‘முந்திரிக் காடு’ விமர்சனம்

பிரபல எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்ற நாவல், மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை என்ன?

தட்டாங்காடு என்கிற கிராமத்தில் தீண்டாமை நிலவுகிறது. அங்கே ஒரு கொலை நடக்கிறது.நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல்துறை ஆய்வாளர் அன்பரசனை மனரீதியாகத் தொந்தரவு செய்கிறது. அதாவது, அந்த ஊரைச் சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணும் காதலிக்கின்றனர். அந்தப் பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் 9பேர் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.வலுவான சாதிய அரசியல் பின்னணியால் குற்றவாளிகளைச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்று அன்பரசன் போராடுகிறார். அப்போது, அதே ஊரில் இன்னொரு காதல் உருவாகிறது.

தட்டாங்காடு கிராமத்தில் வாழ்கிற முருகன் ஒரு ஏழை முந்திரி விவசாயி. அவரது மூத்த மகள் தெய்வம் .தன் மகள் தெய்வத்தை எப்படியாவது மேல்படிப்பு படிக்க வைக்கும் கனவில் இருக்கிறார். ஆனால் விதி? தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லா என்கிற செல்லமுத்துவைத் தெய்வம் காதலிக்கிறாள்.

அந்தக் காதல் மெல்ல மெல்ல ஊருக்குள் கசிகிறது. தெய்வத்தின் சாதியினர் காதலை ஏற்க மறுக்கின்றனர். அந்த ஒன்பது கொலை வெறியர்களும் அவளையும் அவளது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள். அந்த கிராமம் ஒன்று திரண்டு தெய்வத்தைப் பல வழிகளில் அடித்தும் உதைத்தும் திருத்தப் பார்க்கிறது. தெய்வம் திருந்தவில்லை. சாதி வெறியர்கள் கிராமத்தின் நடுவில் வைத்து முடியை அறுத்து அவமானப்படுத்துகிறார்கள். ஆனாலும் தெய்வம் அத்தனை சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி, செல்லமுத்துவோடு வாழ்ந்துவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறாள். எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொள்கிறாள். தன் காதலை அழிக்க நினைக்கிற சாதி வெறிக் கும்பலை எதிர்த்து, உயிரையும் பணயம் வைத்துப் போராடுகிறாள்.
ஒரு கட்டத்தில் கிராம மக்கள் தெய்வத்தைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறார்கள்.பூச்சிக்கொல்லி விஷமருந்தான ‘பாலிடாயில்’ என்கிற கொடிய விஷத்தை வாயில் ஊற்றிக் கொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். நெருக்குதல் தாங்காமல் தானே கொன்று பிணத்தைக் கொண்டு வந்து போடுகிறேன் என்கிறார் தந்தை.
தனது மகளை தானே எப்படிக் கொல்வது? கதறித் துடிக்கிறார் முருகன்.

அதே நேரம் காவல் துறை ஆய்வாளர் அன்பரசன், எப்படியாவது தெய்வத்தைக் காப்பாற்றி, செல்லமுத்துவோடு வாழவைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.சட்டப்படி இல்லாமல் தர்மப்படி ஒரு காரியம் செய்யத் துணிகிறார். அது என்ன? அதன்படி அவர் காதலர்களைக் காப்பாற்றினாரா? கொடூரர்களைத் தண்டித்தாரா? என்பது தான் மீதிக்கதை.

இப்படத்தில் சீமான் காவல்துறை ஆய்வாளர் அன்பரசனாக முக்கிய வேடமேற்றுள்ளார்.புகழ் கதாநாயகன் செல்லா வாகவும் சுபப்பிரியா நாயகி தெய்வமாகவும் நடித்துள்ளனர்.’தியேட்டர்லேப் ‘ஜெயராவ் நாயகியின் தந்தை முருகனாக நடித்துள்ளார்.மேலும் கலைசேகரன்,அ.வெ.பார்த்திபன்,சக்திவேல்,சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மு. களஞ்சியம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.ஆதி திரைக்களம் தயாரித்துள்ளது. இசை : ஏ.கே. பிரியன்,ஒளிப்பதிவு : ஜி.ஏ. சிவசுந்தர்.
சீமான் தான் எழுதியதாகக் கூறி இந்தக் கதையைச் சொல்வது போல் படம் நகர்கிறது.

கதையின் பெரும்பகுதி முந்திரிக்காடு சுற்றுப் பகுதிகளில் நடப்பதால் படத்திற்கு இந்தப் பெயரை வைத்துள்ளார்கள்.

நாயகன் புகழ் அச்சு அசலான கிராமத்து வாழ் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்துள்ளார். உயர் சாதிப் பெண்ணை விரும்புகிற சூழலிலும் தனது தாழ்வுணர்ச்சியைக் காட்டுவதிலும் வீராவேசம் காட்டுவதிலும் குறை வைக்கவில்லை.

நாயகி சுபப்பிரியா மிகவும் அழுத்தமான வேடமிட்டுள்ளார். அவருக்கு பலவிதமான ரசங்களை காட்டி நடிக்க வாய்ப்பு. கடுமையாக உழைத்துள்ளார். அதே போல் படத்தில் தோன்றும் அத்தனை மகளும் மண்ணின் மைந்தர்களாகத் தெரிகிறார்கள். யாரும் நடித்ததாக உணரவில்லை.சீமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார்.பல இடங்களில் அவரது தனது தத்துவங்களைக் கூறுகிறார் தமிழனாக ஒன்றுபடுவோம் என்று கொள்கைப் பிரச்சாரம் செய்கிறார்.

தேவையான ஒளிப்பதிவு மிதமான இசை என்று குறை சொல்ல ஒன்றுமில்லை. பட உருவாக்கத்தில் மேலும் மேம்படுத்தி இருக்கலாம்.

சாதியக் கொடுமைகள் பற்றி பல படங்கள் வந்து இருந்தாலும் இதில் அனைத்தும் மிகைப் படுத்தப் பட்டுக் காட்டியுள்ளதால் மனம் ஒன்றத் தயங்குகிறது. குறிப்பாக சாதியக் கொடுமை பற்றி அந்த கிராமத்துப் பெண் கதாநாயகி கூறுவதான வசனங்கள் இயக்குநரின் வசனங்களாகவே வெளியே பிதுங்கித் தெரிகின்றன.

ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் சீமான் பேசினால் கூட பரவாயில்லை .ஆனால் அந்தக் கதாநாயகி பேசும் பேச்சுகளும் கொடுக்கும் விளக்கங்களும் கேட்கும் கேள்விகளும் மிகையோ மிகை.

இமையம் எழுதிய நாவலில் இந்த மிகை உணர்ச்சி உள்ளதா என்று தெரியவில்லை.
பிரச்சார நெடி இல்லாமல் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இல்லாதிருந்திருந்தால் இதுவும் இன்னொரு பரியேறும் பெருமாள் போல் பேசப்பட்டிருக்கும். ஆனால் நாடகீயத் தருணங்களும் மிகை படுத்தப்பட்ட வசனங்களும் நம்மை படத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கின்றன.நீளமான வசனங்கள் அறிக்கைகள் போல் நீள்கின்றன.

எனவே சாதியக் கொடுமை பற்றி பேசும் ஒரு பிரச்சாரப் படமாக இது மாறி, சுருங்கி விடுகிறது.