‘ராக்கெட்ரி’ விமர்சனம்

நம் நாட்டில் கணிசமான அளவில் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கான மனஅழுத்தத்தின் காரணம் என்ன என்பது பலரும் ஆராயாத ஒன்றாகக்
கடக்கப்படுகிறது. அதிகார வர்க்கத்திற்கும் அவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுதான் காரணம் என்பதைப் பொதுவாகக் கருதலாம்.

நமது இந்திய விண்வெளித் ஆய்வு மையமான இஸ்ரோவில் இன்று நாம் பாராட்டும் பல சாதனைகளுக்கு உண்மையில் அடித்தளம் இட்ட நம்பி நாராயணன் என்பவரைப் பற்றிய கதை.அவர்தான் இன்றைய ராக்கெட் தொழிநுட்பத்தில் அதிகமாக பயன்படும் கிரையோஜெனிக் எந்திரத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியதற்கு அடிப்படையாக இருந்தவர்.அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் சந்தித்த பல கொடூரங்களை எடுத்துச் சொல்கிற படம் தான் இது.

தாய் நாட்டை நேசித்த விஞ்ஞானியான அவர், எப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் உள்ள விஞ்ஞானி என்பதைக் கூறி, அவர் மேல் விழும் ‘தேசத்துரோகி’ பட்டம், இதனால் அவரும், அவர் குடும்பமும் எதிர்கொண்ட அவமானங்கள் அச்சுறுத்தல்கள் பிரச்சினைகள் மனக்கொந்தளிப்புகள் என்னென்ன? இறுதியாக அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதே ராக்கெட் ரி நம்பி விளைவு படத்தின் கதைச்சுருக்கம்.

இந்திய விண் வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்கான அத்தனை விறுவிறுப்புகளும் உணர்ச்சி வேகமும் இப்படத்தில் உள்ளன.

கதையின் பிரதான நாயகனாக நடித்துள்ள மாதவன் அந்த நம்பி நாராயணன் பாத்திரமாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது கூட பழையதாகி விட்டது.அந்த பாத்திரத்தைக் கரைத்து தனக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.பல்வேறு தோற்ற மாற்றங்களில் அவரா இது என நம்பவே முடியவில்லை.
அவர் வெறும் நடிகராக இல்லாமல் படத்தில் இயக்குநராகவும் அந்தக் கதைக்குள் புகுந்து புரிந்து ஆய்வு செய்த ஒரு மனிதராக இருந்ததால் அவரது பாத்திரம் உயிர்ப்புடன் உள்ளது.அவரின் மனைவியாக வரும் சிம்ரன் கொடுத்த பாத்திரத்தைக் குறை வைக்காமல் நேர்த்தியாகச் செய்துள்ளார்.

விஞ்ஞானியைப் பேட்டி எடுப்பவராகச் சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா படத்திற்குப் பெரிய பலம் என்றே கூற வேண்டும்.

சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவில் அவரது கேமரா இயல்பான காட்சிகளைக் கண் முன் நிறுத்துகின்றன.கதை கேட்ட விகிதத்தில் சரியாகக் கொடுத்துள்ளார். சாம் CS பின்னணி இசையில் மிரட்டியுள்ளார், பல இடங்களில் காட்சியின் அழுத்தத்தைச் சொல்ல, பின்னணி இசை உதவி இருக்கிறது.

படம் இரண்டரை மணி தாண்டினாலும் நமக்கு எங்கேயும் சலிப்போ அலுப்போ ஏற்படவில்லை.
அந்த அளவுக்குக் கறாராக கட் செய்துள்ளார் எடிட்டர் பிஜித் பாலா. 

சமகாலத்துடன் இப்படத்தில் வரும் வசனங்கள் நம்மை தொடர்பு படுத்துகின்றன.‘ஒரு நாயைக் கொல்ல வேண்டுமென நினைத்தால் அந்த நாய்க்கு “வெறி நாய்” என பெயர் வைத்தால் போதும். அதேபோல் ஒருமனிதனை கொல்ல முடிவெடுத்து விட்டால் அவனுக்கு தேசத் துரோகி என பெயர் வைத்தால் போதும் சமூகம் கொன்று விடும் ‘ போன்றவை சிறு உதாரணங்கள்.இதுபோல் ஆங்காங்கே பொறிகள் பறக்கின்றன.

ராக்கெட் அறிவியல் பற்றிய படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே விளக்கியுள்ளார் மாதவன்.படம் பற்றிய புரிதலுக்கு அது தேவை என்றாலும் சற்று நீளம் போல் தோன்றுகிறது. படத்தின் கதை பல வெளிநாடுகளில் பயணிக்கிறது . மாதவன் அதற்காக மிகவும் உழைத்துள்ளார்.

நம்பி நாராயணன் என்கிற திறமையும் ஆளுமையும் கொண்ட ஒரு மனிதருக்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றிய கதை என்பதனால் படத்தில் வேகத்திற்கும் உணர்ச்சிகரத்திற்கும் குறைவில்லை.

ஓரளவிற்கு உண்மைக்குப் பக்கத்தில் சொல்வது போல் எதார்த்தமாக எடுத்துள்ளதால் இந்த படத்தைக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் புதிய அனுபவத்தை தரும்.