‘பாலன் – தி பாய்’ திரைப்பட விமர்சனம்

ஃபர்ஸானா பலத்திங்கல்  ,ஆதிசேஷன் கே. ஆர் ,சினான்,,ஜீன் பால் லால்,கிரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சிதம்பரம்.இவர் ஏற்கெனவே மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்கியவர்.
எழுத்து: ஜித்து மாதவன்,
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்,
இசை: சுஷின் ஷியாம்,

படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், கலை இயக்கம்: அஜயன் சாலிசேரி.
தயாரிப்பாளர்கள்: கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் வெங்கட் கே. நாராயணா மற்றும் தெஸ்பியான் பிலிம்ஸ் ஷைலஜா தேசாய் ஃபென்.

ஒரு தாய் தன் மகனுக்குக் கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது.அவள் தனது வாழ்க்கைக் கதையையே கற்பனைக் கதை போல மகனுக்குக் கூறுகிறாள்.கதை, பாத்திரங்களை முதலில் கற்பனை என்ற நினைத்துக் கொள்கிற சிறுவன் பிறகு தனது வாழ்க்கை என்று புரிந்து கொள்கிறான்.

குற்ற செயலுக்குச் சிறை சென்ற அவள் சிறையிலேயே குழந்தை பெற்றுக் கொண்டு ஓர் இல்லத்தில் தங்கி எங்கும் நிம்மதி இல்லாமல் வெளிவந்து தன் மகனுடன் இந்த உலகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறாள்.பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் பல்வேறு பொய்களைச் சொல்லி போய்க் கொண்டே சென்று கொண்டிருக்கிறாள்.தன்னைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் தனக்கும் யாரையும் தெரிய வேண்டாம் என்று ஒரு சிறு வட்டத்துக்குள் தனது உலகமாக நினைத்துக் கொண்டு மகனிடம் கதைகளைக் கூறுகிறாள்.இருந்தும் சமுதாயம் அவளை அச்சுறுத்துகிறது. வேலைக்கு அலைந்து ஒரு கட்டத்தில் தனியாக வசிக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்துக்கொண்டு பராமரிக்கும் வேலை கிடைக்கிறது.அந்த இடம் அவளுக்குப் பாதுகாப்பாக உணர வைக்கிறது. அதுவரை யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் மனதிற்குள் அச்சத்துடன் இருக்கும் அவள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டவள், தன் மகனைப் பள்ளியில் சேர்க்கிறாள். தினமும் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது ஓர் இடத்தில் காத்திருக்கச் சொல்வாள் அன்றும் அவன் காத்திருக்கிறான். ஆனால் அவள் வரவில்லை.
அவன் மட்டும் அல்ல அவளும் கொடியவர்களால் திசை மாறிச் செல்கிறார்கள்.
பிரிந்த தாயும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா ?இருவருக்கும் என்ன ஆனது? என்பதைப் பரபரப்பான திருப்பங்களுடன் சொல்வது தான் 147.49 நிமிடங்கள் கொண்ட ‘பாலன்’தி பாய் திரைப்படம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், ஒடுக்குதலுக்கும் சமூக அழுத்தத்திற்கும் ஆளான ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தையும், அச்சத்தையும் கோபத்தை ஆவேசத்தையும் அதிகம் பேசி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தன் கண்களைக் கொண்டே வெளிப்படுத்தி உள்ளார்.குற்ற உணர்ச்சியும் புதிரும் பூடகமும் நிறைந்த அந்தப் பாத்திரத்தில் அவர் சரியாகவே வெளிப்பட்டுள்ளார்.

சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர், தன் அம்மாவுக்கு இணையாக அதிகம் பேசாமலேயே விழிமொழி பேசி உடல் மொழி காட்டி உணர்வுகளைக் கடத்தி விடுகிறான்.

வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன், பிரிந்த அம்மாவைத் தேடும் பயணத்தில் பாசத்தைக் காட்டி உணர்ச்சிகரமான நடிப்பில் கவர்கிறார்.

பவித்ரன் பாத்திரத்தில காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், பகை உணர்ச்சியைப் பழிவாங்க பயன்படுத்தும் எதிர்மறைப் பாத்திரத்தில் வருகிறார்.

வித்தியாச தோற்றத்தில் வந்து சிறப்புத் தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸின், திரை இருப்பு படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வுகளாக உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், பாத்திரங்களை மட்டுமல்ல பின்புலங்களையும் அழகாகக் காட்டியுள்ளார்.கேரளாவின் இயற்கைச் சூழல் படம் பார்ப்பவர்களுக்கு நல்ல காட்சியின்பத்தை அளிக்கிறது.

சுஷின் ஷாம் இசையில் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகிறது.

எளிமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதைக் கொண்டு சென்றிருக்கிற விதம் ஒரு வாழ்க்கைப் பயணம் போல் அமைந்து பார்வையாளர்களை உடன் அழைத்துச் செல்கிற அனுபவத்தைத் தருகிறது.

தொய்வில்லாத வகையில் படத்தைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.

அடுத்த நிமிடம் என்னவென்று தெரியாத மர்மத்தை ஒளித்து வைத்திருக்கும் வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நிகழலாம் என்கிற பார்வையில் பரபரப்போடு செல்கிறது இந்தப் படத்தின் கதை.

யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமாகச் செல்கிற திரைக்கதை இயக்குநரின் திறமைக்குச் சான்று கூறுகிறது. மொத்தத்தில் நல்லதொரு திரையனுபவம்.

‘பாலன்’ கவர்வான்.