விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: கலைப்புலி எஸ்.தாணு

kalaipuli_S_thanu_Tசெங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படத்தை திரையிட முடியாததற்காக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘தெறி’  படம் செங்கல்பட்டு ஏரியா தவிர்த்து அனைத்து ஏரியாக்களிலும் வெளியாகி ஓடுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட முடியாததற்கு பல்வேறு தரப்பில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ‘தெறி’ படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் திரையிட முடியாததற்கான காரணத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ”செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தனிப்பட்ட விரோதம் காரணமாக பெரிய நடிகர்களின் படங்களை தடுக்க நினைக்கிறார். விஜய் மீது உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே ‘தெறி’ படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

செங்கல்பட்டு ஏரியாவில் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்க மறுத்தார்கள். 10 சதவீதம்கூட தராமல் படத்தை கொடுத்தால் பல கோடிகள் செலவழித்து படமெடுக்கும் தயாரிப்பாளரின் பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனாலேயே அவர்களுக்கு படம் கொடுக்க இயலவில்லை.

இருப்பினும், ‘தெறி’ திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை வாரிக் குவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. விநியோகஸ்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இரண்டு படத்திற்கு உண்டான வசூலை ஒரே படத்தில் பெற்றிருப்பதாக வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படம் வெளியிட முடியாததால் அந்த பகுதியில் உள்ள திரையரங்குகள் நல்ல வசூலை இழந்துவிட்டன. அந்த பகுதியில் வாழும் விஜய் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அங்கு ‘தெறி’ வெளியாகாமல் போனதற்கு காரணம் நாங்கள் அல்ல. அந்த ஏரியா விநியோகஸ்தர்களே காரணம். இப்படத்தையும் அமீரையும் தொடர்புபடுத்தி  வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மையல்ல.  ”

இவ்வாறு தாணு  கூறினார்.