‘பார்க்கிங்’ விமர்சனம்

நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரரின் அன்பும் நட்பும் தயவும் தேவை என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் தான் நாம் அவசரத்துக்குக் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வருபவர்கள். ஆனால் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஏற்படும் பகை பெரிய மன உளைச்சலைத் தரக்கூடியது.அப்படி ஒரு குடியிருப்பில் கீழே மற்றும் மேலே இருக்கும் இரு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையே பார்க்கிங் சம்பந்தமாக நடக்கும் மோதலும் அம்மனிதர்களின் ஆணவச் சிக்கலும் அதன் விளைவுகளும் தான் பார்க்கிங் படத்தின் கதை.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

எம்.எஸ்.பாஸ்கர்அரசு வேலையில் இருக்கிறார்.அவர் பாத்திரத்தின் பெயர் இளம்பரிதி.ஹரிஷ் கல்யாண் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.அவர் பாத்திரத்தின் பெயர் ஈஸ்வர்.கீழே பாஸ்கர் குடும்பமும் மேலே ஹரிஷ் குடும்பமும் வசிக்கிறது.

ஈஸ்வர் புதிய கார் ஒன்றை வாங்கி அதை வீட்டில்  பார்க்கிங் செய்வதில்  இளம்பரிதியுடன் பிரச்சினை வருகிறது. புகை போல நுழையும் பகை விரிந்து இரு குடும்பத்தின் நடுவே பெருவெடிப்பாக நிகழ்வதுதான் கதை.பகை நுழைந்து எவ்வளவு ஆக்ரோஷமாக விபரீதமாக கீழ்த்தரமாக விரிகிறது என்பதுதான் திரைக்கதை.

ஒரு சின்ன இழை போன்ற பிரச்சினையை எடுத்துக் கொண்ட நூலாக்கி திரைக்கதை நெய்து படமாக்கி உள்ளார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ஏற்கெனவே குணச்சித்திர நடிப்புக்குப் புகழ்பெற்ற எம் எஸ் பாஸ்கரும் வளர்ந்து வரும் கதாநாயகனாக நன்கு அறிமுகமான ஹரிஷ் கல்யாணும் இதில் எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இருவருக்கும் நடிப்பில் போட்டியே நிகழ்கிறது.

எம் எஸ் பாஸ்கர் பழைய மனம் கொண்ட மனிதராக வருகிறார்.பழைய ரேடியோ,மிக்ஸி என எதையும் மாற்றாமல் பழுது பார்த்து ஓட்டுபவர் அவர்.கேள்வி கேட்கும் மனைவியை அடிக்கும் அளவிற்கு ஆணாதிக்கவாதி.திருமண வயதில் பெண் இருக்கும் ஒரு தந்தை தன்னுடைய ஆணவத்தின் மூலம் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்குகிறார் என்பது அந்த பாத்திரத்தின் மூலம் வெளிப்படுகிறது.

நவீன சமகால உலகத்தின் பிரதிநிதியாக ஹரிஷ் கல்யாண் வருகிறார்.அவரது புது மனைவியாக இந்துஜா வருகிறார்.சிரிப்பதற்கு வாய்ப்பே இல்லாத அந்தப் பாத்திரம் அனுதாபத்தை அள்ளுகிறது.

கட்டுப் பெட்டித்தனம் கொண்ட மனதுடன் கணவனின் மமதைக்குப்  பலியாகும் ஒரு சராசரித் தமிழ்ப் பெண்மணியாக ’என் உயிர்த்1aதோழன்’ ரமா வந்து மனதில் பதிகிறார். ஒரு   நியாயமான ஹவுஸ் ஓனராக . சில காட்சிகளில் வருகிறா இளவரசு தன் அனுபவ நடிப்பால் அடையாளம் பெறுகிறார்.

படத்தின் ஆரம்ப நிலையிலேயே கதையின் முடிவை நாம் யூகிக்க முடிந்தாலும் அதை நோக்கிச் செல்லும் பாதையை சுவாரசியமாக்கி உள்ளார் இயக்குநர்.படத்தில் பல பரபர தருணங்கள் உள்ளன.சமகால மக்கள் வாழ்க்கையோடு அதைப் பொருத்திப் பார்க்க முடிவதால் அந்த சுவாரசியம் ரசிக்க முடிகிறது.

சாம் சிஎஸ்ஸின் இசையும் ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்துள்ளன.

சற்று பொறுத்துப் போயிருக்கலாம், விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை என்பதை இறுதியில் உணர வைக்கிறார்கள்.

உலகமயமாக்கலில் அனைத்தும் எந்திரமயமாகிப் போய்விட்ட இந்தச் சூழலில் அண்டை வீட்டாரின் அவசியத்தை உணர்த்துகிறார்கள்.

அளவான பட்ஜெட்டில் பார்ப்பவர்கள் அனைவரையும் தொடர்பு படுத்திக் கொள்ளும்படியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர்.

நல்ல திரை அனுபவத்தைத் தருவதால் ஒன்றிப் பார்த்து இந்தப் ‘பார்க்கிங்’ கில் மனதை நிறுத்தலாம்.