‘மாமன்னன்’ விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால்,விஜயகுமார், அழகம்பெருமாள் நடித்துள்ள படம்.இசை ஏ. ஆர். ரகுமான், ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர், இயக்கம் மாரி செல்வராஜ், தயாரிப்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ் .

சாதி அரசியல் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாதிய அடுக்கு முறைகளால் ஒடுக்குதலுக்குள்ளான ஒரு அப்பா பிள்ளை பற்றிய கதைதான் இது. தனது தந்தையை அரசியல்வாதிகள் ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டாலும் அதற்குரிய மரியாதையும் மதிப்பும் தராமல் சுயமரியாதை கொடுக்காமல் அவ மரியாதை செய்கிறார்கள். தந்தையின் நிலையைக் கண்டு பொறுக்காத மகன் தலையெடுத்து வந்து தலை குனிந்து நிற்கும் அப்பாவைத் தலை நிமிர வைக்கும் கதைதான் ‘மாமன்னன்’. மாரி செல்வராஜின் அக்மார்க் முத்திரை கொண்ட படம்.

மாமன்னன் என்ற பெயர் கொண்ட வடிவேலு ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏ ஆகிறார். ஆனால் பதவி வந்தாலும் அவருக்கான மதிப்பும் மரியாதையும் தராமல் கட்சிக்காரர்கள் அவரை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மாவட்டத்தின் பொறுப்பில் உள்ள அவரது கட்சிக்காரரிடம் அவர் அமர வைக்கப்படாமல் நின்று கொண்டே இருக்கும் நிலை.இதைக் கண்டு மகன் அதிவீரன் அதாவது உதயநிதி ஸ்டாலின்,பொங்கி எழுகிறார். தனது தந்தைக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் மதிப்பையும் மரியாதையும் எப்படி பெற்று தருகிறார்? அதற்குத் தடையாக வருகிற சதிகளை, இடையூறுகளை எல்லாம் எப்படி முறியடிக்கிறார் ?இடையில் தனது கல்லூரித் தோழியின் மீதுள்ள காதலுக்கு நெருக்கமான நட்பு .அது காதலாகி கைகூடியதா? என்பதுதான் படத்தின் கதை.தனிமனிதரால் தூண்டிவிடப்படும் சாதிய உணர்ச்சியால் அந்தச் சமூகமே பாதிக்கப்படுவதைச் சொல்கிற படமாக இது உருவாகி உள்ளது.படத்தின் ஆரம்பத்திலேயே கதையின் போக்கை யூகிக்க முடியும்.மாரி செல்வராஜ் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கூட யூகிக்க முடியும்.

படத்தில் வடிவேலு இதுவரை காணாத புதிய வேடத்தில் வருகிறார். எத்தனையோ படங்களில் சிரிக்க வைத்த வடிவேலு இப்படத்தில் நம்மைக் கண்கலங்க வைக்கிறார்.அவரிடம் இருந்த இன்னொரு பரிமாணத்தை வெளியே எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குநர்.
தனக்கு அவமானம் நேர்கிற போதெல்லாம் தன்மானத்திற்கு இழுக்கு வருகிற போதெல்லாம் மகனுக்குத் தெரியாமல் தனக்குள் குறுகி உள் சுருங்கி நிற்பது போன்ற தருணங்களில் அப்படி ஒரு அருமையான நடிப்பை வழங்கி உள்ளார்.
இப்படி ஏராளமான நடிப்புத் திறமையைக் காட்ட பல்வேறு தருணங்கள் அவருக்குப் படத்தில் வாய்த்துள்ளன. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவரும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் எனது தந்தையின் கெளரவத்தை மீட்டெடுக்கும் மகனாக வருகிறார். அதிவீரன் என்ற பெயரில் அடிமுறை ஆசானாக மாணவர்களுக்கு வீரக்கலையைச் சொல்லிக் கொடுக்கிறார்.அவர் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாக செய்துள்ளார். நிறைய காட்சிகளில் ஆவேசமாகப் பொங்குகிறார். அதிகம் பேசாமலேயே சின்ன சின்ன சிந்திக்க வைக்கும் வசனங்களைப் பேசி நடித்துள்ளார்.பல இடங்களில் வடிவேலு அவரை விட மேலோங்கித் தெரிந்தாலும் அதற்கு அனுமதித்த அவரது பெருந்தன்மைக்குப் பாராட்டுகள் .

கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஏழை மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையம் நடத்துகிறார் கீர்த்தி சுரேஷ்.கலர் கலர் உடைகள் ,கனவுப் பாடல்கள் எல்லாம் இல்லை. படம் முழுக்க வந்தாலும் அவருக்கான நடிப்பு வாய்ப்புகள் குறைவு.வழக்கமான முக பாவனைகளில் காட்சிகளை நிரப்பி உள்ளார்.
படத்தினைத் தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் ஒருவராக வருகிறார் பகத் பாசில். கதாநாயகனாக குணச்சித்திரமாக பார்த்த அவர், இதில் சாதிய மேட்டிமை கொண்ட வில்லனாக வருகிறார். ரேசில் தோற்ற தனது நாயை இரக்கமில்லாமல் கொல்வது முதல்,தனது சாதிக்காரரையே கொன்று அரசியலுக்கு பயன்படுத்துவது வரை அவர் வில்லத்தனத்தில் தனி ராஜ்ஜியம் நடத்தியுள்ளார்.அவரது தோற்றமும் விரிவிழியும் வாய்மொழியும் உடல் மொழியும் அச்சு அசலாகப் பொருந்தி பாத்திரமாகவே மாறி  உள்ளார்.

படத்தில் பிரபலமான நடிப்புக் கலைஞர்களோடு ஏராளமான நாய்களும் பன்றிகளும் கூட வந்து மனதில் பதிகின்றன.அவற்றைப் பொருத்தமான இடங்களில் கதையின் விறுவிறுப்புக்கு உதவும் காட்சிகள் ஆக்கியுள்ளார்கள்.சேலம் காசிபுரம் பகுதியில் கதை நடக்கிறது. அதிரடியாக தொடங்கும் படத்தின் முதல் பாதியே இரண்டாம் பாதி எப்படி முடியும் என்பதையும் சொல்லிவிடுகிறது.

ஏ ஆர் ரகுமான் இசை படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது .ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஆவணத்தன்மையோடும் அந்தந்த காட்சிக்கேற்ற நிறத்தோடு இசை அமைத்துள்ளார்.பாடல்களிலும் குறை வைக்கவில்லை.தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இயக்குநரின் பார்வையில் பதிவாகியுள்ளது.உள்ளூர் தெருவில் இருந்து பொதுத் தேர்தல், சட்டசபை வரை காட்சிகள் உள்ளன. அலங்கார ஒளியமைப்புகள் எல்லாம் இல்லாமல் பெரிய காட்சிகளையும் படப்பதிவு செய்து காட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் தனது வழக்கமான பாணியில் திரைப்படத்தில் தனது கருத்தை விதைத்துள்ளார்.திரைக்கதைப் போக்கு ,காட்சியமைப்புகள், கூர் வசனங்கள் என பட உருவாக்கக் கூறுகள் அனைத்திலும் மாரி செல்வராஜ் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.படத்தை அலுக்காமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் . படத்தில் சாதிய மேட்டிமை, ஒடுக்குதல் முறைகள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள்,தேர்தலில் முறைகேடுகள், மக்களின் உணர்ச்சியைத் தூண்டி ஓட்டாக மாற்றும் சூது வாது என அனைத்தையும் காட்சிகளாக்கி உள்ளார் இயக்குநர்.  இருந்தாலும் சில காட்சிகளில் மிகையுணர்ச்சி, மிகைத் தன்மை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

படத்தின் கதை நிகழ்வு இடங்கள் தனித்துத் தெரியாமல் கதையோடு பயணம் செய்வது தனிச்சிறப்பு. இந்த 157 நிமிடப் படத்தில் தொய்வில்லாத எடிட்டிங்கில் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் கூட்டணிக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.