‘விரூபாக்ஷா’ விமர்சனம்

சாய் தரம் தேஜ் , சம்யுக்தா நடித்துள்ள படம் . கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். பி. வி .எஸ். என். பிரசாத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமாரின் சுகுமார் ரைட்டிங் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. தமிழில் ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.

ஒரு கிராமத்தில் மருத்துவம் கைவிட்ட பிறகு குழந்தையை மாந்திரீக வழியில் குணப்படுத்த நினைக்கிறார் ஒரு மருத்துவர். மருத்துவத்தை மாற்றி குணப்படுத்துவதற்காக மாந்திரீகத்தில் முயற்சி செய்கிறார்.அதை நரபலி முயற்சி என்று அந்தக் கிராமம் சந்தேகப் படுகிறது. அந்தக் கிராமத்தின் மூடநம்பிக்கையால் குழந்தைகள் இறப்புக்கு இவர்கள்தான் காரணம் சிகிச்சை செய்வதை தவறாக நினைத்து சந்தேகப்பட்டு அவரையும் அவரது மனைவியையும் மரத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்று விடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பலரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள்.அவளை நாயகன் காதலிக்கிறான். கிராமத்தைக் காப்பாற்ற அவளைக் கொன்றால் தான் மீள முடியும் என்று அந்தக் கிராமம் நம்புகிறது. அவளைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்க முயல்கிறார்கள். அவள் எழுச்சி கொண்டு எழுகிறாள். அவளுக்குள் அமானுஷ்ய சக்தி புகுந்து ஆட்டி வைக்கிறது. அவள் யார்? அவள் காதல் என்ன ஆனது? முடிவு என்ன என்பதுதான் கதை.

21 ஆம் நூற்றாண்டுகாலத்தில் இப்படி ஒரு அமானுஷ்யம் சார்ந்த கதையை உருவாக்க ஒரு துணிவு வேண்டும். தொழில்நுட்பங்களின் பலத்தைக் கொண்டு மிரட்டலாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு.

அமானுஷ்யம் சார்ந்த கதையை அது சார்ந்த பின்புலங்களோடு மிக நேர்த்தியாக எடுத்துள்ளார்கள்.கிராம மக்களின் நம்பிக்கை ,பக்தி, அவர்களது வழிபாடு ,மந்திரம், வேள்வி, மாந்திரீகம், வேத புத்தகம்,அதர்வண வேதம்,தோஷங்கள், பரிகாரங்கள் ,அகோரிகள்,அஷ்டதிக் பந்தனம் போன்றவற்றை வைத்துக் கதை பின்னி இருக்கிறார்கள். அப்பாதையில் ஒளிப்பதிவும் இசையும் கைகோர்த்து பயமுறுத்துகின்றன.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பலத்துடன் நம்மை மிரட்டுகிற ஒரு ஒரு அமானுஷ்ய படமாக இந்த விருபாக்ஷா விளங்குகிறது.
படத்தின் நாயகன் சாய் தரம் தேஜ் என்றாலும் நாயகி சம்யுக்தாவிற்குத் தான் படத்தில் பிரதான வேடமென்று கூறலாம். அந்த அளவிற்கு நாயகி சார்ந்த படத்தை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக நாயகனைப் பாராட்டலாம். தேஜும் காதலிக்கிறார், சண்டைகள் செய்கிறார், பரிதவிக்கிறார், சாகசங்கள் செய்கிறார்.நாயகி சம்யுக்தா ‘வாத்தி’ படத்தில் பார்த்த அவரா என்று நினைக்கும் அளவிற்கு இதில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். தோற்றத்தில், பளிச்சிடுகிறார்.தீய சக்தி அவருக்குள் புகுந்த பிறகு அவர் ஆடும் ஆட்டம் அதகளம். இப்படி நடிப்பிலும் மனதில் அழுத்தமாகப் பதிக்கிறார்.

இவர்கள் தவிர சுனில், பிரம்மாஜி, ராஜீவ் கனகலா, அஜய், ரவி கிருஷ்ணா என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கதை மாந்தர்களாகவே தெரிகிறார்கள். நடிகர்களாகத் தெரியவில்லை என்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் சம்தத் சைனுதீன் ,இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

வி.பிரபாகரின் வசனம் நேரடி தமிழ்ப் பட உணர்வைக் கொடுக்கிறது.

நம்மை மீறிய ஒரு சக்தி இயக்குகிறது ,நம்மால் அதை கணிக்கவும் முடியாது கட்டுப்படுத்த முடியாது அது நம்மை மீறிய இயக்கம் என்பனவற்றை நம்பினால் இந்தப் படத்தை ரசிக்கலாம்.

இப்படி எல்லாம் நடக்குமா? இது மூடநம்பிக்கை இல்லையா?. என்று கேள்வி கேட்டால் அவர்கள் படத்தில் ஒன்ற முடியாது.

படத்தின் உருவாக்கத்திலும் தொழில்நுட்ப நேர்த்தியிலும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். திகில் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.