கஸ்தூரி ராஜா, ஈஷா,மாளவிகா மனோஜ், தனஸ்ரீ ,அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார்,ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைஜென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் மீரா கதிரவன். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை: வி. எஸ். முகமத் அமீன், எடிட்டிங் : மதி வி. எஸ்., கலை இயக்கம்: அப்புன்னி சாஜன், தயாரிப்பு: நேசம் எண்டர்டெய்ன் மெண்ட், ஜி கே எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், ரோமியா பிக்சர்ஸ்
தென் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தக் கதை நிகழ்கிறது.முகமது யூசுப் என்ற பெயர் கொண்ட கஸ்தூரிராஜா கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக இருக்கிறார். கைத்தறி நெசவுத் தொழில் செய்து குடும்பத்தின் சக்கரம் சுழல்கிறது. ஆனாலும் பெரிதாக சுபிட்சம் இல்லை.தம்பி மனைவிக்கு இப்படியே பொருளாதார ஒடுங்கலுக்குள் குடித்தனம் செய்வது பிடிக்கவில்லை. எனவே தம்பி வெளிநாடு செல்கிறார்.
இச்சூழலில் கஸ்தூரி ராஜாவின் மகன் அபுதாஹிர் உடன்படிக்கும் நிலோபர் மீது காதல் கொள்கிறார். அந்தவசிப்பு சூழலில் காதலிப்பது அதை வெளியே சொல்வதெல்லாம் அவ்வளவு சாதாரணமல்ல. ஏனென்றால் கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அழுத்தம் காரணமாக அபுதாஹிர் வெளிநாடு சென்று பணத்தை சம்பாதித்து விட்டு வயதையும் தொலைத்து விட்டு வருகிறார். அவருக்கு வேறொரு இடத்தில்திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயம் செய்யப்பட்ட பர்வின் என்கிற அந்தப் பெண்ணிடம் அவர் கடந்த காலக் கதையை கூறுகிறார்.இப்படி செல்கிற 134.21 நிமிடங்கள் கொண்ட ‘ஹபீபி’ திரைப்படம் என்ன சொல்கிறது என்பதுதான் மீதிக் கதை.
படத்தில் இயக்குநர் கஸ்தூரிராஜா முஹம்மது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்தப் பாத்திரமாக மாறி இருக்கிறார். மிகையில்லாத இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரிடம் உள்ள நடிகரை கண்டெடுத்த மீரா கதிரவனைப் பாராட்டலாம்.
அதேபோல் அவரது மகன் சையத் அபுதாகிராக நடித்திருக்கும் ஈஷா தோற்றத்திலும் நடிப்பிலும் புது முகமாக இருந்தாலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். நிலோபர் நிஷாவாக வரும் மாளவிகா மனோஜ் விழி அசைவுகளில் மொழிபேசி கவர்ந்து விடுகிறார். அவரது அழகும் பேசும் கண்களும் பாத்திரத்திற்கு பெரிதும் பலமாக இருக்கின்றன .அவர் பேசவே இல்லை கண்களே பேச வேண்டியதைப் பேசி விடுகிறது. தனஸ்ரீ அழகு மட்டுமல்ல அறிவிலும் சிறந்து விளங்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார். கஸ்தூரிராஜா தம்பி மனைவி சாலிஹா பீவியாக வரும் அனுஸ்ரேயா ராஜன் அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பதிய வைக்கிறார். மேலும் மம்மது பாத்திரத்தில் வரும் ஜெயஸ்ரீ பினுராஜ், ஷேக் உதுமானாக வரும் அருள்குமார், ராபியாவாக வரும் ரேகா குமணன் போன்றவர்களும் நினைவில் நிற்கிறார்கள்.அது மட்டுமல்ல
நிலோபர் அம்மாவாக வரும் மலர் கைஜென், பர்வினின் தந்தையாக வரும் சன் சாகுல் போன்று குழந்தை நட்சத்திரமாக வரும் மாஸ்டர் திகான் , தீக்ஷாஸ்ரீ போன்றவர்களும் படம் பார்ப்பவர்கள் மனதில் பெயர்களை மறந்து பதிவார்கள். 
இஸ்லாமியச் சமூகத்தின் பின்புலத்தில் அந்த பண்பாட்டுச் சூழலைச் சரியாகத் திரையில் கொண்டு வர வேண்டும் என்று சமரசம் இல்லாமல் இந்தக்கதையை எழுதி திரைக்கதை அமைத்துக் காட்சிகளை உருவாக்கி இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன் .அதுவே ஒரு புதிய திரை அனுபவமாக படம் பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது. எனவே செயற்கையான திருப்பங்கள் இல்லாமல் அதன் போக்கில் கதையை நகர்த்தி அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.
சாம் சி எஸ் அந்தக் காலகட்டத்திற்கும் பண்பாட்டு சூழலுக்கும் ஏற்ற இசையை வழங்கியுள்ளார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சினிமாவின் ஜோடனைகள் இன்றி எதார்த்தமான காட்சிகளைக் கண் முன்னே நிறுத்துகிறது.
இந்தப் படத்தின் கதையில் அன்பு ,பாசம், அவமானம், இழப்பு ,வலி, காதல் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் கொண்ட காட்சிகள் உள்ளன. நிச்சயம் படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் காட்சிகளும் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் செல்ல வேண்டும்.
குறிப்பாக இஸ்லாமிய பின்புல வாழ்வியலை முழுமையாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர்.இதுவரை இஸ்லாமிய மக்கள் வாழ்க்கையை அவர்களது பண்பாட்டை அவர்களது வழக்காறுகளை ஒழுங்குகளை பழக்க வழக்கங்களை ஏதோ ஒரு சில நிமிடக் காட்சிகளாகவே திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் .அவற்றை ஒரு முழு நீளப் படத்தில் காண்கிற வாய்ப்பை வழங்கியுள்ளார் இயக்குநர்.
அவ்வகையில் இப்படம் வேறொரு பின்புலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது .அந்த அனுபவத்தைப் படம் பார்ப்பவர்களை உணர வைக்கிற முயற்சியை வரவேற்றுப் பாராட்டலாம்.
பொதுவாக வணிக சினிமாவில் உள்ள செயற்கையான சண்டைக் காட்சிகள் அருவருப்பான வசனங்கள் ஆபாச நகைச்சுவைகள் போன்ற எதுவும் இல்லாமல் நாகரிகமான முறையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.


