‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விமர்சனம்

நயன்தாரா ,ரெஜினா கசாண்ட்ரா ,துனியா விஜய், யோகி பாபு ,ஊர்வசி ,சுனில் , ராஜ்கபூர், சிங்கம்புலி, இனியா,நந்தினி மைனா, அபிநயா, ஒய். ஜி. மகேந்திரன்,பழ கருப்பையா, சினேகா , குஷ்பூ, விச்சு விஸ்வநாத் ,நிதின் சத்யா,கருடா ராம் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கியுள்ளார்.கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் .ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. 144 நிமிடங்கள் கொண்டது இந்தப் படம்.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இதற்கும் கதைப்படி எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு புதிய கதையாக உருவாகி இருக்கிறது.

நயன்தாரா சென்னையில் ஒரு போலீஸ்காரராக வேலை பார்க்கிறார்.அவருக்குள் மயிலாஞ்சி கிராமத்தின் தேவதையான மூக்குத்தி அம்மன் அருள் இருப்பது அவருக்கே தெரியாது.
அந்த மூக்குத்தி அம்மனுக்கு தீய சக்தி சாத்தானின் ஆதிக்கம் பெற்றுள்ள ரெஜினா மற்றும் ரெஜினாவின் கணவர் துனியா விஜய்க்கும் இடையில் 2000 ஆண்டு காலத்துப் பகை உள்ளது. அந்தப் பகை தீர்க்கப்படாமலேயே உள்ளது.தங்களுக்கான அந்தக் காலத்திற்காகக் காத்திருக்கும் அவர்கள் ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேர்க் கோட்டில் சந்திக்கும் போது மீண்டும் மோதுகிறார்கள் .முடிவு என்ன என்பதுதான் கிராபிக்ஸ் அசத்தல்களும் திரைக்கதை பரபரப்புகளும் கண்களை மிரள வைக்கும் காட்சிகளும் கொண்ட இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ மகாசக்தி படத்தின் மீதிக் கதை.

ஊர்வசியின் மகளான நயன்தாராவிற்கு கெட்ட கெட்ட கனவுகள் வருகின்றன. அதில் தன் முன்னே மாயக் குதிரைகள் ஓடுவதாகச் சொல்கிறார். கண் திறந்து பார்த்தாலும் அந்த காட்சிகள் தெரிவது போல் ஒரு பிரமை. இதை இவர்கள் வணங்கும் கிராம தேவதை மூக்குத்தி அம்மன் உள்ள மயிலாஞ்சி கிராமத்திற்குப் போனால் சரியாகிவிடும் என்று பலரும் சொல்கிறார்கள்.

நரபலி கொடுக்கும் மந்திரவாதி கருடா ராம் இடமிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றுகிறார் நயன்தாரா.அந்த மயிலாஞ்சி கிராமத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டும் செல்கிறார். அங்கே இன்னொரு மந்திரவாதி சுனில் ,ஜீவசமாதி ஆன ரெஜினாவுக்கு உயிர் கொடுக்கிறார்.அந்த ரெஜினாவும்  அரசியல்வாதி மகனாக இருக்கும் ரெஜினாவின் போன பிறவிக் கணவர் துனியா விஜய்யும்  சேர்ந்து கொண்டு நயன்தாராவை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். அதன் மூலம் உலகையே ஆளும் சக்தியை அடைய முடியும் என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில் காணாமல் போன மூக்குத்தி அம்மன் கோயிலைப் புதுப்பிக்கிறார்கள். அங்கு தெய்வத்திற்காக காத்திருக்கிறார்கள். மூக்குத்தி அம்மன் ரெஜினா மோதல் எப்படி முடிந்தது? என்பதை ஆன்மீகம், மாயாஜாலம் ,மந்திரம், பக்தி, உச்சாடனம், தீய சக்தி, நகைச்சுவை ,பாசம் போன்ற அனைத்தையும் கலந்து உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

இயக்குநர் சுந்தர் சி தன் படங்களில் வணிக அம்சங்கள் அனைத்தையும் கலந்து எப்படியாவது வெற்றிப் படமாக்கி விடுவார்.  குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எடுக்கும் அவர், இதில் தனது பட்ஜெட்டை விசாலப்படுத்தியிருக்கிறார்.அவர் எப்போதும் வணிக வெற்றியைக் குறி வைத்துப்படமெடுத்து இதுவரை வெற்றியைப் பெற்று வந்துள்ளார். அதற்கு அவரது ‘அரண்மனை’ வரிசைப் படங்களே உதாரணம். அந்த வரிசையில் இணைய நினைத்து தான் அதன் இரண்டாவது பாகத்தை எடுத்து இருக்கிறார்.

வெள்ளந்தி போலீஸ்காரராக வரும் நயன்தாரா தனக்கு சாமி வந்ததாகவும் மயக்கம் வருவதாகவும் கூறிப் பணி நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர் .ஆனால் இரவில் கெட்ட கனவுகளால் தூங்க முடியாமல் தவிக்கிறார்.அதற்கு மயிலாஞ்சி கிராமத்திற்குச் சென்றால்  தீர்வு கிடைக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். மயிலாஞ்சி கிராமத்திற்கு போன பிறகு கெட்ட சக்தி தெய்வ சக்தி இடையே நடக்கும் மோதல்கள் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.

நயன் தனக்குள்ள அம்மன் அருள் இருப்பது தெரியாமல் அவர் அஞ்சுவதும் பிறகு மாயங்கள் செய்வதும் என்று நடித்துள்ளார் .அவரது தோற்றம் அந்த பாத்திரத்திற்கும் அம்மன் உருவத்திற்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது.மூக்குத்தி
அம்மனாக நயன்தாரா மாறும் தருணம் படம் பார்ப்பவர்களை பரவசத்தில் சாமியாட வைக்கும் அளவிற்கு உள்ளது.நயன்தாராவுக்கும் அவரது தாயார் ஊர்வசிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் கலகலப்பு ரகம் .
குழந்தையைக் காப்பாற்றும் காட்சிகளும் அதற்கு உயிர் கொடுக்கும் காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைக்கும். பாம்பு படிக்கட்டுகள் சிங்கம் தோன்றும் காட்சிகள், ஆகாயத்தில் வரும் மேகங்களின் கரும் புகை நடனம் ரகளையாக உள்ளன.

நயன்தாராவின் தயாராக வரும் ஊர்வசி தனது பாணியில் சிரிக்க வைக்கிறார்.

ரெஜினா கசாண்ட்ரா சாத்தானின் அருள் பெற்ற எதிர்மறைப் பாத்திரத்தில் வந்து படம் முழுக்க அடித்து ஆடி உள்ளார் .அவரது  ஒப்பனை, முடி அலங்காரம் ,தலையில் உள்ள கிரீடம் போன்றவை வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்துள்ளன.அவரது கணவராக ஆஜானுபாகுவாக புஜபலம் காட்டும் துனியா விஜய் கம்பீரத்தால் மிரட்டுகிறார் .அவரது வில்லத்தனம் செயற்கையாக இருந்தாலும் வணிகத்தனமாக உள்ளது.
இனியா ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக வந்து ஒரு குழந்தையைப் பெற்று விட்டு சில காட்சிகளோடு சென்று விடுகிறார்.
தெலுங்கு வில்லன்களை நினைவூட்டும் வகையில் கருடா ராம் வந்து அச்சமூட்டுகிறார் .சுனிலின வில்லத்தனம் இதில் செல்லுபடியாகவில்லை.
பண்ணையாராக யோகிபாபு வருகிறார், சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். குஷ்பூ சினேகா இருவரும் வந்து ஆடும் நடனம் இதில் உண்டு. அவர்களின் ஆட்டம் பக்தர்களை ஆவேசப்படுத்தும்.சுந்தர் சி படத்தில் வழக்கமாக இருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் இதில் குறைவுதான் .பிரம்மாண்டம் மாயாஜாலக் காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் நகைச்சுவைக் காட்சிகள் குறைந்துவிட்டன.

படத்தின் முதல் பாதியில் கதை அங்குமிங்கும் தாவிச்சென்றாலும் இரண்டாவது பாதியில்  கிராஃபிக்ஸ் அசத்தல்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. அம்மன் ஊருக்கு வரும்போது அழகழகான கோபுர சிற்பங்கள் வரவேற்பது போன்ற காட்சிகள் பார்ப்பதற்கு அழகுடன் மிரட்டலான தொழில்நுட்ப சாகசங்களாகவும் உள்ளன.

எல்லாக் குறைகளையும் இறுதியில் வரும் அரை மணி நேர உச்சகட்ட காட்சிகள் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு அனைத்துக் குறைகளை மறந்து ரசிக்க வைக்கின்றன.

படத்தின் பிரதானமாக நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தை நம்பி இந்தக் கதையை எழுதியிருக்கிறார் சுந்தர் சி .அவருக்கு நிகராக மற்ற தொழில்நுட்ப அம்சங்களை இன்னொரு பக்கம் நம்பியிருக்கிறார்.வழக்கமாக அவர் படங்களில் வரும் நகைச்சுவைகள் சின்ன சின்ன திருப்பங்கள் சுவாரசியங்கள் குறைவாக இருந்தாலும் அதை அனைத்தையும் பிரம்மாண்ட காட்சிகளை மூலம் ஈடு செய்திருக்கிறார்.

நயன்தாரா விசிறிகளுக்கு மட்டுமல்ல பக்திப் பட ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.