அர்ஜுன் தாஸ் ,சஞ்சனா நடராஜன்,ஜாரா வினீத் சந்தோக்,ஸ்ரிஷ்டி Y,நீரவ் , அனுபமா குமார்,அர்ச்சனா சந்தோக்,கார்த்திக் குமார் ,ரஞ்சன், படவா கோபி நடித்துள்ளனர்.மதுமிதா எழுதி இயக்கியிருக்கிறார்.கதை மற்றும் திரைக்கதை: மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே ,இசை: முஜீப் மஜீத்,ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன் ,படத்தொகுப்பு: விஜய் வெங்கடரமணன். பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா தயாரித்துள்ளனர்.
அர்ஜுன் தாஸ் அவரது தந்தை படவா கோபியால் உதாசீனப்படுத்தப்பட்டு தீனி கொள்ளி , சாப்பாட்டு ராமன் எதற்கும் லாயக்கில்லை என்று மட்டம் தட்டப்பட்டு வளர்க்கப்படுகிறார். . அதனால் தந்தை மீது வெறுப்புடன் மன அழுத்தம் கொண்டு வளர்கிறார் .ஒரு கட்டத்தில் தந்தையைப் போல அர்ஜுன் தாஸ் போலீஸ்காரர் ஆகிவிடுகிறார்.
அர்ஜுன் தாஸ் கேரளாவில் வேலை பார்க்கிறார்.அவரது கண்ணெதிரே ஒரு கார் ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.அதில் ஒரு சிறுவன் அநியாயமாக இறக்கிறான். ஆனால் காவல்துறை அதனை ஒரு சாதாரண விபத்து என்று கோப்புகளை மூடப் பார்க்கிறது. ஆனால் அர்ஜுன்தாசின் உள்ளுணர்வு அதன் பின்னே ஏதோ இருக்கிறது என்று சொல்கிறது .தனது மனதிற்குள் பறந்த சந்தேகப் பொறியை ஊதி ஊதி அவர் புலனாய்வில் இறங்குகிறார்.அந்தப் பாதையில் அவருக்கு புறக்கணிப்புகளும் தோல்விகளும் கிடைக்கின்றன.அப்போதெல்லாம் அவரது தந்தை கூறிய இழிவு வார்த்தைகள் அவரது காதுகளுக்குள் ஒலிக்கின்றன. ஆனால் அவர் விடவில்லை. இருந்தாலும் அவர் விடாமுயற்சியோடு விசாரணையைத் தொடர்கிறார். முடிவில் பல அதிர்ச்சிகரமான நம்ப முடியாத உண்மைகள் அவிழ ஆரம்பிக்கின்றன அது என்ன என்பதுதான் ஜான் டோ படத்தின் மீதிக்கதை .
ஜான் டோ என்பது ஒருவரது பெயர் அல்ல, அடையாளம் தெரியாத ஒரு நபரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சங்கேதம் போன்ற ஒரு தற்காலிகப் பெயராகும்.அப்படி அடையாளம் தெரியாமல் இறந்த சிறுவன் பற்றிய விசாரணைப் பயணத்தில் ஒரு மன நோயாளி கொலைகாரன் சிக்குகிறான்.அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்பது வேறொரு கதையாக விரிகிறது.
முதல் முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது கம்பீரக் குரலிலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார்.தனது தந்தையால் உதாசீனப்படுத்தப்பட்ட அவர், குற்றவாளிகளை விசாரணையின் போது அடித்துத் துன்புறுத்துவதைப் பிடிக்காதவராக இருக்கிறார்.அவர்கள் மனதை நெருங்கி உண்மையை வரவழைக்க முயற்சி செய்கிறார் .அதில் வெற்றியும் பெறுகிறார்.தோற்றம் உடல் மொழி மிக நன்றாக இருந்தாலும் அர்ஜுன் தாஸ் குரலை இருட்டடிப்பு செய்யும் வகையில் சில வசனங்கள் புரியாமல் உள்ளன.
தமிழகக் காவல்துறையில் அகங்காரம் மிக்க ஆய்வாளராக ராவ் பாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன், செருக்கான குணத்தோடு துடிப்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் -ராவ் என இரண்டு காக்கிகளுக்குள் மோதலில் வளர்கிறது ஒரு காதல்.
லக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாரா வினீத் சந்தோக், ஹ்ரிதய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் நீரவ்.எஸ், சிறுவர்களின் அம்மாவாக வரும் ஸ்ரிஷ்டி.ஒய், அர்ஜுன் தாஸின் இளம் வயது அம்மாவாக வரும் விஜே அர்ச்சனா, தந்தையாக வரும் படவா கோபி, மருத்துவர் ரஞ்சன் கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றி வெளிப்பட்டு உள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் இயற்கை எழில் சூழ்ந்த கேரளத்தின் வனப்பைப் பின்புலமாக காட்டி ஒரு பரபரப்பான கதையை அதன் பாத்திரங்களைப் பார்வையாளர்கள் மனதில் கடத்தியுள்ளார்.முஜீப் மஜீத் இசை மற்றும் தி ஆர்டிஸ்ட் 404-ன் கூடுதல் இசை வழக்கமான டெசிபல் மிக்க ஓசையாக இல்லாமல் அளவான இசையோடு அச்சமூட்டுகிறது.
படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் சைக்கோ கிரைம் திரில்லர் படத்தை அதன் தன்மை மாறாமல் தொகுத்துள்ளார்.
கதை, திரைக்கதை எழுதியிருக்கும் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே, சைக்கோ கொலையாளி பற்றிய கதையாக இருந்தாலும், அதை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு எளிமையான படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள்.அச்சமூட்டம் அனுபவங்கள் குழந்தைகளின் உள்ளத்தை எப்படி பாதிக்கும் என்பதையும் அந்த சிறுவன் பாத்திரத்தின் மூலம் காட்டியுள்ளார்கள்.காவல்துறையில் நடக்கும் ஈகோ மோதல்களையும் காட்சிகள் ஆக்கியுள்ளார் இயக்குநர்.
இயக்குநர் மதுமிதா, சைக்கோ கதைதான் என்றாலும், குரூரமான வன்முறை மன நோயாளிகள் செய்யும் அருவருப்பூட்டும் செயல்கள் என்ற பாதையில் செல்லாமல் நாகரிகமான பாதையில் சென்று இந்தப் படத்தை வழங்கி உள்ளார்.திரைக்கதைக்கான நகர்வுகளில் அவர் சாதுர்யமாகச் செயல்பட்டுள்ளார்.
வன்முறை அருவருப்பு இல்லாமல் இந்த சைக்கோ திரில்லர் படத்தை உருவாக்கி வழங்கி உள்ள இயக்குநரைப் பாராட்டலாம்..
மொத்தத்தில், ‘ஜான் டோ’ அனைத்து தரப்பினரையும் கவரும் சைக்கோ திரில்லர் படம் என்று கூறலாம்


