‘ஆகஸ்ட 16 , 1947 ‘விமர்சனம்

கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து, பொன் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘ஆகஸ்ட 16 , 1947 ‘.

திரைப்படத்திற்கான கதைகள் குறிப்பிட்ட வடிவங்களில் தான் சுழன்று சுழன்று வருகின்றன. திரைப்படத்துக்கான கதைகளில் வித்தியாசம் காட்ட இயலாத போது பின்புலத்தையும் கால மாற்றத்தையும் பின்புலமாக்கி வித்தியாசம் காட்டுவதுண்டு.அது புது விதமான திரை அனுபவத்தைத் தந்து ரசிகர்களால் வரவேற்கப்படும். அப்படிக் கால மாற்றப் பின் புல வரிசையில் உருவாகி இருக்கும் படம் ‘ஆகஸ்ட 16 , 1947 ‘.படத்தின் கதை என்ன?

உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. செங்காடு கிராமத்தில் விளையும் பருத்தி .அது உலகத் தரம் வாய்ந்தது, ஆங்கிலேயர்கள் அந்த கிராம மக்களை அடிமைகளாகக் கருதி அவர்களின் உழைப்பைச் சுரண்டி அச்சத்தில் வைக்க விரும்புகிறார்கள். அதிகாரம் மிக்க வெள்ளைக்காரனின் மகன் கிராமத்து இளம் பெண்களை பலாத்காரம் செய்து ருசிபார்ப்பதில் மும்முரமாக இருக்கும் காமுகன்.

இவர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிச் சிறையில் வாடும் செங்காடு மக்கள் நாட்டின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், ஆங்கிலேயரின் மகன் நாயகன் கௌதம் கார்த்திக்கால் கொல்லப்படுகிறான். தனது மகனின் கொலைக்குப் பழிவாங்க நினைக்கிறான் ஆங்கிலேயன்.கொடுமைக்காரர்கள் நாட்டின் சுதந்திரத்தை மறைத்து செங்காடு மக்களை அழிக்க முடிவு செய்தனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக கதை விரிகிறது. நல்ல தோற்றமும் நடிப்புக் குடும்பத்தின் பின்புலமும் இருந்தாலும் கூட கௌதம் கார்த்திக்கிற்கு இதுவரை சரியான படங்கள் அமையாதது துரதிர்ஷ்டமே. ஆனால் இந்த படத்தில் நாயகன் கௌதம் கார்த்திக்கிற்குத் திறமை கட்ட வாய்ப்பு.தன்னைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு கடுமையாக உழைத்துள்ளார். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் முத்திரை பதித்துக் கவனம் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேவதி அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வு. அவரைப் புதுமுகம் என்று கூற முடியாதபடி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கொடூரமான ஆங்கிலேயராக வரும் வெளிநாட்டு நடிகர் ரிச்சர்ட் ஆஷ்டன் மற்றும் அவரது மகனாக வரும் ஜேசன் ஷா ஆகியோரின் கதாபாத்திரமும் நடிப்பும் படம் பார்ப்பவர்களை பதற்றப்படுத்துகி றது.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பிரேமோரா, நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு தன் நடிப்பைக் காட்டியுள்ளார்.

ஜமீனாக நடித்திருக்கும் மதுசூதன ராவ் மற்றும் அவரது மகன்கள், செங்காட்டு மக்களாக நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் கதைக்களத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வுகள்.அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் பணிகளில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

கதையைக் காட்சிகளின் வழியே அந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே.யின் ஒளிப்பதிவு அந்த வரலாற்றுக் காலத்தை கண்முன் காட்சிகளாக விரித்திருக்கிறது.
இந்த வரலாற்று ஓவியத்தை வரைவதற்கு ஏற்ற வரை திரையாகப் பின்புலக் காட்சிகளை அமைத்திருக்கும் கலை இயக்குநர் டி.சந்தன்ஹாமின் பணி அவரது உழைப்பைக் காட்டுகிறது .கலை இயக்கம் படத்திற்குப் பெரிய பலம்.ஏ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் தர நம்பிக்கையும் அதிகரித்துள்ளது படத்திற்கான பலம்.

சான் ரோல்டனின் இசை இனிமை ரகம். பாடல்களுக்கான இசையில் புதிய நிறம் வெளிப்படுகிறது. பின்னணி இசை கதை செல்லும் திசையை அழைத்துச் செல்லுமாறு பயணித்துள்ளது.

உழைப்பவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவம் இப்போதே கண் முன் தெரிகிறது. ஆனால் அது,அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும் என்பதை இப்படத்தில் காட்டியுள்ளார் இயக்குநர் பொன்குமார்.

1947 காலகட்டமும், செங்காடு கிராமமும், கிராம மக்களும் நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்று படத்தை ரசிக்க வைக்கிறது.

தொய்வுகளைச் சரிப்படுத்தி திரைக்கதையை சற்று வேகமாக நகர்த்தியிருந்தால் படம் இன்னும் கவனம் பெற்றிருக்கும்.நம்பகத்தன்மையுள்ள ஓர் உரிமைப் போராட்ட வரலாறாக மாறி இருக்கும்.