத்திரம் ஏற்று நடித்துள்ள வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி உள்ளன.

ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோவில் மண்ணின் அழகும் மக்களின் வாழ்வியலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இசை அமைப்பாளர் அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன.பின்னணி இசையிலும் குறை ஒன்றும் சொல்வதற்கில்லை.

இயக்குநர் ஜான் கிளாடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாக வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களைத் திருப்தி கொள்ளச் செய்கிறார்.நடிகர்களில்  புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் அனைத்து கதாபாத்திரங்களையும் அடையாளம் கண்டு மனதில் மீள் நினைவூட்டும் படியாக குணச்சித்திரங்களை அமைத்துள்ளார்.

மொத்தத்தில், இந்த ‘பைரி’-யை பார்த்தவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு பட உருவாக்கம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.