ஒரே ஒரு சூரியன் தான்..ஒரேயொரு இளையராஜாதான்..!இளையராஜா கம்பீரப் பேச்சு!

‘இசைஞானி’ இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் ‘காதல் செய்’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடைபெற்றது.

கன்னடத்திலும் தமிழிலும் சில படங்கள் இயக்கிய கே.கணேசன் இந்த ‘காதல் செய் ‘ படத்தை எழுதி இயக்கியுள்ளார்.இவர்  ‘போர்க்களத்தில் ஒரு பூ‘  என்ற படத்தை இயக்கி ஏற்கெனவே கவனம் பெற்றவர். பிரபாகரன் மூவி சார்பில்
கான வினோதன் மற்றும் குப்பன் கணேசன் தயாரித்துள்ளனர் .

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ.சி. மகேந்திரன் இவர் கனடாவைச் சேர்ந்தவர். கலை இயக்கம் ஜான்பீட்டர்.

காதல் செய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘இசைஞானி’ இளையராஜா பேசும்போது, “நிகழ்கால பாரதிராஜாக்களே.. நிகழ்கால பி.வாசுக்களே.. நிகழ்கால இளையராஜாக்களே.. என்கிறீர்கள்.அது எப்படிய்யா ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் வருவாருன்னு எதிர்பார்க்குறீங்க.. அப்படியெல்லாம் வரவே முடியாது.. சூரியன் ஒன்றுதான். ஒரேயொருத்தர்தான். ஒரேயொரு பாரதிராஜாதான்.. ஒரேயொரு இளையராஜாதான்.

எவ்வளவு செல்வத்தோடு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தெளிவான அறிவோடு இருப்பவர் என்பவர் வேறு.
அதனால்தான் ’திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு’
என்றார் வள்ளுவர்.இது எல்லாருக்கும் பொருந்தும். இந்தப் படத்தைக் கஷ்டப்பட்டு தயாரிச்சிருக்காங்கன்னு சொன்னாங்க. கஷ்டப்படாமல் எதையும் செய்ய முடியாதுதான். படத்தைத்தான் கஷ்டப்பட்டுத் தயாரிக்கணும். படத்தைத்தான் கஷ்டப்பட்டு பார்க்கக் கூடாது. அப்படியொரு சூழலை உருவாக்கக் கூடாது.

இந்தப் படத்துல காதல் செய்யச் சொல்லியிருக்காங்க. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு காதலை செய்யச் வைச்சிருக்கேன். ‘16 வயதினிலே’ படத்தோட பாடல் வெளியீட்டு விழால இத்தனை கேமிராக்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு இத்தனை கேமிராக்களோடு நிறைய செய்தியாளர்கள் வந்திருக்கீங்க.. இங்கே வந்ததுக்கு அனைவருக்கும் நன்றி.. இந்தப் படம் ஜெயிக்கணும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது தனக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பைப் பற்றி பெருமைப்பட்டு இளையராஜாவை புகழ்ந்து பேசினார்.

இயக்குநர் பி.வாசு பேசும்போது இளையராஜாவின் பின்னணி இசை சேர்ப்புப் பணிகளை நினைவுகூர்ந்தார்.