‘ரீ ‘ விமர்சனம்

ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரமா, சங்கீதா பால், திவ்யா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ரீ ‘.

இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீநிவாஸ், இசை ஹரிஜி,பின்னணி இசை ஸ்பர்ஜன் பால்,படத் தொகுப்பு கே. சீனிவாஸ்.

.உளவியல் கோளாறுகள் பலரகம். தன் மனதில் தோன்றிய காட்சியை முழுமையாக உறுதியாக உண்மை என்று நம்புவது ஒரு மனக் கோளாறு.இப்படி ஒரு கதாபாத்திரம்.

தனக்குள் ஆழ்மனதில் பதிந்துள்ள குற்ற உணர்ச்சியே தன்னில் இருந்து ஒரு பகைவனாக வெளிப்பட்டுத் தெரியும் ஒரு கதாபாத்திரமாக மாறி நடத்தைகளை வெளிப்படுத்தும் படியான இன்னொரு கதாபாத்திரம்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இவை மூலமாக ஒரு வாழ்வியல் பிரச்சினையை காட்சிகளாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தரவடிவேல்.இந்தப் படத்தின் நாயகியான
ரீமா என்கிற கதாபாத்திரத்தின் முதல் எழுத்தைக் கொண்டு ரீ என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள்.

மற்றவர்களுக்கு மன கோளாறுகளைச் சரி செய்யும் ஒரு மனோதத்துவ டாக்டர் ,தன் மனைவிக்கே மனச்சிக்கல் என்றால் அவர் என்ன செய்வார்?அப்படித்தான் தொடங்குகிறது கதை. மனோதத்துவ டாக்டர் முகில். அவரது மனைவி ரீனா.திருமணமான இளம் ஜோடி. புதிதாக வாங்கிய வீட்டிற்குக் குடியேறுகிறார்கள்
இளம் தம்பதிகளான இருவரும் காதல் வானில் சிறகடித்து பறக்கிறார்கள்.தங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான அத்தியாயங்களைத் தொடங்குகிறார்கள்.
ஆனால் போன சில நாட்களிலேயே ஒரு பிரச்சினை துளிர்க்கிறது.
பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல் ஒலி கேட்பதாகக் டாக்டர் கணவரிடம் தினமும் புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறாள் ரீனா.அது வீண் கற்பனை, நிஜமல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் டாக்டர்.மனைவியோ அதை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறாள்; கணவர் நம்பாதவராக இருக்கிறார்.இருவரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் மனைவி முறையீட்டுக்குச் செவி கொடுக்கிற டாக்டர் முகில்,என்னதான் சொல்கிறாள் இவள் என்று களத்தில் இறங்கி ஆய்வு செய்கிறார். அப்போது தான் பக்கத்து வீட்டில் பிரச்சினை இருப்பது தெரிகிறது.அங்கு குடி இருக்கும் இன்னொரு டாக்டர் சாகுல் வீட்டில் இருந்துதான் அலறல் ஒலி கேட்கிறது. மெல்ல அந்த வீட்டிற்குள் நுழைந்து விசாரிக்கிறார் முகில்.போகப் போக பல அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்றன.

டாக்டர் சாகுல் தான் செய்த அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்த தன் மகளை வீட்டுக்குள் பிணமாகப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முகிலுக்கு அதிர்ச்சி.டாக்டர் சாகுலிடமிருந்து பிளவு பட்ட மனம் இன்னொரு கதாபாத்திரமாக அவரை மிரட்டுகிறது.

அந்தப் பழிவாங்கும் பாத்திரத்தை, சிகிச்சை மூலம் எப்படி முகில் வெளிக்கொண்டு வருகிறார் என்பதுதான் கதை.

இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக பிரசாந்த் சீனிவாசன் நடித்துள்ளார். பெரும்பாலும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.உச்சரிப்பிலும் நடிப்பிலும் முன்னேற்றம் தேவை.

அவரது மனைவியாக காயத்ரி ரமா நடித்திருக்கிறார்.வழக்கம் போல பயந்து அலறும் முக பாவனைகள் காட்டியுள்ளார்.
டாக்டர் சாகுலாக பிரசாத் வருகிறார். பார்க்க சாதுவாக இருப்பதும் மனப்பிறழ்வு காட்டும் மனநோயாளியாக மாறுவதும் என நல்ல நடிப்பு.

பிளவு பட்டு வெளிப்படும் ஜான்சன் பாத்திரத்தில் இயக்குநர் சுந்தரவடிவேல் நடித்துள்ளார். பழிவாங்கத் துடிக்கிற அந்த பாத்திரத்தில் அசல் மனநோயாளியாகவே தெரிகிறார்.அடையாளம் காண முடியாத தோற்றமும் நடிப்பும் வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தின் முதல் பாதி வழக்கம் போல பாடல்கள், ரொமான்ஸ் என்று நகர்கிறது. அழுத்தமான காட்சிகள் இல்லாமல், உப்பு சப்பில்லாமல் போகிறதே என்று அலுப்பூட்டுகிறது.அடடா மாட்டிக்கொண்டேமே என நினைத்துக் கொண்டு இரண்டாம் பாதி பார்க்க உட்கார்ந்தால் , இரண்டாம் பாதி அதற்கு நேர் மாறாகச் செல்கிறது.அப்பாடா இன்று பெருமூச்சு விடுகிறோம். படத்தில் இரண்டாவது பாதியில் திடீர் திருப்பங்கள் வருகின்றன.பேய்ப் படமா உளவியல் பிரச்சினை கொண்ட பாத்திரங்களின் கதையா என்று யோசிக்க வைக்கிறது படம்.அதற்குப் பதிலும் கிடைக்கிறது.

கதையில் பிரச்சனைக்குரியவர் யார் என்று சொல்ல முடியாத அளவுக்கு நல்ல சஸ்பென்சை வெளிப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் இயக்குநரைப் பாராட்டலாம்.

பாடல்களுக்கு இசை, இசையமைப்பாளர் தினாவின் தம்பி ஹரிஜி. பாடல்களில் பழைய வாசனை அடிக்கிறது.தனியே ஒலிக்கிற அளவிற்கு படத்தில் பாடல்கள் பொருந்தவில்லை,என்றாலும் பின்னணி இசை பெரிய பலமாகப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.நேர்த்தியான நல்லதொரு பின்னணி இசை வழங்கியுள்ளார் ஸ்பர்ஜன் பால்.

இரண்டே இரண்டு வீடுகளை வைத்துக் கொண்டு பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே நடக்கும் காட்சிகளாக அமைத்துள்ளார் இயக்குநர். அந்தக் குறை தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சீனிவாஸ்.

அந்தக் காட்சி அமைப்புகளுக்காகவும் முதல் படமே இப்படி ஒரு உளவியல் பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.
டெலுஷனல் டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்.
ஆனால் இதே கதையை வைத்துக் கொண்டு நட்சத்திர நடிகர்கள் நடித்து இருந்தால் படம் எங்கேயோ சென்று இருக்கும்.பேசப்படக்கூடிய சைக்கோ திரில்லர் ஆக மாறி இருக்கும். சிக்கனமான செலவில் படத்தை எடுத்திருப்பது காட்சிகளில் புரிகிறது.பட்ஜெட்டின் போதாமையால் படம் சாதாரணமாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பக்கத்து வீட்டில் ஒலிக்கும் ஒலிகளின் காரணத்தை நாம் சற்று யோசிக்கத் தொடங்கி விடுகிற அளவுக்கு நமக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது படம்.