‘விருமன் ‘ விமர்சனம்

சூர்யா நகரம் சார்ந்த கதைகளில் நடித்து புகழ் பெற்றார் .அவரது தம்பி கார்த்தி கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கான ஒரு சாம்ராஜத்தை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் ‘விருமன்’.

கதாநாயகன் வில்லன் என்கிற கதையின் போக்கு தாண்டி ,அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள முரண்பாடுகளையும் அதன் எதிர் துருவப் போக்குகளைச் சொல்கிற படம் தான் இந்த ‘விருமன்’.

ஒரு துருவத்தில் பெருமை.பணம், பதவி அந்தஸ்து கெளரவம்தான் முக்கியம் என்று கருதுகிற தந்தைக்கும், மறு துருவத்தில் அன்பும் பாசமும் நேசமும்தான் வாழ்க்கையின் அடிநாதம் என புரியவைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் முரண்பாட்டு மோதல் தான் படத்தின் கதை.

மகன்,தான் நினைத்த அன்பு வழியைத் தந்தைக்குப் புரிய வைத்தாரா என்பது தான் கதையின் உச்சம். குடும்பத்தைத் தாண்டி தந்தையின் போக்கு பிடிக்காமல் தந்தையைப் பிரிந்து மாமாவிடம் வளர்கிறான் விருமன்.

அப்பாவிடம் விருமனுக்கு ஆறாத கோபம் . இதனால் இருவரிடையே அவ்வப்போது முட்டல் மோதல்கள்.அப்பா பிரகாஷ் ராஜ் , மகன் விருமன்தான் கார்த்தி.

உறவுகளின் உன்னதத்தை உணர்த்த வேண்டும் என பல முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அந்த முயற்சிகள் பலித்ததா, அப்பா – மகனுக்குள் என்ன பிரச்சினை, இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

தொடை தெரியும்படி லுங்கியைக்கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை, குறுந் தாடியுடன், புஜபலம் காட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு
விருமனாக வீரியம் காட்டுகிறார் கார்த்தி.

கிராமத்துக்கு கதைகளுக்கான அவரின் பொருத்தம் கச்சிதம். ஆவேசத்தில் பொங்கி எழும்போதும் பாசத்தில் உருகும் போதும் மதிப்பெண்களை அள்ளுகிறார் கார்த்தி.

அறிமுக நாயகியான அதிதி நடனத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்.உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் தன்னை வெளிப்படுத்த இன்னும் அவர் பாடம் படிக்க வேண்டும்.

பணம், பதவி, கெளரவம் என்று அகந்தை சுமந்துகொண்டு திரியும் அப்பாவாக அசத்தியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

சூரி, சிங்கம் புலியின் மத்தாப்பு காமெடிகள் சிரிக்க வைக்கின்றன.

ராஜ்கிரண், கருணாஸ், ஆர்.கே.சுரேஷ் மூவரும் மண்ணின் மணத்துடன் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளனர்.

சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் சரண்யா பொன்வண்ணன். வடிவுக்கரசி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் தேவையான அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

படத்தை ஆரம்பிக்கும் போதே பளிச்சென்று நேரடியாகக் கதைக்குள் செல்லும் இயக்குநர் முத்தையா அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு செல்வதில் சிரமப்படுவதை உணர முடிகிறது.உறவின் உன்னதங்களைக் காட்டும் போது மேலும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம்.

படத்தில் வட்டார வழக்கில் இடம்பெறும் வசனங்கள், பழமொழிகள், சொலவடைகள் உரையாடலுக்கு ஆழத்தை அதிகரிக்கிறது.

பாடல்கள், படமாக்கப்பட்ட விதத்திலும் ரசிக்கவைக்கின்றன. யுவனின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, கிராமத்தை கூடுதல் அழகாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் இன்னும் அழுத்தம் கூட்டியிருந்தால் விருமன் மேலும் வீரியனாக மாறி இருப்பான்.

விருமன் கிராமத்து கார்த்தியின் இன்னொரு அவதாரம்.