‘ரெபல்’ விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ ,கருணாஸ் ,கல்லூரி வினோத், ஆண்டனி, ஆதித்யா பாஸ்கர், வெங்கடேஷ், சுப்ரமணிய சிவா நடித்துள்ளனர்.நிகேஷ் இயக்கி உள்ளார் .அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.வெளியீடு சக்தி பிலிம் பேக்டரி .

தமிழ்நாட்டில் இப்போதுள்ள கன்னியாகுமரி போன்ற பகுதிகள் ஒருகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி நமக்கு வந்தது. அதே போல் தமிழ் பேசும் மக்கள் கொண்ட பகுதியான மூணார் பகுதி கேரளா உடன் சென்றது.
அந்த மூணார் பகுதியில் தமிழர்கள் நிறைய பேர் இருந்தார்கள் . அப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் தமிழர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டு உழைப்பு உறிஞ்சப்பட்டனர். காலகாலமாக தோட்டத் தொழிலாளராகவே வாழ்ந்து மடிந்து வந்தனர். உழைப்பை மட்டுமே அறிந்த அவர்களின் அடுத்த தலைமுறையாவது படிக்க வேண்டும் இந்த அடிமை வாழ்வில் இருந்து மீள வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் .அப்படி மூணாரில் நெற்றிக்குடி எஸ்டேட்டில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.அங்கே அவர்களுக்குச் சம உரிமையும் சம வாய்ப்பும் சகஜமாக கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. அங்கே மாறி மாறி ஆட்சி நடத்தும் கேரள வலது சாரி மற்றும் இடதுசாரி என இரண்டு கட்சிகளுமே அதேபோல ஒடுக்கு முறையைக் கடைப்பிடிக்கின்றன. இந்நிலையில் தங்களுக்குச் சம உரிமையும் சுயமரியாதையும் அளிக்க வேண்டும் என்று அங்குதமிழ்  மாணவர்கள் நடத்தும் உரிமைப் போராட்டமே படத்தின் கதை. படம் எண்பதுகளில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு கலகக்காரராக உருவெடுக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அதற்காக என்ன செய்கிறார் ? முடிவு என்ன என்பதுதான் ரெபல் படத்தின் கதை.

ஜி.வி. பிரகாஷ் குமார் இதில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் .பெற்றோரிடம் பாசமாக இருக்கும் போதும் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று துடிப்பாக இருக்கும் போதும் கல்லூரியில் அவமரியாதை நடக்கும் போதும் அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தவிக்கும் போதும் பல்வேறு நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் .ஒரு சாக்லேட் பாயாக, ப்ளேபாய் போல் படங்களில் உலா வந்தவர் ஆவேச இளைஞனாக வந்து ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அடித்து துவம்சம் செய்கிறார்.

அவரது நண்பராக பாண்டி பாத்திரத்தில் வரும் கல்லூரி வினோத்தும் அந்த பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கி உள்ளார். அதேகல்லூரியில் பணியாற்றி வரும் கருணாஸ் எல்லாக் கீழ்மை மீட்புகளுக்கும் கல்விதான் பதில் சொல்லும் என்று தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஒரு தமிழராக இருந்தும் அவலங்களைத் தட்டிக் கேட்க முடியாத தனது தவிப்பை வெளிப்படுத்தி உள்ளார். செல்வராஜ் பாத்திரத்தில் வரும் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் உருக்கமான நடிப்பால் அனுதாபங்களை அள்ளுகிறார். நாயகி மமிதா பைஜூ சாராவாக வந்து, காதல் டூயட் என்று இல்லாமல் ஒரு பாத்திரம் போல வருகிறார். அவரது நடிப்பு அளவானது.

வில்லனாக ஆண்டனி பாத்திரத்தில் வரும் வெங்கடேஷும் ஸ்கோர் செய்கிறார்.பாசமும் இயலாமையும் தவிப்பும் கொண்ட தந்தையாகவும் உரிமைகளைக் கேட்கும் சித்தாந்த அனுதாபியாகவும் வருகிறார் சுப்பிரமணிய சிவா. நல்ல முதிர் நடிப்பு.படத்தில் ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. மலையாளம் பேசுவோர் பலர் என இருந்தாலும் நமக்குப் புரிகின்றன.

அரசியல்வாதிகளின் உடல்மொழி செயல்பாடுகள், உள்ளிட்ட அனைத்தும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. ,
ஜி.வி .பிரகாஷ் குமார் தான் இசை. குறைவான பாடல்கள் என்றாலும் நிறைவு தருகின்றன.வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைச் சரியாகப் பராமரித்துள்ளது.

படத்தில் கல்லூரி மாணவர் தேர்தலில் ஜெயிப்பதற்காக ஜி.வி. பிரகாஷ் குமார் கட்சி அலுவலகங்களைக் கொளுத்தி போலீஸிடம் அடிவாங்கி அனுதாபம் தேடுவது,அந்த அனுதாபத்தில் ஓட்டு வாங்க நினைப்பதும் நேர் வழியாகத் தோன்றவில்லை.
இது வன்முறையை ஒரு வன்முறை மூலம் தீர்வு காண்பது போல் அதுவும் நயவஞ்சகமாகத் தீர்வு காண்பது போல் அமைந்திருப்பதுதான் நெருடலாக உள்ளது. வேறு புத்திசாலித்தனமாக யோசித்து இருக்கலாம்.

ஒரு வணிகரீதியான படமாக எடுக்க நினைத்தாலும் பின்புலம், திரைக்கதை, நடிப்புக்கலைஞர்களின் நடிப்பு,கதை கூறுமுறை யாவும் சரியான விகிதத்தில் அமைந்து சரியான பட உருவாக்கமாக நேர்த்தி கண்டுள்ளன.

ஒரு காலத்தில்அங்கே நிலவி வந்த மலையாளிகள், தமிழர்கள் பாகுபாடு பற்றிய அவலங்களும் போராட்டங்களும் பற்றிய ஆவணமாக இந்தப் படம் மாறி உள்ளது.
வலி மிகுந்த வரலாற்றைப் பதிவு செய்ய எண்ணி எடுக்கப்பட்டுள்ள இப்படம் ,இப்போது எந்த எதிர்வினையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

மற்றபடி இந்த படம் எடுத்துக் கொண்ட களத்தில் கதை சொன்ன விதத்தில் குறை ஒன்றும் இல்லை .படம் பார்க்கும் அனைவருக்கும் திருப்தியான திரையரங்க அனுபவமாக இருக்கும்.