‘மறக்குமா நெஞ்சம்’ விமர்சனம்

ரக்சன், மாலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த்,அருண் குரியன், அகிலா, ஆஷிகா காதர், விஷ்வத் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கி உள்ளார் இரா.கோ.யோகேந்திரன்.ஒளிப்பதிவு -கோபி துரைசாமி,
இசை – சச்சின் வாரியர்,பாடல் வரிகள் – தாமரை.ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் & குவியம் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளன.

இது ஒரு நாஸ்டால்ஜியா ரகத்திலான படம். கடந்த கால ஏக்கத்தை ,மலரும் நினைவுகளைச் சொல்கிற கதை. சரி படத்தின் கதை என்ன?

கார்த்திக்,(ரக்சன் ) மாலினா, (பிரியதர்ஷினி ) தீனா இன்னும் சில வகுப்புத் தோழர்கள் படித்து முடித்து பத்தாண்டுகள் கழித்து அவர்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் அதற்குக் காரணம் அவர்களது தேர்வு முடிவுகளில் பிரச்சினை வருகிறது.மூன்று மாதங்கள் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நேரம் கூடி வந்த வேளை நெஞ்சை மூடி வைத்த கோழையாக இருக்கும் கார்த்திக் பத்தாண்டுகளுக்கு முன்பு சொல்லாத காதலை பிரியதர்ஷினியிடம் கூறிவிட நினைக்கிறார். ஆனால் அவருக்கோ திருமணம் நிச்சயமாகி உள்ளது.இந்நிலையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மலரும் இந்தக் காதல் என்ன ஆனது? மீண்டும் எழுதிய தேர்வுகள் என்னானது?இதுதான் மறக்குமா நெஞ்சம் படம்.

மெல்லுணர்வுகளைத் தூண்டும் களமாக இருந்து, நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்க வாய்ப்புள்ள கதைதான் இது.ஏனென்றால் அனைவருக்கும் கடந்த காலத்தில் ஊடுருவிச் சென்று திரும்பி பார்ப்பது பிடிக்கும்.அந்த வகையில் எடுத்துக் கொண்ட கதைக்களம் வரவேற்புக்குரியதுதான்.

இருந்தாலும் வலுவான திரைக்கதை அழுத்தமான காட்சிகள் இல்லாததால் படம் செவ்வியல் தன்மையில் இருந்து சாதாரண நிலைக்கு இறங்கிவிட்டது.

நாயகன் ரக்சன்,காதலை நினைத்து உருகுவது, அதை வெளிப்படுத்தத் தயங்குவது என 90களின் நாயகர்களை, குறிப்பாக இதயம் முரளி போன்றவர்களை நினைவூட்டுகிறார். அவ்வகையில் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.நாயகன் ரக்சன் மேலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கலாம்.
நாயகியாக மாலினா நடித்துள்ளார்.பள்ளி மாணவியாக தோற்றத்தில் கவரும் அவர், கிடைத்த , நடிப்புத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நாயகனது நண்பராக வரும் தீனா, நகைச்சுவைக் காட்சிகளில் மிளிர்கிறார். அதுவும், காதல் விவகாரத்தில் நண்பனைச் சீண்டும் காட்சிகளில் கலகலப் பூட்டுகிறார்.ப்ராங் ஸ்டார் ராகுல் சிறு வேடத்தில் வந்தாலும் பதிகிறார்.

இதுவரை படங்களில் சிரிக்க வைத்த  முனிஷ்காந்த் இப்படத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வருகிறார்.
அமைதியான பாத்திரத்தில் வருகிறார். தனது மனைவி இறந்த பிறகு வெளிப்படுத்தும் சோகம்..மனதைத் தொடும்.அவரது மனைவியாக வரும் அகிலாவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.நாயகியுடன் நடித்த ஆஷிகா, நட்டாலியா, ஸ்வேதா ஆகியோர் நடிப்பிலும் குறை ஒன்றும் இல்லை.

சச்சின் வாரியரின் இசை இளையராஜாவை நினைவூட்டினாலும் பாடல்களை விட பின்னணியில் கவனம் பெறுகிறார்.

கோபி துரைசாமியின் ஒளிப்பதிவில் குளோசப் காட்சிகள் நன்றாக உள்ளன.நமது பள்ளிப் பருவத்து துள்ளல்கள், குறும்புகள், சேட்டைகள், அனைத்தும் இப்படத்தில் பதிவாகியுள்ளன. அதே நேரம் இப்படிப்பட்ட படத்தில் நெகிழ்வூட்டும் காட்சிகள் தான் படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும். கலகலப்புக்கு உழைத்த அளவுக்கு இயக்குநர் நெகிழ்ச்சி ஊட்டும் தருணங்களை அதிகப்படுத்தி இருந்தால் படத்தின் தோற்றம் மாறி இருக்கும்.

மலரும் நினைவுகள் என்றும் இனியவை. கனாக்காணும் காலங்கள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை. அந்த ரீதியில் படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் இரா.கோ.யோகேந்திரன். நம்மையும் சில ஆண்டுகள் முன்னே அழைத்துச் சென்று ,மறக்குமா நெஞ்சம் படத்தின் மூலம் மனதுக்கு இனியநினைவுள்ள கடந்த காலத்தில் உலவ விடுகிறார் இயக்குநர்.அந்த வகையில் அவருக்கு இது வெற்றியே.

.

 

 

 

 

 

.