மோடியால் தள்ளிப்போன ‘கடவுள் இருக்கான் குமாரு’!

kadavul-irukan-kumaruமோடி எஃபெக்ட்… நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’!

கடந்த இரு தினங்களாக வீதியில், தெரு முனையில் இரண்டு பேர் ஒன்றாக நின்று பேசினால் அது 500, 1000 நோட்டுத் தடைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. மளிகைக் கடைகளில், பால் நிலையங்களில், காய் கறி மார்க்கெட்டுகளில் என எங்கும் இந்த நோட்டுப் பிரச்சினைதான்.

சினிமா திரையரங்குகளை மட்டும் இந்தப் பிரச்சினை விட்டு வைக்குமா… 500, 1000 நோட்டுகள் தடை சினிமா அரங்குகளில் மக்கள் வரவைக் கடுமையாக பாதித்துள்ளது. தமிழகம் முழுக்க பல அரங்குகளில் மக்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 அரங்குகள் காட்சிகளை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படியொரு சூழலில் ஜீவி பிரகாஷ் – நிக்கி கல்ராணி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முடியுமா என ஆலோசிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து ஆலோசித்ததில் ‘இந்த நோட்டுப் பிரச்சினை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம்’ என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் டி சிவா கூறுகையில், “எல்லோரும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி வரும் நவம்பர் 17-ம் தேதி தமிழகம் மற்றும் உலகெங்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும். அதற்குள் மக்களும் இந்த நோட்டு நெருக்கடியிலிருந்து மீண்டு படம் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள்,” என்றார்.

ஆக, கடவுள் இருக்கான் குமாரு வரும் நவம்பர் 17-ம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.