‘லால் சிங் சத்தா’ விமர்சனம்

ஒரு சுவாரஸ்யமான ஹாலிவுட் படம் வந்திருந்தால் பல வகைகளில் அதைத் தொட்டுத் தழுவி சுட்டு புரட்டிப் படம் எடுப்பது நம்மூர் ஆட்களின் வழக்கம்.

இந்நிலையில் ஒரு ஹாலிவுட் படத்தின் உரிமையைப் போராடிக் கேட்டு முறையாக வாங்கி அதை இந்தியத் திரைப்படமாக மாற்றி உருவாகி இருக்கும் படம் தான் லால்சிங் சத்தா.இதைத் தமிழ் படத்திற்காகப் பெயர் மாற்றி இருக்கலாம் .ஆனால் இது ஓர் இந்தியத் திரைப் படமாக உணர வேண்டும் என்கிற நோக்கத்தில் அதையே பொதுப் பெயராக வைத்துள்ளார்கள்.

ஹாலிவுட் ‘பாரஸ்ட் கம்ப் ‘ என்ற பெயரில் 1994-ல் வந்த அந்த படம் தான் இது. கற்றலில் புரிந்து கொள்ளலில் சிறு குறைபாடு உள்ள ஒருவனின் வாழ்க்கையின் கதை இது.
அத்வைத் சந்தன் இயக்கி உள்ளார்.அதுல் குல்கர்னி இந்தியத் தன்மைக்கு ஏற்றபடி கதையை எழுதி உள்ளார். ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே,படத்தொகுப்பு: 
ஹேமந் சர்க்கார், இசையமைப்பாளர்:  ப்ரீதம்,
பின்னணி இசை: தனுஜ் டிக்கு,
தமிழ்ப் பாடலாசிரியர் : முத்தமிழ் என்று பணியாற்றி உள்ளார்கள்.

‘பாரஸ்ட் கம்ப்’ ஆங்கிலப் படத்தைப் போலவே ப்ளாஷ்பேக் உத்தியில்தான் கதை நகர்கிறது.
ஆங்கிலப் படத்தின் கதை போக்கை எடுத்துக்கொண்டு, அதை நம் பண்பாட்டு இயல்புக்கேற்ப இந்தியப் பின்னணியில் மாற்றி உள்ளார்கள்.சில இடங்களில் அதை மிகவும் ரசிக்கத் தக்கதாகவும் சில இடங்களில் சற்று மாறுபட்டும் உள்ளது.

லால்சிங் சத்தாவின் கதையைக் கூற முற்படும் படம் , அது தனி மனிதனின் கதையாக அல்லாமல் அந்தக் காலகட்டத்தில் நம் நாட்டில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பின்புலத்தில் வரைதிரையாக அமைத்து கண்முன்னே நாட்டின் வரலாற்றையே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்த உத்தியுடனான கதை சொல்லும் முறை படத்திற்குப் பெரிய பலமாகவும் ரசிப்பதற்கு சுவாரசியமாகவும் காட்சிகளுக்குப் பிரம்மாண்டத்தையும் அளிக்கிறது.

அமீர்கான்தான் லால் சிங் சத்தாவாக நடித்துள்ளார். மிரள உருட்டி விழிக்கும் விழிகளும் பேசும் உடல் மொழியும் அந்தக் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

இது மாதிரி நடத்தையில் பின்னடைவுள்ள சிறப்புத்தன்மை கொண்ட பாத்திரங்களைச் சுமப்பது அமீர்கானுக்கு புதிதல்ல எனவே பிரித்து மேய்ந்துள்ளார்.

ரூபா என்கிற பாத்திரத்தில் அமீர்கானின் தோழியாக கரீனா கபூர் கான் வருகிறார் .படம் முழுக்க வரவில்லை என்றாலும் மனம் முழுக்க நிறைகிறார். எதிர்பாரா வரவாக ஷாரூக்கான் இன்ப அதிர்ச்சி தருகிறார்.

இந்தியில் அறிமுகமாகும் நாக சைதன்யா ,தான் ஏற்றுள்ள  பலராஜு பாத்திரத்தின் மூலம் பளிச் அடையாளம் பெறுகிறார்.
மற்றபடி படத்தில் உலா வரும் துணைப்பாத்திரங்கள் அனைத்தும் தங்கள் பங்குக்கு நியாயம் செய்கின்றன.

 அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உள்ள இந்த படத்தைத் தமிழில் உதயநிதி ஸ்டாலின் தன்,ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக வெளியிட்டுள்ளார்.

பொதுவாக நாவல்களைப் படமாக்கும் போது எழுத்து வடிவில் உள்ளது போல் திரை வடிவில் இல்லை என்று முணுமுணுப்பதுண்டு; ஆதங்கப்படுவதுண்டு. அதேபோல் ஒரு மொழியில் வெளிவந்த வெற்றிப் படத்தை அந்த காலகட்டத்தில் ரசித்துப் பார்த்த ஒரு படத்தை வேறு ஒரு மொழியில் மறு உருவாக்கம் செய்யும் போது அதைப் போல் இது இல்லை என்று கூறத் தோன்றலாம் .ஆனால் மொழி மாற்றத்திற்கான சில அவசியங்களையும் அதற்கான நிர்பந்தங்களையும் புரிந்து கொண்டால் இந்தப் படத்தை நமது இந்தியப் படமாக ரசிக்க முடியும்.நேரடியாக முதன் முதலில் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். ஒரு நல்லதொரு உணர்வெழுச்சி தரும் படமாக இருக்கும் என்று நிச்சயமாகக் கூறலாம்.