‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்

ராம்சரண், ஜான்வி கபூர்,சிவராஜ் குமார்,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா,
ஸ்ருதிஹாசன்,விஜி சந்திரசேகர்,
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.
ஒளிப்பதிவு: ஆர்.ரத்னவேல், ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு: நவீன் நூலி.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங் நிறுவனங்கள் வழங்க
விருத்தி சினிமாஸ் சார்பில்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார்.

இந்தியா எவ்வளவு அறிவில் முன்னேற்றம் அடைந்தாலும் இன்னமும் குறைந்தபட்ச வசதி கூடத் தொட்டு விடாத கிராமங்கள் உள்ளன. இந்திய வரைபடத்தில் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு யாருக்கும் தெரியாமல் எந்த முன்னேற்றமும் வசதிகளும் இல்லாத மலைக் கிராமங்கள் பல உள்ளன.

இப்படி எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு கிராமத்திலிருந்து அங்கு வாழும் மக்களின் ஆதங்கத்தை, குமுறலை வெளிப்படுத்தும் ஒரு வாலிபனின் குரல் தான் இந்த ‘பெத்தி’ திரைப்படம்.அந்த ஊரை அடையாளப்படுத்த அவனது அபரிமிதமான ஆற்றலையும் திறமையையும் தியாகத்தையும் வெளிப்படுத்துவது தான் இந்தக் கதை.

ஒலிம்பிக்கில் இந்தியா 67வது இடம்பெற்று பதக்கப் பட்டியலில் மிகவும் கீழான நிலையில் உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் அதிகாரிகளிடம் 130 கோடி பேர் உள்ள இந்தியாவின் பதக்கப் பட்டியல் கேவலமாக இருக்கிறது என்று திட்டுகிறார் .கிராமத்திலிருந்து சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அனைவரிடமும் ஏதாவது செய்ய வேண்டும் இல்லையேல் அந்தத் துறையையே மூட வேண்டியது தான் என்று எச்சரிக்கிறார்.
அப்படி தேடலில் ஈடுபடும் ஓர் அதிகாரி ஆந்திரப் பிரதேசம் வருகிறார் .ஒரு கிராமத்துக்கு வந்தவர் அங்கே பெத்தியைப்பற்றிக் கேள்விப்படுகிறார். அங்கே இளைஞர்கள் மத்தியில் பெத்தி ஒரு கதாநாயகனைப் போல கொண்டாடப்படுகிறான். அவனுக்கு ஒரு சிலையையே வைத்திருக்கிறார்கள். அனைவரும் பெத்தியை ஒரு உதாரண புருஷராக வழிகாட்டியாக கதாநாயகனாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் அந்த பெத்தி என்று கேட்கிறார் அதிகாரி. ஒரு கிராமத்து மனிதர் பெத்தியைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார்.அப்படித்தான் இந்தப் படத்தின் கதை விரிகிறது.

அந்தக் கிராமத்தில் மட்டும் ரயில் நின்றால் அந்த ஊருக்குப் போக்குவரத்து வசதிகள் வந்து இந்த உலகத்தில் இல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் பயன் கிடைக்கும் என்று போராடுகிறார்கள். அதில் ஒருவன் உயிரை விடுகிறான்.

அந்த ஊரில் வாழும் பெத்தி என்கிற இளைஞன் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறான் .யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக அணியில் சேர்ந்து ஆடி வெற்றி பெற வைப்பான் .இப்படி ஒரு ‘ஆட்டக் கூலி’யாக இருக்கிறான்.அப்படிப்பட்டவனைக் குத்துச்சண்டையில் பயிற்சி அளித்து பெரிய மல்யுத்த வீரனாக்குகிறார் ஒரு ,குரு கௌர் நாயுடு .உள்ளூரில் வெற்றி பெற்று பல்வேறு படிநிலைகளைக் கடந்து தேசிய அளவில் செல்கிறான்.அரையிறுதியிலும் வெற்றி பெறுகிறான் இறுதிச்சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு எதிர்பாராத வகையில் அவனுக்கு ஒரு பெரிய தடை வருகிறது.அதை அவன் எதிர்கொண்டானா? அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறது ? அவன் ஊரை அடையாளப்படுத்தும் முயற்சியில் அவன் வெற்றி பெற்றானா என்பதைக் கூறுவதே 189.00 நிமிடங்கள் கொண்ட பெத்தி படத்தின் மீதிக் கதை.

அந்த மலையூர் கிராமத்து வாலிபன் பெத்தியாக ராம் சரண் நடித்துள்ளார் .அந்த மலையடிவார மண்ணின் மனிதராகவே அவர் மாறி இருக்கிறார். கிராமிய அடித்தட்டு மக்களுக்குள்ள பண்பாட்டை கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அந்தப் பாத்திரத்தில் அவர் அச்சு அசலாகப் பொருந்தி இருக்கிறார்.
அவருக்கு நேரும்
புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வாலிபனாக அந்த ஊருக்காகப் போராடும் பாத்திரத்தில் வருகிறார். வீராவேசமான வசனங்கள் இல்லாமல் அந்தப் பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்துள்ளார் ராம் சரண்.தான் புறக்கணிக்கப்படும் போது வலிகளைத் தாங்கும் போதும் சண்டைக் காட்சிகளில் வீராவேசமாக சண்டை போடும் போதும் அவர் அசத்தி இருக்கிறார்.குறிப்பாக மல்யுத்தக் காட்சிகளில் அவரது அயராத உழைப்பு தெரிகிறது.அந்த பாத்திரத்தோடு கரைந்து வெளிப்பட்டு நடிப்பில்
அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

அவரது காதலி அச்சம்மா வாக வருகிறார் ஜான்வி கபூர். தோற்றத்திலும் துறுதுறுப்பான நடிப்பிலும் ஈர்க்கிறார்.குறைந்த அளவிலான காட்சிகளில் வந்தாலும் அவர் படம் முழுக்க இருக்கும் உணர்வைத் தருகிறது.

பெத்தியின் குஸ்தி வாத்தியார் கௌர் நாயுடாக சிவராஜ்குமார் அடர்த்தியான பாத்திரத்தில் வந்து அசத்தியுள்ளார்.அவரது பாத்திரம் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. பெத்தியின் தாயாராக விஜி சந்திரசேகர் நடித்துள்ளார்.அவர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தத் தவறவில்லை.
ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு வந்து ஆடுகிறார்.

படத்தில் வரும் ரயில் நிற்பதற்கு உயிர் விடும் அப்பலசூரியாக ஜெகபதிபாபு குறைந்த காட்சிகளில் வந்தாலும் படம் பார்ப்பவர்களின் மனதில் நிறைந்து விடுகிறார்.

படத்தில் வீரபத்திரன் பாத்திரத்தில் வருபவர், பெத்தியின் ஊருக்கு வரும் அந்த அதிகாரி, பெத்தியிடம் சவால் விடும் பஞ்சாப் மல்யுத்த குரு எனப் படத்தில் வரும் பிற பாத்திரங்கள் அனைத்துமே ஏதோ அந்த ஊரில் வாழ்கிற பாத்திரங்கள் போன்றே தோன்றுகின்றன. ஒரு நடிகர் நடித்ததாகவே தோன்றவில்லை.

ரத்தினவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகக் கண்களை நிறைக்கின்றன. கண் முன் வாழும் ஒரு வரலாற்றைப் படமாகப் பார்த்த உணர்வைத் தருகிறது அவரது ஒளிப்பதிவு.குறிப்பாக மல்யுத்த வீரர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளில் சுழன்று சுழன்று படமாக்கி உள்ளது அவரது கேமரா.

முதிர்ச்சியான பின்னணி இசை மூலம் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும் பின்னணி இசையில் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் ஏராளமான மக்களைப் பின்புலமாக வைத்து காட்சிகளைப் பிரம்மாண்டமாக மாற்றி உள்ளார் இயக்குநர் புச்சி பாபு சனா.
முதல் பாதியில் எதிர்கொள்ளும் சிற்சில அலுப்புகளை இரண்டாம் பாதியில் இறுக்கிப்பிடித்துப் பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் குவியவைத்து கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குநர்.உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்லும் காட்சிகள் உணர்ச்சி பிரவாகமாக உள்ளன.

ஒரு தனி மனிதன் கதையாக சொல்ல நினைத்து ஒரு சமூகத்தின் அவலத்தைப் படமாக்கித் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி உள்ளார் இயக்குநர்.ஒரு வணிக சினிமாவாக ஒரு குறிப்பிட்ட கதாநாயகனின் ஹீரோயிசத்தை உயர்த்திப் பிடிக்காமல் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கிறது இந்தப் படம்.இந்த படத்தில் ஒலிப்பது ஒரு தனி மனிதனின் குரல் அல்ல புறக்கணிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக ஒலிக்கிறது அந்தக்குரல்.

மொத்தத்தில் பிரம்மாண்டத்தாலும் ராம் சரணின் அர்ப்பணிப்பாலும் இயக்குநரின் திரைக்கதையாலும் ஒளிப்பதிவு, இசைக் கலவையாலும் ஒரு வணிகரீதியான படம் என்பதைத் தாண்டி ஒரு சமூக சிந்தனை வெளிப்படுத்தும் படமாகவும் இது மாறி இருக்கிறது.

மொத்தத்தில் ‘பெத்தி’ வெற்றி!