‘லைசென்ஸ்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ லைசென்ஸ்’. இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கிறார். அவருடன் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் நடித்திருக்கிறார்கள். ஜே ஆர் ஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ராஜலட்சுமி அரசு பள்ளி ஆசிரியை .பாரதி.மகாகவி பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்கிறார். அவர் பாத்திரத்தின் பெயர் .அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.

தன் கண் முன் நடக்கும் தவறுகளைத் தட்டி கேட்கிறார்.குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை கண்டு பொங்குகிறார். குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

அப்படிப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுமிக்காகப் போராடும் அவருக்கு எதிரிகள் அதிகரிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முடிவு செய்து அதற்காகப் போராடுகிறார்.
அவருடைய முன்கோபத்தைக் காரணம் காட்டி, அவருக்கு லைசென்ஸ் மறுக்கப்படுகிறது. உறுதியுடன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரும் ராஜலெட்சுமிக்கு, துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்ததா?, இல்லையா? என்பதே படக்கதை.

பாடகி ராஜலட்சுமி இப்படத்தில் ஒரு திரை நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் தான். ஆனால் சில இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல் படம் என்பதால் அவருடைய குறைகளை மறந்துவிட்டு நிறைகளை மட்டும் பார்க்கலாம். அவ்வகையில் அவர் ஏற்ற பாரதி பாத்திரத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.ராஜலட்சுமியின் தந்தையாக வரும் ராதாரவி நடிப்பில் அனுபவ முத்திரை.அபி நட்சத்திரா, என்.ஜீவானந்தம், கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா என நடித்திருக்கும் பிறரும் தங்கள் வேலையில் குறை வைக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் இசையும் படத்திற்கு ஏற்ப கரம் கோர்த்துப் பயணித்துள்ளன.

சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் சார்ந்து கதை எழுதி இயக்கியிருக்கும் கணபதி பாலமுருகன், பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் கணபதி பாலமுருகன், பாரதி என்ற கதாபாத்திரம் மூலம் பலருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்.ஆனால் சொன்ன விதத்தில் தான் நாடகத்தனம். முதல் பாதி படத்தில் ஏற்படும் தொய்வு ஒரு பலவீனம் என்று தோன்ற வைத்தாலும் மறுபாதியில் வரும் வழக்கு நீதிமன்றம் விசாரணை காட்சிகள் அதை ஈடு செய்து விடுகின்றன.

இந்த நாட்டில் ஒவ்வொரு தரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் உள்ளார்கள்.அதற்காக அவர்களுக்குத் துப்பாக்கி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்பது அபத்தம். பெண்களுக்கு துப்பாக்கி கொடுப்பதால் பாதுகாப்பு கிடைக்கும் என்கிற கருத்து அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட .புதுமை என்று அதை நினைத்து எடுத்துள்ளார்  இயக்குநர்.

இந்த ‘லைசென்ஸ்’ பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடித்துக் குரல் கொடுக்கிறது என்று இயக்குநர் தான் நினைத்த கருத்தை மலிவான திரை மொழியில் கூறியுள்ளார் அந்த வகையில் அவருக்கு வெற்றி.பெண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.