’பிரேமலு’ விமர்சனம்

நஸ்லென், மமிதா பைஜு, அல்டாப் சலீம், ஷியாம் மோகன் எம், அகிலா பார்கவன் ,மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர்கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.கிரிஷ் ஏ.டி,இயக்கியுள்ளார்.

காதலுக்கான பொருளும் புரிதலும் இப்போது மாறி உள்ளன. இப்போதெல்லாம் காதல் தோல்வியில் யாரும் தாடி வளர்ப்பதில்லை. ‘தாவணி போனால் சுடிதார் உள்ளதடா’ காலமிது. அப்படிப்பட்ட காலத்தில் நிகழும் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டு பிரேமலு திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் கிரிஷ் .ஏ.டி.பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

நாயகன் நஸ்லென் கல்லூரி மாணவர் . அவருக்குச் சக மாணவி மீது ஒரு தலை காதல்.ஆனால் அது தோல்வியில் முடிகிறது. தோல்வி மனம் அதில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறது. அதுவும் தோல்வியில் முடிகிறது.தனது நண்பனுடன் ஹைதராபாத்திற்கு ஒரு திருமணத்திற்குச் செல்கிறார். அங்கே இன்னொரு பெண்
மமீதா பைஜுவைச் சந்திக்கிறார் .அவர் மீதும் காதல் கொள்கிறார். ஆனால் அவர் 21 ஆம் நூற்றாண்டுப் பெண் . அவரது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் அறிந்து,புறக்கணிப்பு உணர்வைப் பெறுகிறார் நாயகன்.விடாமல் துரத்தினால் வெற்றி பெறலாமோ என்று முயற்சி செய்கிறார்.அதனால் அங்கேயே தங்குகிறார்.அவரது இரண்டாவது காதல் வெற்றி பெற்றதா என்பதைக் கலகலப்பாகவும் நகைச்சுவையோடும் இளமைத்துள்ளலோடும் நடப்புக்கால யதார்த்தத்தோடும் கூறி இருக்கிறார் இயக்குநர்.

இது ஒரு மலையாளப் படம் என்றாலும் ஐதராபாத், சென்னை என்று பயணித்து இதை ஒரு தென்னிந்தியப் படமாக உணர வைக்கிறது.

நண்பர் வேடங்களில் சில படங்களில் முகம் காட்டிய நஸ்லென், இதில் நாயகனாக நடித்துள்ளார். விருப்பம், ஆசை, காதல், தவிப்பு, தோல்வி ,சோகம், நகைச்சுவை என்று கலந்து கட்டி நடித்துள்ளார்.

நாயகி மமீதா பைஜு நடிப்பில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைச் சூழ்ந்துள்ள பாத்திரங்களிலிருந்து தனியே தெரிகிறார்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், தனது டைமிங் காமெடி மூலம் கவனம் ஈர்க்கிறார். வில்லனாக வரும் ஷ்யாம் மோகனின் வில்லத்தனம் குழந்தைத்தனமாகி சிரிக்கவும் வைக்கிறது. நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்கள் சமீர் கான், அல்தாப் சலீம் ஆகியோரும் தங்கள் நடிப்பின் மூலம் படத்திற்குப் பலம் சேர்க்கிறார்கள்

சென்னை, ஐதராபாத் நகரங்களின் நகரிய மினுமினுப்பையும் ஜொலிப்பையும் மட்டுமல்ல கேரளா ஆந்திர கிராமங்களின் அழகையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு .அது மட்டுமல்ல கதாபாத்திரங்களாக வரும் இளைஞர்களின் கலகல மகிழ்ச்சித் தருணங்களையும் தனது கேமரா மூலமாக கடத்தியிருக்கிறார்.

விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. இருந்தாலும் ரசிக்க வைக்கும் ரகம்.சாதாரண காதல் படத்தை ரசிக்குமாறு தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்.இயக்குநர் கிரிஷ் ஏ.டி, பரபரப்பான செயற்கையான திருப்பங்கள் இல்லாத ஒரு கதையை எடுத்துக் கொண்டு சச்சின் – ரீனு என இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரியான திருப்தியான கேளிக்கை உணர்வு தரும் ஜாலியான படத்தை கொடுத்துள்ளார்.

காலமாற்றம் அனைத்து உணர்வுகளைப் பற்றிய பார்வையையும் மாற்றி உள்ளது .காதல் தோல்வியும் கடந்து போகக் கூடிய ஒன்றுதான் என்று இளைஞர்களுக்குச் செய்தியையும் சொல்லி உள்ளார்.அதுதான் வாழ்வில் யதார்த்தம் என்பதை இக்கால இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.