‘பூமிகா’ விமர்சனம்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், அவந்திகா, விது,  சூர்யா கணபதி,  மாதுரி ,  பாவல் நவகீதன் மற்றும் பலர்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம்  உருவாகியுள்ளது.ஒரு விபத்து மரணம் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள் நிகழும் என்கிற பரபரப்போடு தொடங்குகிறது கதை.
ஒரு சாதாரண பழிவாங்கும் கதையோ என்று நினைத்தால் முன்கதைக் காட்சிகளால்  வித்தியாசமான அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது கதை.பூமியையே பூமிகா வாக உருவகித்து காட்டியிருக்கிறார்இயக்குநர்,. அது ஒரு கற்பனையாக இருந்தாலும் சிந்திக்க வைக்கிறது.

ஐந்து பேர் ஊட்டியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணிக்காக செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு அமானுஷ்ய சக்தி ஒன்று தொல்லை கொடுக்க, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா, அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை. 

சமூகப் பிரச்சினை என்ற கதைக்களத்தோடு சேர்த்து சொல்லியிருப்பதால், மற்ற பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசப்படுவதோடு, ரசிக்கும்படியாகவும் இருக்கிறது

படத்தில் நடித்த அனைவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.இந்த வரிசையில் இதுவும் ஒன்று.விது,  சூர்யா கணபதி,  மாதுரி ,  பாவல் நவகீதன்ஆகியோர்  குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள். பூமிகா வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறார்.

ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும், பிருத்வி சந்திரசேகரின் இசையும் கதாபாத்திரங்களாக பயணித்துள்ளன.

முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், ஊட்டியில் நடக்கும் அடுத்தடுத்த திகில் சம்பவங்கள் மூலம் படம் முழுவதும் சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார். திகில் காட்சிகள் மூலம் படம் பார்ப்பவர்களை பயமுறுத்த செய்வதோடு, இயற்கை விடும் எச்சரிக்கையை நமக்கு நினைவு கூரவும் செய்கிறார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை பின்னியதற்கு ஒரு சபாஷ். இயற்கையைப் பற்றிய கருத்தோடு உருவாகியுள்ள  பூமிகா திரைப்படம் முதல் பாதி நன்றாகவே சென்றது. திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில குறைகள் இருந்தாலும், படத்தின் கதைக்களமும், அதை ஒரு படமாக சொல்லிய விதத்தாலும் இயக்குநர் ரத்திந்திரன் ஆர்.பிரசாத்தையும், ‘பூமிகா’ வையும்  பாராட்டலாம்.

பூமியை மாசுபடுத்தாமலும் புவி வெப்பமயமாகாமலும் இருப்பதற்காக நல்ல கருத்தைச் சொன்னதற்காக அந்த பூமியையே ஒரு கதாபாத்திரமாக வைத்து கதை அமைத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.நவீன கதை அமைப்புகளில் இப்படி மாய எதார்த்த கதைகளுக்கும் இடமுண்டு.ஓடிடியில்  வெளியாகும் இதை ,இதுவும் ஒரு திரைவடிவம் என்று இதை வரவேற்கலாம்.